
அந்தக் காலத்தில் ஒரு கதை சொல்லப்பட்டு வந்தது!
குருடர்கள் நால்வருக்கு யானை எப்படியிருக்கும் என்று பார்க்கும் ஆசை வந்து விட்டதாம். அவர்களை ஒரு யானையிடம் அழைத்துச் சென்றார்களாம். முதல் குருடர் யானையின் தும்பிக்கையை தடவிப் பார்த்தாராம்! இரண்டாமவர் அதன் அகண்ட வயிற்றைத் தடவினாராம். மூன்றாமவர் அதன் காலைக் கைகளால் துழாவினாராம். நான்காமவரோ அதன் வாலை நன்கு தொட்டுத் தடவினாராம்!
சந்தோஷமாக வீடு திரும்பிய அவர்களிடம் யானை எப்படி இருந்தது என்று கேட்டார்களாம். தும்பிக்கையைத் தடவிப் பார்த்தவர் யானை உலக்கை போல உள்ளது என்றாராம். வயிற்றைத் தடவிப்பார்த்தவர் யானை பானை போன்று உள்ளது என்க, அதன் காலைத் துழாவியவர் அது தூண் போல உள்ளது என்றும் வாலைத் தடவியவர் வெறும் விளக்கமாறுதான் யானை என்றும் கூறினராம்! நாமும் இன்னமும் அந்தக் குருடர்கள் நிலையில்தான் உள்ளோம்!
யானை, காட்டெருமை, கரடி போன்றவையெல்லாம் காட்டு விலங்குகள் என்பதை அறிவோம். ஆனால் அவையெல்லாம் இன்று நாம் வசிக்கும் நாட்டுக்குள் நடமாடுகின்றன. விலங்குகளுள் பெரிதான யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கோவில் திருவிழாக்களில் பங்கேற்கும் யானைகள் எதனாலோ பயந்து கூட்டத்திற்குள் ஓடிப் பக்தர்களைப் பந்தாடுவதுடன் பாகன்களையும் கொல்கின்றன.
நமது நாட்டில் மட்டுமே மனித உயிர்கள் துச்சமாக மதிக்கப்படுகின்றன. வருமுன் காக்க வேண்டும் என்று உலகுக்கு உணர்த்திய நாம் இன்று அதனை மறந்து விட்டோம். சரி! என்னதான் தீர்வு?
யானைகள் வாழும் காடுகளைச் சுற்றி ஆழமான பள்ளங்களைத் தோண்டி, அவற்றின் நடமாட்டத்தைக் காட்டிற்குள்ளேயே இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இதைக் கவனிப்பது வனத்துறையின் தலையாய கடமையாகும். ஆனால் பள்ளங்கள் ஏற்படுத்தும் முறை நடைமுறையில் இருப்பதாகத் தெரியவில்லை. கிராமத்தார் யானைகளைக் கண்டு சொன்ன பிறகே வனத்துறையினர் களத்திற்கு வருவது வேடிக்கையாக இருக்கிறது!
யானைகளின் காதுகளில் அவற்றின் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சிறு கருவிகள் பொருத்தப்பட வேண்டும். வனங்களை ஒட்டியுள்ள கிராமங்களில் அவை நுழைந்தால், அவற்றின் இருப்பிடத்தை அக்கருவிகள் மூலம் எளிதாக அறிந்து, மக்களைக் காக்கலாம்! இப்பொழுது யானைகளின் இருப்பிடத்தைக் கண்டு பிடிக்கவே பல நாட்களை வனத்துறையினர் எடுத்துக் கொள்வதாகச் செய்திகள் தெரிவிக்கின்றன.
திருவிழாக்களில் பயன்படுத்தப்படும் யானைகள் கட்டாயமாகப் பழகிய யானைகளாக இருக்க வேண்டும். அவை 'கும்கி' யானைகளாக மட்டுமே இருந்தால் மிகவும் நல்லது; பாதுகாப்பானது!
