வீணாகும் தண்டை வச்சே பால்கனியில் பசலைக்கீரை வளர்க்கும் சூப்பர் ஐடியா..!

சமையலுக்கு வாங்கும் பசலைக்கீரை தண்டுகளைக் கொண்டே சிறிய தொட்டியில் செழிப்பாக பசலைக்கீரை வளர்க்கும் சுலபமான இயற்கை முறைகளைத் தெரிந்து கொள்ளுங்கள்.
பசலைக்கீரை | spinach propagation
பசலைக்கீரை | spinach propagationImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

சமையலுக்கு வாங்கிய பசலைக்கீரையின் இலைகளை மட்டும் எடுத்துவிட்டு, அதன் தண்டுகளைத் தூக்கி எறிகிறீர்களா? இனி அந்தத் தவறைச் செய்யாதீர்கள்! வெறும் 10 நாட்களில் வேர்விட வைத்து, ஆண்டு முழுவதும் சத்தான பசலைக்கீரையைக் கொத்துக் கொத்தாக அறுவடை செய்யும் எளிய சூட்சுமங்களை இப்போது தெரிந்துகொள்ளலாம்!

விதைகள் இன்றி, சமையலுக்கு வாங்கும் பசலைக்கீரையின் தண்டுகளைக் கொண்டே மிக எளிதாகப் புதிய செடிகளை உருவாக்க முடியும். சிறிய தொட்டிகளில் கூட அதிக பராமரிப்பின்றி கொடியாகப் படர்ந்து ஆண்டு முழுவதும் சத்தான கீரைகளைத் தரும் கோடிப் பசலைக்கீரையை வளர்க்கும் எளிய முறைகளைக் பற்றி இங்கே காண்போம்.

பசலைக்கீரை தண்டை தண்ணீரில் வேர் விட வைப்பது எப்படி?

சமையலுக்கு வாங்கிய பசலைக்கீரையில், சற்று முற்றிய தடிமனான மற்றும் ஆரோக்கியமான தண்டுகளைக் தேர்ந்தெடுக்கவும். தண்டின் நீளம் சுமார் 6 முதல் 8 அங்குலம் வரை இருப்பது நல்லது. தண்டின் கீழ்பகுதியில் உள்ள இலைகளை நீக்கி விடவும். நுனியில் 2 அல்லது 3 இலைகள் மட்டுமே இருந்தால் போதும். கீழ் பகுதியில் இலைகள் இருந்தால் தண்ணீரில் மூழ்கி தண்ணீரைக் கெடுத்து விடும்.

தண்டின் அடிப்பகுதியில் ஒரு கணு இருக்குமாறு சாய்வாக (45 டிகிரி கோணத்தில்) வெட்டவும். இந்த கணுப் பகுதியில் இருந்து தான் புதிய வேர்கள் உருவாகும்.

ஒரு கண்ணாடி பாட்டிலில் தண்ணீர் ஊற்றி தண்டின் அடிப்பகுதி குறைந்தது 1 அல்லது 2 கணுக்கள் தண்ணீரில் மூழ்கும் படி வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ஊட்டி கேரட்டை மாடித் தோட்டத்தில் வளர்க்க ஆசையா? 70 நாளில் அறுவடை செய்ய டிப்ஸ்!
பசலைக்கீரை | spinach propagation

பராமரித்தல்: நேரடி வெயில் படாமல் ஆனால் நல்ல வெளிச்சம் உள்ள இடத்தில் வைக்கவும். 2 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீரை மாற்றவும். சுமார் 5 முதல் 7 நாட்களில் வெள்ளை நிறத்தில் சின்ன சின்ன வேர்கள் வரத் தொடங்கும். 10 முதல் 12 நாட்களில் வேர்கள் நன்கு வளர்ந்ததும் அவற்றை மண்ணில் நடவு செய்யலாம்.

மேலும் இவற்றை தண்ணீரில் வைக்காமல், நேரடியாக ஈரப்பதமான தொட்டி மண்ணில் நட்டு வைத்தாலும் எளிதில் துளிர்விடும்.

