

ஊட்டி போன்ற மலைப்பகுதிகளில் மட்டுமே விளையும் இனிப்பான கேரட்டை, உங்கள் வீட்டு மாடித் தோட்டத்திலோ அல்லது தொட்டியிலோ வளர்க்க முடியுமா..? இனி அந்தக் கவலையே வேண்டாம்! சென்னை போன்ற சமவெளிப் பகுதிகளிலும் வெறும் 70 நாட்களில் ஊட்டி கேரட்டுகளை அறுவடை செய்வது மிகவும் எளிது. அதற்கான ரகசியங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
வீட்டுத் தோட்டத்தில் குறுகிய காலப் பயிர்களையே அதிகம் வளர்ப்பர். குறிப்பாக பெரும்பாலான தோட்டக்கலைப் பயிர்கள் இந்தப் பட்டியலில் அடங்கும். இருப்பினும் கேரட் மற்றும் பீட்ரூட் உள்ளிட்ட கிழங்கு வகைகளை வீட்டுத் தோட்டத்தில் பெரிதாக யாரும் பயிரிடுவதில்லை.
செடி, கொடிப் பயிர்களில் பராமரிப்பு எளிதாக இருக்கும் என்பதால், பலரும் கேரட் பயிரிடுதல் பற்றி சிந்திக்கக் கூட இல்லை. சில பேருக்கு கேரட்டை வீட்டுத் தோட்டத்தில் பயிரிடலாமா? அது சாத்தியமா என்ற குழப்பமும் இருக்கிறது.
ஆனால் கேரட்டை தாராளமாக வீட்டுத் தோட்டத்திலோ அல்லது தொட்டியிலோ வளர்க்கலாம். கேரட் கொஞ்சம் நீளமாக இருக்கும் என்பதால், தொட்டியில் வளர்க்கும் போது நன்கு ஆழமான தொட்டிகள் தேவைப்படும்
கேரட்டை விதைக்கும் தொட்டியின் அளவு:
கேரட் நேராகவும், நீளமாகவும் வளர்வதற்கு தொட்டியின் ஆழம் மிக மிக முக்கியம்.
கேரட்டை பயிரிட குறைந்தபட்சம் 12 முதல் 15 அங்குலம் ஆழம் உடைய தொட்டி அல்லது க்ரோ பேக் இருத்தல் வேண்டும்.
குட்டை ரக கேரட்டுக்கு 8 முதல் 10 அங்குல ஆழம் கொண்ட தொட்டியே போதுமானது.
ஒரே தொட்டியில் பல கேரட்டுகளை அறுவடை செய்ய நினைத்தால், 18x12 அல்லது 24x12 அளவுள்ள க்ரோ பேக்ஸ் அல்லது தொட்டியைப் பயன்படுத்தலாம்.
கேரட்டை எந்த மாதம் விதைக்க வேண்டும்?
குளிர்காலப் பயிர்: பீட்ரூட்டைப் போலவே கேரட்டும் ஒரு குளிர்காலப் பயிர் தான். அதிக வெப்பநிவையில் கிழங்கு சரியாகப் பெருக்கமடையாது. அதேசமயம் கேரட்டில் கசப்புத் தன்மை வருவதற்கும் வாய்ப்புள்ளது.
சிறந்த பருவம்: அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரையிலான குளிர்காலத்தில் கேரட்டை விதைத்தால் நன்றாக வளரும். தற்போது இந்தியாவில் குளிர்காலம் நிலவி வரும் சூழலில், கேரட்டை இப்போது விதைத்தால் நன்றாக செழித்து வளரும்.
ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதிகளில் ஆண்டு முழுவதும் கேரட்டை வளர்க்கலாம். ஆனால் சென்னை போன்ற பெருநகரங்கள் மற்றும் பிற சமவெளிப் பகுதிகளில் நவம்பர் முதல் ஜனவரி மாதக் குளிரில் விதைத்தால் நல்ல இனிப்பான மற்றும் திடமான கேரட்டை அறுவடை செய்யலாம்.
கேரட் கிழங்கு நன்கு பெருக 5 டிப்ஸ்:
1. சரியான கலவை:
30% செம்மண், 40% கோகோபீட் அல்லது தென்னை நார் கழிவு மற்றும் 30% மண்புழு உரம் ஆகியவற்றைக் கொண்டு மண் கலவையை பொலபொலப்பாக தயாரிக்க வேண்டும். மண் கலவை இறுக்கமாகவோ அல்லது கற்களோ இருக்கக் கூடாது. அப்படி இருந்தால் கேரட்டின் வளர்ச்சி தடைபடும்.
2. விதைக்கும் முறை:
கேரட் விதைகள் அளவில் மிகவும் சிறிதாக இருக்கும். கால் அங்குலம் ஆழத்தில் விதைகளைத் தூவி, மண்ணைக் கொண்டு மூடவும். விதைகள் முளைக்க 10 முதல் 14 நாட்கள் வரை எடுத்துக் கொள்ளும். அதுவரை மண்ணில் தண்ணீர் தேங்காதவாறு ஈரப்பதம் மட்டும் இருப்பதை உறுதி செய்யுங்கள்.
3. செடிகளைக் களைதல்:
கேரட் செடிகள் 2 முதல் 3 அங்குல உயரத்திற்கு வளர்ந்ததும், அருகருகே இருக்கும் செடிகளில் ஆரோக்கியமற்ற செடிகளை பிடுங்கி விட வேண்டும். ஒவ்வொரு செடிக்கும் இடையே குறைந்தபட்சம் 2 முதல் 3 அங்குலம் இடைவெளி இருப்பை உறுதி செய்யுங்கள். அப்போது தான் கேரட் பெரியதாகப் பெருக்க இடமிருக்கும்.
4. சூரிய ஒளி:
தினந்தோறும் 5 முதல் 6 மணி நேரம் நேரடி சூரிய வெளிச்சம் படும் படி தொட்டியை வைக்க வேண்டும்.
5. உர மேலாண்மை:
கேரட் செடிக்கு தழைச்சத்து அதிகமுள்ள உரங்களைப் பயன்படுத்த வேண்டாம். இதனால் இலைகள் பெருகி, கிழங்கு சிறுத்து விடும். சாம்பல் அல்லது கடல்பாசி, பொட்டாசியம் மற்றும் பாஸ்பரஸ் சத்துக்களைக் கொண்ட மண்புழு உள்ளிட்ட உரங்களை இட்டால் கேரட் நன்றாக பெருக்கும்.
அறுவடை:
கேரட் விதைகளை விதைத்த 70 முதல் 85 நாட்களில், மண்ணுக்கு மேல் கேரட்டின் ஆரஞ்சு நிறத் தலைப்பகுதி தெரியத் தொடங்கும். இந்த நேரமே அறுவடைக்கான நேரம். இப்போது மண்ணைத் தளர்த்தி கேரட்டை பிடுங்கி அறுவடை செய்யலாம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடைகளில் அதிக விலை கொடுத்து ரசாயன உரமிட்ட கேரட்டுகளை வாங்குவதைத் தவிர்த்து, உங்கள் வீட்டு மாடியிலேயே 70 நாட்களில் சுவையான, சத்தான மற்றும் முற்றிலும் இயற்கையான ஊட்டி கேரட்டுகளை நீங்களே அறுவடை செய்து குடும்பத்தினருக்குச் சமைத்துக் கொடுக்க முடியும்.