
கதைகளிலும் கற்பனைகளிலும் கிறிஸ்துமஸ் தாத்தாவின் பனிச்சறுக்கு வண்டியை இழுத்து வரும் ‘கரிபூ’ என்று அழைக்கப்படும் ஆர்டிக் கலைமான்கள், 2100ம் ஆண்டிற்குள் வட அமெரிக்காவில் முற்றிலும் அழிந்து விடும் என்று ஆய்வு ஒன்று எச்சரித்துள்ளது. ஐரோப்பாவில் ரெயின்டீர் என்று அழைக்கப்படும் இந்த கலைமான்கள், அழகிய கொம்புகளுடன், பார்ப்பவரை கவரும் வண்ணம் அழகாக இருக்கும்.
வன விலங்கான இந்த மானை ஒருசிலர் வீடுகளிலும் வளர்த்து வருகின்றனர். இவை வட அமெரிக்கா, ஆர்க்டிக் டன்ட்ரா, பின்லாந்து மற்றும் சைபீரியாவின் வனப்பகுதியில் வசித்து வருகின்றன. சராசரியாக ஒரு கலைமான் 5.5 அடி முதல் 6.5 அடி வரை உயரமாக வளரும். ஆப்பிரிக்க மான்களை விட சற்று உயரமும் எடையையும் அதிகம் கொண்டது. சில கலைமான்கள் 300 கிலோவுக்கும் அதிகமான எடையைக் கொண்டுள்ளன.
பொதுவாக, ஆண் கலைமான்களே அதிக உயரமும் எடையையும் கொண்டுள்ளன. இந்த மானைப் பற்றி ஒரு கட்டுக்கதை உண்டு. பெண் கலைமானிற்கு கொம்பு இருக்காது என்று சொல்லி இருப்பார்கள். அது உண்மையல்ல. பல பெண் மான்களுக்கு கொம்புகள் உண்டு, சில பெண் கலைமானுக்கு மட்டுமே கொம்புகள் வளர்வதில்லை. பனிப் பிரதேசத்தில் வளரும் கரிபூக்கள் தங்கள் கொம்புகளை , தங்கள் உணவான தாவரங்கள் மீது படர்ந்து இருக்கும் பனியை தள்ளி அகற்ற பயன்படுத்துகின்றன. ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் அல்லது டிசம்பர் மாதத்தில் இவற்றின் கொம்புகள் உதிர்ந்து புதிதாக முளைக்கும்.
கரிபூகள் முக்கியமாக ஓநாய் கூட்டங்களால் வேட்டையாடப்படுகின்றன. குறிப்பாக, குளிர்காலத்தில், அவை கன்று ஈனும் பருவத்தில் கன்றுகள் அதிகமாக வேட்டைக்கு பலியாகி உள்ளன. குறிப்பிடத்தக்க வகையில் தங்கக் கழுகுகள் மற்றும் கடல் கழுகுகள், வால்வரின்கள் மற்றும் கரடிகள் ஆகியவற்றாலும் வேட்டையாடப்படுகின்றன. இவற்றால் அழிவதை விட, காலநிலை மாற்றம் மிகப்பெரிய அளவில் ஒரு இனத்ம் அழியக் காரணமாக உள்ளது.
சிறப்பு வாய்ந்த கரிபூ இனம் காலநிலை மாற்றம் காரணமாக இந்த நூற்றாண்டின் இறுதிக்குள் 80 சதவிகிதம் வரை அழிந்து விடும் என்று ஒரு புதிய ஆய்வு எச்சரித்துள்ளது. கிரீன் ஹவுஸ் வாயு வெளியேறுவதை பெரிய அளவில் குறைப்பதாலும், வனவிலங்குகளைப் பாதுகாக்க புதிய காலநிலை சட்டங்களை செயல்படுத்துவதன் மூலமாக அழியும் விலங்கான கலைமான்களைக் காப்பாற்ற முடியும் என்று ஆஸ்திரேலியாவின் அடிலெய்டு பல்கலைக்கழகம் மற்றும் கோபன்ஹேகன் பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்த சர்வதேச ஆராய்ச்சியாளர்கள் குழு ஆய்வில் தெரிவிக்கப்பட்டது.
இந்த ஆய்வில் ஆய்வாளர்கள் 21,000 ஆண்டுகள் பின்னோக்கிப் பார்த்து, கடந்த கால காலநிலை நிகழ்வுகளுக்கு கலைமான்கள் எவ்வாறு தாக்குப்பிடித்து வாழ்ந்தன, அவற்றால் மோசமான காலநிலையை சமாளித்து வாழ முடியுமா என்பதையும் ஆராய்ந்தனர். இதற்காக புதை படிவங்கள், பண்டைய கரிபூ டிஎன்ஏக்கள் மற்றும் கணினி மாதிரிகளைப் பயன்படுத்தினர். பின்னர் இவற்றை எதிர்கால கணிப்புகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தனர்.
அந்த ஆராய்ச்சியில் அதிர்ச்சியூட்டும் முடிவுகள் வந்தன. காலநிலை மாற்றம் விரைவாகி, வெப்பமயமாதல் அதிகரிப்பதால் கலைமான்களின் எண்ணிக்கையில் பெரும் சரிவு ஏற்பட்டுள்ளதாக நிபுணர்கள் கண்டறிந்துள்ளனர். வரும் தசாப்த காலத்தில், கடந்த காலங்களை விட காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இழப்புகள் அதிகமாக இருக்கும்.
ஆராய்ச்சியாளர்களின் அறிக்கைப்படி இந்த சரிவுகள் நீண்டகால சுற்றுச்சூழல் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடும், இது வட அமெரிக்காவிலும் யூரேசியாவிலும் கலைமான்களுக்கு பாதிப்பை மேலும் அதிகரிக்கும் என்று ஆராய்ச்சிக்கு இணைத் தலைமை தாங்கிய அடிலெய்டு பல்கலைக் கழகத்தின் சுற்றுச்சூழல் நிறுவனத்தின் துணை இயக்குநர் டேமியன் தெரிவித்துள்ளார்.