தொட்டியில் கொடியாகப் படர வைப்பது எப்படி?

கொடி நன்கு படர்ந்து நிறைய இலைகள் கொடுக்க குறைந்தது 12 முதல் 15 அங்குல ஆழமும், அகலமும் கொண்ட தொட்டி அல்லது குரோ பேக் தேர்ந்தெடுக்கவும்.

ஒரே தொட்டியில் 2 அல்லது 3 வேர் விட்ட தண்டுகளை நடலாம். தண்ணீர் தேங்காமல் வடிந்து செல்லும் மண கலவை அவசியம். தோட்டத்து மண் 40%, மண்புழு உரம் அல்லது நன்கு மக்கிய தொழு உரம் 40%, தேங்காய் நார் கழிவு 20% சிறிதளவு வேப்பம் பிண்ணாக்கு சேர்ப்பது வேர் அழுகலை தடுக்கும்.

பசலைக்கீரை | spinach propagation
பசலைக்கீரை | spinach propagationImage credit: Chatgpt

செடி நடும் போது தொட்டியின் ஓரத்தில் மூங்கில் குச்சி, பிவிசி பைப் அல்லது வலுவான குச்சியை நட்டு வைக்கவும். பால்கனி கிரில், சுவர் ஓரம் அல்லது கயிறு கட்டி பந்தல் போல செய்து அதன் மேலே கொடி படர வழி செய்யவும். கொடி படர ஆரம்பித்ததும், அதன் நுனியைக் கயிற்றில் மெதுவாகச் சுற்றி விட்டால் தானாகவே பற்றிக் கொண்டு படர்ந்து வளரும்.

தினமும் 4 முதல் 6 மணி நேர சூரிய ஒளி படும் இடத்தில் வைக்கவும். மண்ணின் மேல் பகுதி காயும் போது தண்ணீர் ஊற்றினால் போதும் அதிகபடியான தண்ணீர் தங்கினால் தண்டு அழுகி விடும்.

கொடி சுமார் 1 அடி உயரம் வளர்ந்ததும், அதன் நுனியைக் கிள்ளி விடவும். இதனால் பக்கவாட்டில் பல கிளைகள் உருவாகி கொடி மிகவும் அடர்த்தியாகப் படரும். இவை அறுவடை செய்யும் போது தண்டோடு சேர்த்து வெட்டி எடுத்தால், மீண்டும் புதிய தளிர்கள் வேகமாக வளரும்.

இதையும் படியுங்கள்:
வெள்ளரி விதை முளைக்குமா? வாங்கும்போது கவனிக்க வேண்டியது என்ன?
பசலைக்கீரை | spinach propagation

15 நாட்களுக்கு ஒரு முறை மண்புழு உரம், புளித்த மோர் கரைசல் அல்லது மீன் அமிலத்தை தண்ணீரில் கலந்து கொடுத்து வந்தால், இலைகள் நல்ல பசுமையாகவும், அகலமாகவும் வளரும்.

சமையலறைக் கழிவுகளாக தூக்கி எறியப்படும் பசலைக்கீரைத் தண்டுகளைச் சரியான முறையில் பயன்படுத்தினால், குறைந்த இடத்திலேயே பசுமையான கீரைத் தோட்டத்தை உருவாக்கலாம். முறையான சூரிய ஒளி, இயற்கை உரம் மற்றும் படர்வதற்கு சிறிய ஆதாரம் ஆகியவற்றை வழங்கினால், வீட்டிலேயே சத்தான சுத்தமான பசலைக்கீரையைத் தொடர்ந்து அறுவடை செய்து மகிழலாம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடைகளில் ரசாயன உரங்கள் தெளித்த கீரைகளை இனி காசு கொடுத்து வாங்க வேண்டிய அவசியமில்லை. சமையலுக்குப் பிறகு மிஞ்சும் தண்டுகளைக் கொண்டே, உங்கள் வீட்டு பால்கனி அல்லது மாடியில் ஆண்டு முழுவதும் நஞ்சில்லாத, சத்தான பசலைக்கீரையை நீங்களே அறுவடை செய்