
பூமியின் தரைப் பகுதிகளில் வாழும் பாலூட்டி உயிரின வகைகளில் யானை உருவத்தில் மட்டும் பெரியதல்ல, புத்திசாலித்தனத்திலும் முன்னிலையில் நிற்கக் கூடிய விலங்கு. இவை வலுவான ஞாபக சக்தியும் ஆழ்ந்த உணர்ச்சிப் பிழம்பும் கொண்டு தனது இனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்து வாழ்ந்து வருபவை. இவற்றிடம் உள்ள முக்கிய அம்சங்களில் ஒன்று முறம் போன்ற பெரிய அளவிலான இரண்டு காதுகள்.
இது யானைக்கு அழகியல் சார்ந்த ஒன்றாக மட்டும் பார்க்கப்படுவதில்லை. வெப்பம் சூழ்ந்த இயற்கையான காடுகளில் யானைகள் வாழ்வதற்கு அவற்றின் காதுகள் சிறந்த முறையில் உதவி புரிகின்றன.
மனிதர்களுக்கு வியர்ப்பது போல் யானைக்கு வியர்ப்பதில்லை. அதற்கு பதில், அதன் காதுகளில் வலை போல் பின்னிக் கிடக்கும் இரத்தக் குழாய்களில் உடலின் உஷ்ணமடைந்த இரத்தம் வந்து சேகரிக்கப்படுகின்றன. பின் அங்கிருந்து அந்த இரத்தம், வெளியே தெரியும்படி இருக்கும் மெல்லிய தோலிலுள்ள இரத்தக் குழாய்களுக்குள் பாய்கின்றன. அப்போது யானையின் காது மடல்கள் விசிறி போல் அசைந்து வீசிக்கொண்டிருப்பதால் சூடான இரத்தம் குளிர்ச்சியடைகிறது.
குளிர்ந்த இரத்தம் மீண்டும் உடல் முழுக்க பாயும்போது அதன் உடல் சூடு குறைகிறது. இந்த முறையில் 20 சதவிகித இரத்தம் குளிர்ச்சியடைவதால் அதிக வெப்பக் காலங்களிலும் யானையால் உயிர் வாழ முடிகிறது. அதிக உஷ்ணமான ஆப்பிரிக்காவில் வாழும் யானைகளின் காதுகள் மற்ற பகுதியில் வாழும் யானைகளின் காதுகளை விட மிகப் பெரியதாக இருக்கும். இதனால் உடலின் அதிகப் பகுதி இரத்தத்தை அதனால் குளிர்விக்க முடியும். பழைமை வாய்ந்த, யானையின் எலும்புக் கூடுகளும் இதை நிரூபிக்கின்றன.
குளிர் பிரதேசத்தில் வாழ்ந்து இறந்த யானைகளின் காதுகள் அளவில் சிறியதாகவே இருந்துள்ளன. ஏனெனில், அதிக உஷ்ணத்தை வெளியேற்ற வேண்டிய அவசியம் அவற்றிற்கு இருந்ததில்லை. இது தவிர, யானையின் காதுகளுக்கு கேட்கும் திறன் அதிகம். குறைந்த அதிர்வலை கொண்ட சத்தங்களையும் ஏற்று, தனது உறுமல் மூலம் மைல்களுக்கு அப்பால் உள்ள தனது குழு உறுப்பினர்களுக்கு செய்தி அனுப்பி எச்சரிக்கும் வகையில் யானையின் காதுகள் அமைந்துள்ளன.
மேலும், யானைகளின் பாதங்களில் உள்ள பசினியன் கார்ப்பசல்ஸ் (Pacinian corpuscles) என்னும் உணர்திறன் ஏற்பிகள் பூமியின் அதிர்வுகளை ஏற்கும் திறனுடையவை. பின் அவற்றை எலும்புகளின் வழியாக காதுக்குக் கொண்டு சென்று தன்னைத் தாக்க வரும் விலங்குகளைப் பற்றி அறிந்து கொள்ளவும், அதைத் தனது சகாக்களுக்குத் தெரிவிக்கவும் செய்யும்.
தன்னுடைய உணர்ச்சிகளின் உள் அர்த்தத்தை உணர்ந்து கொள்ளும் அறிவுடையவை யானைகள். உணர்ச்சிகளை வெளிப்படுத்த கைகளோ முகமோ இல்லாதலால், யானை தனது காது மடல்களையே செய்திகளை வெளிப்படுத்த உபயோகிக்கின்றன.
உதாரணமாக, அது தனது இருப்பிடத்தை மாற்ற விரும்பினால் காதுகளை முன்னுக்கு கொண்டு வந்து முரட்டுத் தனமாக மிரட்டும் வகையில் அசைக்கும். இதிலிருந்தே அதன் கூட்டாளிகளும் அங்கிருந்து கிளம்ப வேண்டிய நேரம் அது என்பதைப் புரிந்து கொள்ளும். யானை தனது காதுகளை வைத்தே ஆதிக்கம், எச்சரிக்கை, கீழ்படிதல் போன்ற உணர்வுகளை வெளிப்படுத்திவிடும்.
தனது பெரிய சைஸ் காதுகளை சூரிய ஒளியின் தாக்கத்திலிருந்து கழுத்து, முகம் போன்ற பாகங்களைப் பாதுகாக்கவும், ஈ, பூச்சிகள் போன்றவை காதுக்குள் நுழைந்து விடாமல் தடுக்கவும் பயன்படுத்திக் கொள்கின்றன யானைகள்.