

கடை சின்ன வெங்காயத்தைக் கொண்டு 60-75 நாளில் அறுவடை செய்யலாம். மண் கலவை, பராமரிப்பு மற்றும் அறுவடை குறித்த முழு விவரங்களைத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
இன்றைய காலகட்டத்தில் வீட்டிலேயே தோட்டம் அமைத்து பராமரிக்கும் ஆர்வம் பலருக்கும் உள்ளது. மாடித் தோட்டம் குறித்த விழிப்புணர்வு மக்கள் மத்தியில் அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், சிறு சிறு தொட்டிகளில் செடிகளை பலரும் வளர்த்து வருகின்றனர். அவ்வகையில் உடலுக்கு நன்மை பயக்கும் சின்ன வெங்காயத்தை வீட்டிலேயே வளர்க்க என்னென்ன செய்ய வேண்டும் என்பதை இப்போது பார்ப்போம்.
சின்ன வெங்காயத்தை வளர்க்க தனியாக விதைகளை வாங்க வேண்டிய அவசியமில்லை. சமையலுக்கு கடைகளில் வாங்கும் சின்ன வெங்காயத்தைக் கொண்டே தொட்டியில் வளர்க்கலாம். ஆனால் இதற்கு சரியான சின்ன வெங்காயத்தை தேர்வு செய்வது அவசியம்.
4 முக்கியமான படிகள்:
1. தரமான சின்ன வெங்காயத்தைத் தேர்ந்தெடுத்தல்:
நீங்கள் கடையில் வாங்கும் சின்ன வெங்காயத்தில், கெட்டியான, நன்றாக முற்றிய மற்றும் பெரிய அளவிலான பற்களைக் கொண்ட வெங்காயத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
அழுகிய நிலையில் உள்ள மற்றும் பூஞ்சைத் தொற்றுள்ள சின்ன வெங்காயத்தைத் தவிர்த்து விடுங்கள்.
சின்ன வெங்காயத்தின் அடிப்பகுதியில் இருக்கும் வேர்கள் முளைக்கும் பகுதி சேதமடையாமல் இருக்க வேண்டியது அவசியம். சின்ன வெங்காயத்தின் மேல் முனையை மட்டும் சுமார் கால் இன்ச் அளவுக்கு லேசாக வெட்டினால், முளைப்புத் திறன் அதிகரிக்கும்.
2. தொட்டி மற்றும் மண் கலவை தயாரிப்பு:
தண்ணீர் வெளியேறுவதற்கு வசதியாக துளைகள் இருக்கும் வகையில், குறைந்தபட்சம் 6 முதல் 8 இன்ச் ஆழமுள்ள தொட்டியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். மண்ணுக்கு அடியில் வெங்காயம் நன்றாக பெருக்க, மண் கலவை இறுக்கமாக இல்லாமல் பொலபொலப்பாக இருத்தல் வேண்டும்.
இதற்காக 50% தோட்டத்து மண் அல்லது செம்மண், 30% மட்கிய தொழுவுரம் அல்லது மண்புழு உரம் மற்றும் 20% தென்னை நார்க்கழிவு உள்ளிட்டவற்றைக் கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும்.
3. நடவு செய்தல்:
தொட்டியில் நிரப்பி வைத்துள்ள மண் கலைவயில், சின்ன வெங்காயத்தின் வேர்ப்பகுதி மண்ணுக்குள் இருக்குமாறும், வெட்டப்பட்ட மேல் முனை மண்ணுக்கு மேலே லேசாகத் தெரியுமாறு நட வேண்டும்.
தொட்டியின் அகலம் அதிகமாக இருந்தால், ஒன்றுக்கும் மேற்பட்ட சின்ன வெங்காயத்தை நடவு செய்யலாம். ஒவ்வொரு சின்ன வெங்காயத்திற்கும் இடையே குறைந்தபட்சம் 3 முதல் 4 இன்ச் இடைவெளி விட்டு நடவு செய்ய வேண்டும். இப்படி நடவு செய்தால் ஒவ்வொரு சின்ன வெங்காயமும் பல பற்களாகப் பிரிந்து, நன்றாக வளரும்.
4. பராமரிப்பு மற்றும் அறுவடை:
தினசரி குறைந்தபட்சம் 5 முதல் 6 மணி நேரம் வரை நேரடி சூரிய வெளிச்சம் படும் இடத்தில் தொட்டியை வைக்க வேண்டும். தொட்டியில் உள்ள தொட்டியில் அதிகப்படியான தண்ணீர் தேங்கும் போது வெங்காயம் அழுகி விடும்.
ஆகையால் மண்ணின் ஈரப்பதத்தைப் பொறுத்து அவ்வப்போது அளவோடு தண்ணீர் ஊற்ற வேண்டும். நடவு நட்ட 5 நாட்களுக்குள்ளாகவே பச்சைத் தாள்கள் வளரத் தொடங்கும். வெங்காயத் தாள்களை வெட்டி சமையலுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். நடவுக்குப் பின் சுமார் 60 முதல் 75 நாட்களில் வெங்காயத் தாள்கள் பழுத்து மண்ணில் சாயும். இதுவே சின்ன வெங்காயத்தை அறுவடை செய்வதற்கான உரிய நேரமாகும்.
வீட்டிலேயே சின்ன வெங்காயத்தை நடவு செய்து வளர்ப்பதற்கு ஆகும் செலவு மிக மிக குறைவு தான். தொட்டியை மட்டுமே வாங்க வேண்டும். ஏற்கனவே தொட்டி வீட்டில் இருந்தால், அந்த செலவும் இல்லை. செடிகள் வள்ர்ப்பில் ஆர்வம் இருந்தாலே போதுமானது. நடவு செய்த பின் அவ்வப்போது தண்ணீர் ஊற்றி பராமரித்தாலே போதுமானது. 2 மாதங்களில் ரசாயனம் கலக்காத சின்ன வெங்காயம் தயாராகி விடும். ஒருமுறை நடவு செய்து விட்டால், அடுத்த முறை நடவு செய்யும் ஆர்வம் தானாகவே அதிகரித்து விடும்.
வீட்டிலேயே ரசாயனமற்ற சின்ன வெங்காயத்தை தொடர்ந்து அறுவடை செய்வதன் மூலம், சமையல் செலவைக் குறைத்து குடும்பத்தின் ஆரோக்கியத்தையும் சுயசார்பையும் உறுதி செய்ய முடியும்.