ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 31 அன்று, ‘பன்னாட்டு வரிக்குதிரை நாள்’ (International Zebra Day) கொண்டாடப்பட்டு வருகிறது. அமெரிக்காவில் வாஷிங்டன் டி.சி அருகிலுள்ள ஸ்மித்சோனியன் தேசியப் பூங்கா மற்றும் பாதுகாப்புக் குழு, வரிக்குதிரைகளின் வாழ்க்கை நிலைகளை எடுத்துக் கூறவும், சுற்றுச்சூழல் மற்றும் மக்கள்தொகை வளர்ச்சி காரணமாக அழிவுக்குள்ளாகி வரும் பல்வேறு விலங்குகளில் ஒன்றான வரிக்குதிரையின் எண்ணிக்கை குறைவினைத் தடுக்கவும் அனைத்து மக்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக, ஜனவரி 31 ஆம் நாளை ‘பன்னாட்டு வரிக்குதிரை நாள்’ (International Zebra Day) என்று அறிவித்துக் கடைப்பிடித்து வருகிறது.
வரிக்குதிரை பாலூட்டி இனத்தைச் சேர்ந்த ஒரு விலங்கு. இது ஒரு தாவர உண்ணி. குதிரை இனத்தைச் சேர்ந்தது. வரிக்குதிரை, பாலூட்டிகளில் குதிரை, கழுதை போல ஒற்றைப்படைக் குளம்பிகள் வரிசையைச் சேர்ந்த ஒரு விலங்கினம். இவை உடல் முழுவதும் கருப்பு வெள்ளையிலான வரிகளைக் கொண்டுள்ளன. இதனாலாயே இவை தமிழில் வரிக்குதிரைகள் எனப்படுகின்றன.
வரிக்குதிரைகள் ஒரு சமூக விலங்காகும். எனவே இவை எப்போதும் மந்தைகளாக (கூட்டமாக) வாழ்கின்றன. எந்த ஒரு குதிரையும் தனித்திருக்காது. நின்று கொண்டே தூங்கும் பண்பு கொண்டவை. இரண்டு வரிக்குதிரைகள் ஒன்றின் மீது ஒன்றாக, தங்களின் கழுத்துப் பகுதியை வைத்துக் கொண்டு நின்று ஓய்வு எடுத்துக் கொள்ளக்கூடியன.
புதிதாகப் பிறக்கும் வரிக்குதிரைக் குட்டியானது, பிறந்து ஆறு நிமிடங்களுக்குப் பிறகு எழுந்து நிற்கும், 20 நிமிடங்களுக்குப் பிறகு நடக்கும், 40 நிமிடங்களுக்குப் பிறகு ஓடக்கூடிய தன்மை கொண்டது. இவற்றால் மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் ஓட முடியும். சாதாரணமாக ஒரு நாளில் இவை 80 கிலோமீட்டர் தொலைவு வரை நடக்க வல்லவை.
நன்கு வளர்ந்த வரிக்குதிரைகள் 1 முதல் 2 மீட்டர் உயரமும், 2 முதல் 3 மீட்டர் நீளமும் கொண்டவை. 250 இல் இருந்து 500 கிலோ எடை வரை இருக்கும். காட்டில் உள்ள வரிக்குதிரைகள் 20 முதல் 30 ஆண்டுகள் வரை வாழக்கூடியன. அவை விலங்குக்காட்சி சாலையில் 40 ஆண்டுகள் வரை உயிர் வாழும்.
வரிக்குதிரைகளின் வரிகள் தனித்தன்மை பெற்றவை. ஒவ்வொரு வரிக்குதிரையின் வரியும் மற்றொரு வரிக்குதிரையினைப் போல இருப்பதில்லை. மாந்தர்களின் கைவிரல் இரேகைகளைப் போல, ஒன்று போல் ஒன்று இல்லாத தனித் தன்மையான கருப்பு, வெள்ளை வரிக்கோடுகளைக் கொண்டவை. வரிகள் முன்புறம் நெடுக்குக் கோடுகளாகவும் பின்புறமும் கால்களிலும் கிடைக்கோடுகளாகவும் இருக்கின்றன.
தற்போது காடுகளில், கிரேவியன் வரிக்குதிரை, சமவெளி வரிக்குதிரை மற்றும் மலை வரிக்குதிரை என்று மூன்று வகையான வரிக்குதிரைகள் இருக்கின்றன. இவற்றுள் கிரேவியன் வரிக்குதிரை அச்சுறுத்தப்பட்ட விலங்கினங்களின் பட்டியலில் சிவப்புப் பட்டியலில் இடம் பெற்றிருக்கிறது.
வரிக்குதிரைகளைப் பாதுகாக்கவும், அவற்றின் நீண்ட கால வாழ்வினை உறுதி செய்யவும், அரசுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்தப் பன்னாட்டு வரிக்குதிரைகள் நாள் வலியுறுத்துகிறது. வரிக்குதிரைகளின் பாதுகாப்பு தேவைகள் மற்றும் உலகளாவிய நிலையில் சுற்றுச்சூழல் சமநிலையைப் பாதுகாப்பதற்கான அவற்றின் முக்கியத்துவம் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும் என எடுத்துரைக்கப்படுகிறது.
வேட்டையாடுதல், அதன் வாழ்விடச் சீரழிவு மற்றும் மக்களுக்கும் வனவிலங்குகளுக்கும் இடையிலான மோதல்கள் போன்ற பல காரணிகளால் வரிக்குதிரைகளின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்து கொண்டிருக்கிறது. எனவே, அதன் வாழ்விடங்களைப் பாதுகாக்க வேண்டும் என்று இந்நாள் எடுத்துரைக்கிறது. வரிக்குதிரைகளைப் பாதுகாக்கும் முயற்சியில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவதன் வாயிலாக, இந்த அற்புதமான விலங்கினை பாதுகாப்பதுடன், அடுத்து வரும் தலைமுறையினருக்கு இயற்கையின் அற்புதங்களை அப்படியே வைத்திருக்க உதவமுடியும் என்றும் குறிப்பிடுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் இந்நாளில் ஒரு கருத்துரு மையக் கருத்தாகக் கொண்டு விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 2025 ஆம் ஆண்டுக்கான கருவாக, ‘வரிக்குதிரைகளின் அழகு மற்றும் அவை எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தல்’ என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.