
Oil Reservoirs - பூமியில் எரிபொருள் தீரப்போகிறது என்று அவ்வப்பொழுது அச்சுறுத்தல் செய்தி வந்து கொண்டே இருக்கிறது அல்லவா?
இனி கவலை வேண்டாங்க! பூமியின் அடியில் இருக்குது போதுமான சக்தி என்று ஒரு ஆறுதல் செய்தியை சயின்ஸ் அட்வான்ஸஸ் (Science Advances) பத்திரிகை தனது 2024 டிசம்பர் 13ம் தேதி இதழில் வெளியிட்டிருக்கிறது.
அமெரிக்காவைச் சேர்ந்த பெட்ரோலிய புவியியல் இரசாயன வல்லுநரான ஜியாப்ரி எல்லிஸ் (Geoffrey Ellis,a petroleum geochemist at the U.S. Geological Survey (USGS)) மற்றும் சாரா ஜெல்மன் (Sarah Gelman) ஆகிய இரு ஆய்வாளர்கள் கண்டுபிடித்த இந்த செய்தி ஆறுதல் அளிக்கும் செய்தி.
பூமியில் சேர்த்து வைக்கப்பட்டிருக்கும் எல்லா சக்தியைப் போல் இரு மடங்கு ஹைட்ரஜன் பவர் பூமியின் அடியில் இருக்கிறது என்பது அவர்கள் தரும் ஊக்கமூட்டும் செய்தியாகும்.
இதுவரை இவ்வளவு பெரிய ஆற்றல் பூமிக்கு அடியில் இருக்கிறது என்பதை ஆய்வாளர்கள் அறியவில்லை. ஆனால் மேற்கு ஆப்பிரிக்காவிலும் அல்பேனியம் க்ரோமியம் சுரங்கத்திலும் ஹைட்ரஜன் இருப்பதைக் கண்டபோது அவர்களின் ஆச்சரியத்திற்கு எல்லையே இல்லாமல் போனது! பூமிக்கு அடியில் ஏராளமாக ஹைட்ரஜன் சேமிக்கப்பட்டிருக்கக் கூடும் என்ற ஒரு புதிய பார்வையே அப்போது தான் அவர்களுக்குக் கிடைத்தது.
இன்னும் இருநூறு வருடம். படிமப்பாறை எரிபொருளை (Fossil Fuel) நம்பி இருக்கும் நமக்கு பூமிக்கு அடியில் உள்ள இந்த ஹைட்ரஜன் ஆற்றலில் ஒரு துளி கிடைத்தால் கூடப் போதுமாம் படிமப்பாறை எரிபொருளுக்கு டாட்டா சொல்லி விடலாமாம்! இருநூறு வருடங்களுக்கு கவலையே இல்லை!
10 டிரில்லியன் டன் (ஒரு டிரில்லியன் என்றால் ஒன்றுக்குப் பக்கத்தில் 12 பூஜ்யங்களைக் கொண்ட எண்) இருக்கக் கூடும் என்பது அவர்களின் கணிப்பு. ஆனால் நிச்சயமாக பூமிக்கு அடியில் 6.2 டிரில்லியன் டன் (அதாவது 5.6 மெட்ரிக் டன்) ஹைட்ரஜன் பாறைகளில் சேமிக்கப்பட்டு வைக்கப்பட்டுள்ளன என்பது அவர்களின் ஆய்வு மூலம் உறுதியானது. அதாவது பூமிக்கு அடியில் உள்ள எண்ணெயின் அளவு போல 26 மடங்கு இது அதிகமாம்.
ஹைட்ரஜன் ஒரு தூய்மையான ஆற்றலின் ஆதாரமாகும். தொழிலகங்களுக்குத் தேவையான மின்சக்தி மற்றும் வாகனங்களை ஓட்டுவதற்கான எரிபொருள் ஆகியவற்றை ஹைட்ரஜனிலிருந்து பெற முடியும் என்பது அனைவரும் அறிந்ததே!
2 சதவிகித ஹைட்ரஜன் ஆற்றல் 124 பில்லியன் (ஒரு பில்லியன் என்றால் நூறு கோடி) டன் வாயுவுக்கு சமம்.
ஹைட்ரஜனிலிருந்து பெறப்படும் சக்திக்கு 'க்ரீன் ஹைட்ரஜன்' என்று பெயர். படிமப் பாறைகளைலிருந்து வரும் சக்திக்கு 'ப்ளூ ஹைட்ரஜன்' என்று பெயர்!
நமக்குக் கிடைக்கப்போவது இனி க்ரீன் ஹைட்ரஜன்!
இதில் ஒரு பெரிய பயன் என்னவென்றால் இந்த ஆற்றலைத் தேவையான போது எடுத்துக் கொள்ளலாம். இதை எடுத்து ஒரு இடத்தில் சேமிக்க வேண்டிய அவசியம் இல்லை!
கடற்கரைக்கு வெகுதூரத்தில் அல்லது அதிக ஆழத்தில் இருக்கும் இந்த ஆற்றலை எங்கு இருக்கிறது என்று நாம் கண்டுபிடிக்க வேண்டும். விஞ்ஞானிகளுக்கு சவாலான விஷயம் இந்த ஹைட்ரஜன் பாறைகள் எந்த இடத்தில் உள்ளன என்பதைத் துல்லியமாகக் கண்டுபிடிப்பது தான்!