

காலிஃபோர்னியாவின் சியென்னா நிவேதா மலைப்பகுதியில் மட்டுமே வளரும் ராக்ஷச செகோயா மரம், உலகின் மிகப் பெரிய மரமாக கருதப்படுகிறது. 3000 ஆண்டுகள் வரை வாழும் இம்மரம், 275–316 அடி உயரம் வரை வளரும். அடர்த்தியான தண்டு, நீலம்-பச்சை ஊசி இலைகள், நெருப்பைத் தாங்கும் தன்மை, ஈரமான மண், பனிப்பாறை நீர் ஆகியவை இதன் வாழ்வாதார ரகசியங்கள்.
ஊசி இலை மரமாகிய ராக்ஷச செகோயா மரம் காலிஃபோர்னியாவில் மட்டுமே காணப்படுகிறது. இங்குள்ள சியென்னா நிவேதா என்ற பகுதியில் இவை காணப்படுகின்றன. இந்த மரம் இந்த இடத்தில் மட்டுமே வளர்வதற்கு முக்கியக் காரணம் இது தண்ணீர் நிறைந்த பகுதியாக இருப்பதால்தான்.
மழைநீரினால் இந்த இடத்தின் மண் எப்போதும் நீர்ச்சத்து நிறைந்ததாகவே இருக்கும். மழையே இல்லாத காலங்களிலும் இந்த மண் உயர்நிலையில் இருக்கும். இந்த மரத்தின் இன்னொரு அதிசயமான குணம் என்னவென்றால் நெருப்பு இதை பாதிக்காமல் இன்னும் செழிப்பாக வளரச்செய்யும். எந்த ஒரு தாவரத்திற்குமே இல்லாத பண்பு இது.
இதன் விஞ்ஞானப் பெயர் Sequoia giganteum. உலகிலேயே மிகப் பெரிய மரமாகக் கருதப்படுகிறது. இது மிக அடர்த்தியான தண்டு பெற்றது. இதன் மரப்பட்டை கள் சிவந்த ப்ரௌன் நிறத்திலும் இதன் ஊசி இலைகள் நீலம் மற்றும் பச்சை நிறத்தில் இருக்கும். மேலும் முட்டை வடிவில் காணப்படும். மிகப் பழமையான செகோயா மரங்கள் 3000 ஆண்டுகள் பழமையானவையாக கருதப்படுகிறது. ராக்ஷச செகோயாவில், ஜெனரல் ஷெர்மான் வகைதான் மிகப் பெரிய மரமாகக் கருதப்படுகிறது.
இது சுமார் 275 அடி உயரம் இருக்கும். அடிப்பாகம் சுமார் 100 அடிகள் சுற்றளவு இருக்கும். சில செகோயா மரங்கள் 316 அடி உயரம் கூட இருக்கும். இந்த மரம் இந்த இடத்தில் மட்டுமே காணப்படுவதற்கு காரணம் தண்ணீர் நிறைந்த மணல் பகுதியாக இது இருப்பதுதான்.. இதன் வளர்ச்சிக்கு ஈரத்தன்மை மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. சுமார் 15 லிருந்து 20 சதவீதம் வரை தண்ணீர் இதற்குத் தேவையாக உள்ளது.
கோடைக்காலத்தில் தண்ணீர் குறைவு ஏற்பட்டாலும் இதன் அருகில் உள்ள பனிகள் நிறைந்த பிரதேசமான சியென்னா நிவேதா பகுதியில் பனிப்பாறைகள் உருகி தண்ணீர் தேவையை பூர்த்தி செய்கிறது. இதனால் மண் ஈரத்தன்மையை தக்கவைக்க முடிகிறது.
செகோயா மரத்தின் வேர்கள் கீழே 6 லிருந்து 12 அடி வரை காணப்படும் என்றாலும் இந்த வேர்கள் 100 அடிகள் வரை பரவி வளரும் பண்பு பெற்றதால் இவை நீரை உறிஞ்சி மரத்தை காக்கின்றன. மழை இல்லையென்றாலும் பனி உருகி நீர் சேர்வதால் மேலும் செங்குத்தான பகுதியில் இவை காணப்படுவதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலையை இதற்கு பருவச் சூழல் தருகின்றது.
இது காலிபோர்னியா பகுதிகளில் மட்டுமே இல்லாமல் இதற்கு முன் வடக்கு அரை கோணப் பகுதிகளிலும் காணப்பட்டன. ஆனால் இங்குள்ள காலநிலை மாறுபாட்டினால் வறட்சியின் காரணமாக இப்பகுதியில் அவை வெகுவாகக் குறைந்தன. இதற்கு ஏற்றார் போன்ற காலநிலை அமெரிக்காவின் தென் மேற்குப் பகுதியான காலிபோர்னியாவில் மட்டும் அமைவதால் இந்த செகோயா மரங்கள் இங்கு வளர்கின்றன.
தற்போதைய சூழலில் சியென்னா நிவேதா மலைப்பகுதியில் சுமார் 260 மைல்கள் இடத்தில் சுமார் 3000 அடியிலிருந்து 8000 அடி உயரங்கள் கொண்ட ராக்ஷச செகோயா காணப்படுகிறது.
மரங்களை பொதுவாக நெருப்பு அழிக்கும். ஆனால் நெருப்பு இந்த செகோயாவை இன்னமும் செழிப்பான ஆக்குகிறது. நெருப்பு பட்டு இதன் விதைகள் பல இடங்களில் பரவுகிறது. இது வளரும் இடத்தை நெருப்பு வேண்டாதவற்றை அழித்து விதைகளுக்கு அதிக வெளிச்சத்தைத் தருகிறது. இதன் தண்டுப் பகுதி மிகவும் அடர்த்தியாக இருப்பதால் நெருப்பிலிருந்து பாதிக்கப்படுவதில்லை. சிலசமயங்களில் ஏற்படும் காட்டுத்தீயால் இவற்றின் வளர்ச்சி அதிகமாவதாக தெரிகிறது.
இந்த மரவகைகள் குறைந்து வருவதால் இருக்கும் மரங்கள் பாதுகாப்பில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது.
செகோயா தேசிய பூங்கா மற்றும் கிங்ஸ் கன்யான் தேசிய பூங்காவிலுள்ள செகோயா மரங்களைக் காணலாம். இங்கு இருக்கும் செகோயா மரங்கள் 3200 ஆண்டுகள் பழைமையானதாக கருதப்படுகின்றன.
செகோயா மரம் நினைவுச்சின்னம்:
செகோயா தேசிய காட்டில் 3,30,000 ஏக்கரில் செகோயா நினைவுச்சின்னம் உள்ளது. இது 2000 ஆண்டில்டிசைன் செய்யப்பட்டது. இதில் 33 செகோயா மரங்கள் உள்ளன. இங்கு ஒவ்வொரு செகோயா மரமும் 220 அடி உயரத்தில் உள்ளன.
இந்தப் பிரம்மாண்ட இயற்கை அதிசயத்தைப் பற்றிய முழுமையான புரிதலைப் பெறுவதன் மூலம், உலகின் அரிய தாவரங்களின் சூழலியல் மற்றும் பாதுகாப்பு குறித்த ஆழமான அறிவை வாசகர்கள் பெறுகின்றனர்.