

சமையலறையில் அன்றாடம் பயன்படுத்தும் குடைமிளகாயிலிருந்தே, உங்கள் வீட்டுத் தொட்டியில் செழிப்பான செடிகளை வளர்க்க முடியும் என்பது உங்களுக்குத் தெரியுமா? 90% வரை நிச்சயம் முளைப்புத்திறன் பெற எந்த நிறக் குடைமிளகாயைத் தேர்ந்தெடுக்க வேண்டும்? 14 நாட்களில் துளிர்விடச் செய்யும் அந்த எளிய ரகசியங்களை முழுமையாகத் தெரிந்துகொள்ள தொடர்ந்து படியுங்கள்!
வீட்டில் திடீர் தேவைக்கு பயன்படுமே என்று விரும்பும் பலரும் சமையலறையில் உள்ள காய்கறிகளின் விதைகளை எடுத்து தொட்டியில் விதைத்துப் பார்ப்பது வழக்கம். அப்படி தொட்டியில் குடைமிளகாய் விதைகளைப் போட்டு வளர்த்துப் பார்த்த அனுபவத்தில் தெரிய வந்த உண்மைகளும், கவனிக்க வேண்டிய நுணுக்கங்களும் பற்றி இங்கே பார்க்கலாம்.
குடைமிளகாய் விதைகளை விதைப்பதில் ஒரு பிரச்சினை இருக்கிறது. அது என்னவென்றால் நாம் கடைகளில் வாங்கும் பச்சை நிறக் குடைமிளகாய், உண்மையில் நன்கு பழுத்து முதிர்ச்சி அடையாத காயாகும். இதன் உள்ளே இருக்கும் வெள்ளை நிற விதைகள் முழுமையான முதிர்ச்சியை அடைந்திருக்காது. எனவே, பச்சை குடைமிளகாயில் இருந்து விதைகளை எடுத்து தொட்டியில் போட்டால், அவை முளைப்பதற்கான வாய்ப்பு 10% முதல் 20% வரை மட்டுமே உள்ளது.
பெரும்பாலானவை மண்ணிலேயே அழுகி விடும். எனவே சிவப்பு, மஞ்சள் மற்றும் ஆரஞ்சு நிறத்தில் இருக்கும் குடைமிளகாயை தேர்ந்தெடுக்கலாம்.
இவை செடியிலேயே நன்கு பழுத்து முதிர்ச்சியடைந்த காய்கள் ஆகும். இவற்றின் உள்ளே இருக்கும் விதைகள் முழுமையாக வளர்ச்சி அடைந்தவை. இவற்றை எடுத்து விதைத்தால் 80% முதல் 90% வரை நிச்சயம் முளைக்கும்.
நன்கு பழுத்த சிவப்புக் குடைமிளகாயில் இருந்து விதைகளை எடுத்து, தொட்டியில் பரிசோதித்துப் பார்த்ததில் படி படியாக சில மாற்றங்கள் நிகழ்ந்தன.
காயிலிருந்து எடுத்த விதைகளை நேரடியாக ஈரமான மண்ணில் போட்டால் பூஞ்சை பிடிக்க வாய்ப்பு உள்ளது. எனவே, விதைகளை எடுத்து 2 நாட்கள் நேரடி வெயில் படாத நிழலில் உலர்த்தி, பின்னர் விதைக்கும் போது முளைப்புத்திறன் சிறப்பாக இருக்கும்.
தக்காளி அல்லது கத்தரிக்காய் விதைகளைப் போல குடைமிளகாய் 4 நாட்களில் முளைத்து விடாது. இது சற்று மெதுவாக வளரும் செடி.
தொட்டியில் விதைத்த 10 முதல் 14 நாட்களுக்குப் பிறகே சிறு முளைகள் வெளியே எட்டிப் பார்க்கும்.
கடைகளில் விற்கப்படும் பெரும்பாலான பெரிய குடைமிளகாய்கள் ‘ஹைப்ரிட் (F1 Hybrid) ரகத்தைச் சேர்ந்தவை.
தொட்டியில் இவற்றின் விதைகள் நன்றாக முளைத்து செடியாக வளர்ந்தாலும், சில சமயங்களில் தாய்ச் செடியைப் போலப் பெரிய காய்களைக் கொடுக்காமல், சிறிய அளவிலான காய்களையோ அல்லது குறைவான மகசூலையோ கொடுக்க வாய்ப்புள்ளது. ஆனால், வீட்டுத் தேவைக்குப் போதுமான காய்கள் நிச்சயம் கிடைக்கும்.
நீங்கள் கடையில் வாங்கிய குடைமிளகாய் விதைகளைத் தொட்டியில் முயற்சி செய்ய விரும்பினால் கீழ்க்கண்ட வழிமுறைகளை பின்பற்றவும்..
குடைமிளகாய்க்கு நீர் தேங்காத, பொலபொலப்பான மண் அவசியம். செம்மண், மண்புழு உரம் மற்றும் தேங்காய் நார் கழிவு ஆகியவற்றைச் சம அளவில் கலந்து தொட்டியில் நிரப்ப வேண்டும்
விதைகளை மண்ணுக்குள் மிகவும் ஆழமாக புதைக்க கூடாது. கால் அங்குல ஆழத்தில் விதைத்து லேசாக மண்ணைத் தூவி தண்ணீர் தெளிக்க வேண்டும். மேலும் குடைமிளகாய் செடிக்கு தினமும் குறைந்தது 5 முதல் 6 மணி நேர சூரிய ஒளி தேவை. ஆனால், கோடை காலத்தின் உச்சக்கட்ட வெயிலில் இலைகள் சுருண்டு விடும் என்பதால், மிதமான வெயில் படும் இடத்தில் தொட்டியை வைப்பது நல்லது.
கடையில் வாங்கும் குடைமிளகாயில் இருந்து விதை எடுத்து வளர்ப்பது முற்றிலும் சாத்தியமானதே. பச்சை நிறக் தாய்களை தவிர்த்து, நன்கு பழுத்த சிவப்பு அல்லது மஞ்சள் நிறக் குடைமிளகாயைத் தேர்வு செய்தால், உங்கள் வீட்டுத் தொட்டியிலேயே அழகான குடைமிளகாய் செடிகளை நிச்சயம் வளர்த்தெடுக்கலாம்.
இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடைகளில் விலையுயர்ந்த விதைப் பாக்கெட்டுகளை வாங்காமலேயே, சமையலறையில் உள்ள காய்கறிகளைக் கொண்டே உங்கள் வீட்டு பால்கனி அல்லது மாடியில் ஆரோக்கியமான குடைமிளகாய் செடிகளை நீங்களே உருவாக்க முடியும்.