
நீர் சார்ந்து நிலத்தில் வாழும் உயிரினமான வாத்தலகி (Platypus) எனும் உயிரினம், ஆர்நிதொரிங்கிடே (Ornithorhynchidae) குடும்பத்தின் தற்போது வாழும் ஒரே உயிரினமாகும். ஆர்நிதொரிங்கஸ் அனாடினஸ் (Ornithorhynchus anatinus) என்ற இருசொற்பெயர் கொண்ட இவை பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்காகும். இதன் தலையின் முன்பகுதி வடிவம், வாத்து அலகு போன்று, தட்டையான, கிட்டத்தட்ட நகைச்சுவையான முகடாக இருக்கிறது. முன் தலை நுனி கொம்புப் பொருள் படிவு மூடிய அகன்ற அலகாக நீண்டு துருத்திருக்கும். இதன் காரணமாகவே, இதற்கு வாத்தலகி என்ற பெயர் வந்தது.
டாஸ்மேனியாவின் உயரமான பகுதி மற்றும் ஆஸ்திரேலிய ஆல்ப்ஸ் மலைகள் முதல் கடலுக்கு அருகிலுள்ள தாழ்வான பகுதிகள் வரையிலான நிலப்பரப்பில் காணப்படுகிறது. இங்குள்ள சிற்றாறுகளின் கரையோரமாக வசிக்கும் இவை, கரையில் வளை தோண்டி வசிக்கும். வளையிலிருந்து நீருக்குச் செல்லவும் ஒரு வாயில் இருக்கும்.
இந்த வளைக்கு உள்ளே அது கூடு கட்டித் தனது மயிரைப் பரப்பி அதில் வசிக்கும். பெரும்பகுதி நேரத்தை நீரிலேயேக் கழிக்கும். இங்கே நீரின் அடித்தரையில் படிந்துள்ள மெல்லுடலிகள், புழுக்கள், பூச்சிகள் ஆகியவற்றை பிடித்துத் தின்னும். அடித்தளத்தில் இரை தேடுவதற்கு அதன் தனிவகைப்பட்ட அலகு அதற்கு உதவுகிறது.
வாத்தலகி நடுத்தர அளவுள்ள விலங்காகும். வாலுடன் சேர்ந்து இதன் நீளம் சுமார் 43 செ.மீ முதல் 50 செ.மீ வரை இருக்கும். வாத்தலகியின் பாதங்களில் நீந்து சவ்வுகள் அமைந்துள்ளன. இவற்றைப் பயன்படுத்தி அது மிக நன்றாக நீந்தும். அகன்ற தட்டை வால் சுக்கானாக உதவுகிறது. வாத்தலகியின் கரும்பழுப்பு மயிர்கள் மிக அடர்த்தியானவை. ஆதலால், தண்ணீர் அதன் ஊடாக உட்புகுவதில்லை. அது கரையேறும் பொழுது, அதன் உடல் உலர்ந்திருக்கும். செவி மடல்கள் இவற்றிற்குக் கிடையாது. நீரில் மூழ்கும் போது அதன் செவித்துளைகள் அடைத்துக் கொள்கின்றன.
பாலூட்டிகளில் முட்டையிடும் ஒரே விலங்கினமாக எஞ்சியிருக்கும் வாத்தலகி ஏராளமாக இருந்தாலும், காடுகளில் அவற்றின் வாழ்க்கைச் சுழற்சி பற்றி மிகக் குறைவாகவே அறியப்படுகிறது. ஆண், பெண் வாத்தலகி பாலினங்கள் இனச்சேர்க்கையைத் தவிர ஒன்றையொன்று தவிர்க்கின்றன. மேலும் அவை குறைந்தது நான்கு வயது வரை இனச்சேர்க்கை செய்வதில்லை. இனப்பெருக்க காலத்தில் ஆண் விலங்குகள் பெரும்பாலும் சண்டையிடுகின்றன. காதல் உறவு மற்றும் குளிர்காலத்தின் பிற்பகுதியிலிருந்து வசந்த காலம் வரை நீரில் இனச்சேர்க்கை நடைபெறுகிறது.
பெண் வாத்தலகி கூட்டில் இரண்டு சிறு முட்டைகள் இட்டு அவற்றை அடைகாக்கும். முட்டைகளிலிருந்து வெளிவரும் குட்டிகள் ரோமம் அற்றவையாகவும், குருடாகவும் இருக்கும். தாய் வாத்தலகி அவற்றுக்குப் பால் ஊட்டும். வாத்தலகியின் பால் சுரப்பிகள் மற்றப் பாலூட்டிகளை விட எளியக் கட்டமைப்பு உள்ளவை. இவற்றுக்கு முலைக்காம்புகள் கிடையாது. எனவே, பாலூட்டும் போது தாய் பிராணி மல்லாந்து படுத்துக் கொள்ளும். குட்டிகள் அதன் வயிற்றின் மேல் ஏறி தங்கள் அலகுகளால் நசுக்கி பால் சுரக்கச் செய்து அதை நக்கிக் குடிக்கும். குட்டிகளை வளர்ப்பதில் ஆண் பறவைகள் எந்தப் பங்கையும் எடுப்பதில்லை.
ஆண்களும் பெண்களும் 12 முதல் 18 மாதங்களுக்குள் முழுமையாக வளர்ச்சியடைகின்றன. மேலும், அவை சுமார் 18 மாத வயதில் பாலியல் முதிர்ச்சியடைகின்றன. சிறிய பாலூட்டிகளில் அவை நீண்ட காலம் வாழ்கின்றன. சில ஆய்வுகளில், காடுகளில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக வாழவதாக கண்டறியப்பட்டுள்ளது. இதைச் சிறைப்பிடிக்கப்பட்ட நிலையில் கிட்டத்தட்ட 23 ஆண்டுகள் வரை உயிர் வாழ்ந்திருக்கின்ற்ன.
வாத்தலகிகளின் கைகளின் மணிக்கட்டுப் பகுதியில் ஒரு சிறிய கொடுக்கு இருக்கும். பொதுவாக, இரண்டு பாலினத்திலும் இவை காணப்பட்டாலும், ஆண் வாத்தலகிகள் மட்டுமே விசத்தைச் சுரக்கின்றன. இந்த விசங்கள் பல புரதங்களின் கலவையாக இருக்கிறது. சிறிய உயிரினங்களைக் கொல்ல வல்ல இந்த நஞ்சு மனிதனை மரணிக்கச் செய்வதில்லை. ஆனால், அதிகமான வலியை இவை ஏற்படுத்தும். இந்த வலியானது சில நாள் தொடங்கிப் பல மாதங்கள் வரை நீடித்திருக்கும்.