பழக்கமற்ற யானைகள் கூட்டத்தைக் கண்டோ, மேள, தாள சப்தத்தைக் கேட்டோ, அதிக ஒளியுள்ள விளக்குகளைப் பார்த்தோ அரண்டு போக வாய்ப்புகள் அதிகம். ‘சண்டி வெறிச்சா காடு கொள்ளாது!’ என்றார்கள். காடே அவ்வாறென்றால் நாம் வாழும் நாடு எம்மாத்திரம்?
யானைகளின் எண்ணிக்கை பெருகப் பெருக, கும்கி யானைகளின் எண்ணிக்கையையும் உயர்த்த வேண்டும். உரிய பயிற்சிகளை அவற்றுக்குப் போதுமான அளவுக்கு வழங்கி, தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும்.
அவை வாழும் வனத்துக்குள் போதுமான உணவும், தேவையான நீரும் இருக்குமாறு பார்த்துக் கொள்ள வேண்டியது வனத்துறையின் பணியாகும். ஒரு வேளை பற்றாக்குறை ஏற்படுமானால், அங்குள்ள யானைகளை வேறு வசதியான வனங்களுக்கு மாற்ற ஏற்பாடு செய்ய வேண்டும்.
ஊட்டியின் நகர வீதிகளில் காட்டெருமைகளும், கரடிகளும் நடமாடுவதாகச் செய்திகள் தெரிவிப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஒரு நேர்வில் மயிரிழையில் அவற்றிடமிருந்து ஒரு பெண் தப்பிக்கும் வீடியோவைப் பார்க்கும்போதே பதறுகிறது நெஞ்சம்!
சென்னை நகரிலேயே பல இடங்களில் பசுக்களும்கூட நம்மைப் பகையாளிகளாகக்கருதி முட்டி விரட்டுகின்றன. நகரச் சாலைகளில் மாடுகள் திரிவதற்குக் காரணம் நம் கையாலாகாத் தனமே! சட்டங்களை ஒழுங்காக மதிக்காத நாமும், நம்மைத் திருத்தாத நிர்வாகமுந்தான்!
சாலையில் மாடுகள் பயமுறுத்தும் விதமாக நடமாடினாலோ, உங்களுக்கோ, உறவினருக்கோ சிரமம் தந்தாலோ 1913 என்ற எண்ணில் புகார் தரக் கூறுகிறார்கள். தேவைப்படுபவர்கள் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
ஜனத்தொகை அதிகரிக்க அதிகரிக்க, குற்றங்கள் கூடுவது இயல்பே! அதனைத் தடுக்கும் விதமாக சட்டங்கள் கட்டாயமாக்கப்பட்டு, குற்றமிழைப்போரைப் பாரபட்சமின்றித் தண்டிக்க வேண்டும். உணர்ந்த மக்கள் வாழும் நாட்டில்தான் ஜனநாயகம் தழைக்கும்!
இந்த யானை vs மனிதர்கள் பிரச்சனை தொடர்கதையாகி வருகிறது! முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது அரசு மற்றும் வனத்துறை அதிகாரிகளின் கடமையாகும். (அதிகாரிகளின் மெத்தனத்தைப் போக்க, அசம்பாவிதங்கள் நேரிடும் பகுதிகளில் ஏற்படும் உயிர் மற்றும் பொருட்சேதத்திற்கான நஷ்ட ஈட்டுத் தொகையை அப்பகுதிகளில் பணி புரியும் அனைத்து வனத்துறை பணியாளர்களின் சம்பளங்களிலுமிருந்தும் பிடித்தம் செய்யலாம்.)
சுதந்திரமடைந்து 75 ஆண்டுகளைக் கடந்தும், இவ்வளவு நவீன வசதிகள் பெருகி விட்ட நிலையிலும், மனித உயிர்கள் விலங்குகளால் கொல்லப்படுவதை எப்படி ஏற்பது? உடனடித் தீர்வு அவசியமல்லவா?