ஒரே ஒரு துண்டு போதும்; வீட்டுத் தொட்டியிலேயே ‘பிரண்டை’ காடு போல் வளர டிப்ஸ்!

பிரண்டையை இனி கடையில் தேட வேண்டாம். 4 அங்குல தண்டு மூலம் வீட்டுத் தொட்டியில் எளிதாக வளர்க்கும் முறை மற்றும் சமையல் குறிப்புகள் இதோ.
பிரண்டை | Veldt grape pot cultivation
பிரண்டை | Veldt grape pot cultivationImage credit: Chatgpt
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

பிரண்டையைத் தேடி இனி கடைக்கு அலையவேண்டாம். ஒரு துண்டு தண்டை தொட்டியில் நட்டால் போதும் வீட்டிலேயே எளிதாக வளர்த்து பயன்பெறலாம்.

நமது நாட்டில் நமது உடல் நலம் காக்கும் பாரம்பரிய மூலிகை வகைகள் ஏராளம். அதில் பிரண்டை மிக முக்கியமானதாக உள்ளது. குறிப்பாக பிரண்டை எலும்பு முறிவு ஏற்பட்டவர்களுக்கு உதவும் என்ற பாரம்பரிய நம்பிக்கை உள்ளது. எலும்பு வளர்ச்சி மற்றும் பழுதுபார்க்கும் செயல்பாடுகளில் பிரண்டையின் சாறுகள் தாக்கம் ஏற்படுத்தக்கூடும் என சில ஆய்வுகள் தெரிவிக்கின்றன.

சமையலிலும் சித்த மருத்துவத்திலும் முக்கிய இடம் பிடிக்கும் பிரண்டையைத் தேடி கடைகளை நாடுவோம். இனி கடைகளில் தேட வேண்டியதில்லை. வீட்டில் ஒரு சிறிய தொட்டி இருந்தாலே போதும். ஒரு துண்டு பிரண்டைத் தண்டை நட்டு வைத்தால், நாளடைவில் கொடியாக வளர்ந்து நமக்குத் தேவையான பிரண்டையை நாமே அறுவடை செய்து பயன்படுத்தலாம் என்கின்றனர் வீட்டுத் தோட்ட வல்லுநர்கள்.

குறைந்த பராமரிப்பில் வளரக்கூடிய இந்தத் தாவரத்தை மாடித்தோட்டத்திலும் பால்கனியிலும் எளிதாக வளர்க்கலாம் என்பது சிறப்பு. இனி வீட்டில் பிரண்டை வளர்ப்பு குறித்த தகவல்களைப் பார்ப்போம்..

பிரண்டை வளர்க்க நன்கு வளர்ந்த ஆரோக்கியமான பிரண்டைக் கொடியிலிருந்து சுமார் 4–6 அங்குல நீளமுள்ள தண்டுத் துண்டைத் தேர்ந்தெடுத்து எடுத்துக்கொள்ளவும்.

குறைந்தது 2–3 கணுக்கள் (Nodes) இருக்கும் தண்டாகப் பார்த்து வெட்டவும். குறிப்பாக நோய், அழுகல், கரும்புள்ளிகள் இல்லாத தண்டாக இருக்க வேண்டும்.

வெட்டிய தண்டை சில மணி நேரம் நிழலில் உலர விடலாம். மேலும் பிரண்டைத் தண்டை வெட்டும்போது வெளிவரும் சாறு சிலருக்கு அரிப்பு அல்லது எரிச்சலை ஏற்படுத்தலாம் என்பதால் முன்னெச்சரிக்கையாக கையுறை அணிந்து கையாள்வது நல்லது.

இதையும் படியுங்கள்:
கடை இஞ்சியைத் தொட்டியில் வளர்ப்பது எப்படி? எளிய வழிமுறைகள்!
பிரண்டை | Veldt grape pot cultivation

அடுத்து பிரண்டை வளர்க்கத் தேவையான தொடடி. பிரண்டை ஒரு கொடிவகைத் தாவரம் என்பதால் வளர்வதற்கு தகுந்த இடம் தேவை.

குறைந்தது 10–12 அங்குல அகலமுள்ள தொட்டியைத் தேர்ந்தெடுக்கவும்.

அடிப்பகுதியில் தண்ணீர் வெளியேறத் துளைகள் நிச்சயம் இருக்க வேண்டும்.

மண் தொட்டியாக இருந்தாலும் பிளாஸ்டிக் தொட்டியாக இருந்தாலும் பரவாயில்லை.. மேலும் பிரண்டை கொடி படர்வதற்கு குச்சி அல்லது கம்பி போன்ற ஆதாரத்தை அமைக்க வேண்டும்.

பிரண்டைக்கு நீர் தேங்காத மண் மிகவும் அவசியம். அத்துடன் மண் கலவையிலும் கவனம் தேவை. ஒரு தொட்டிக்கான மண் கலவை 40% தோட்டத்து மண்ணும், மணல் அல்லது கோகோபீட் 30% மும், 30% நன்கு மக்கிய தொழு உரம் அல்லது கம்போஸ்டும் எடுத்துக் கொண்டு அனைத்தையும் நன்றாகக் கலந்து தொட்டியில் நிரப்பவும்.

தயாரித்த மண்ணில் 2–3 அங்குல ஆழத்தில் சிறிய குழி எடுக்கவும்.

பிரண்டைத் தண்டின் ஒரு பகுதி மண்ணுக்குள் இருக்கும்படி நடவும்.

மண்ணைச் சுற்றிலும் மெதுவாக சீராக அழுத்திவிடவும். இதில் லேசாகத் தண்ணீர் தெளிக்கவும். அதிக நீர் தேவையில்லை. நேரடி வெயில் படாத, நல்ல வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வைக்கவும். தண்டு வேர்பிடித்து புதிய தளிர்கள் வருவதற்கு சில வாரங்கள் ஆகலாம். வெப்பநிலை, தண்டின் ஆரோக்கியம், மண்ணின் ஈரப்பதம் ஆகியவற்றைப் பொறுத்து காலம் மாறும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

பிரண்டை செழிப்பாக வளர சில பராமரிப்புக் குறிப்புகளைக் காண்போமா ?

பிரண்டை நன்கு வளர மிதமான சூரிய வெளிச்சம் தேவை. தினமும் 4–6 மணி நேரம் சூரிய வெளிச்சம் கிடைத்தால் நன்றாக வளரும். ஆரம்பத்தில் புதிதாக நட்ட தண்டை கடுமையான மதிய வெயிலிலிருந்து பாதுகாப்பது முக்கியம்.

பிரண்டை | Veldt grape pot cultivation
பிரண்டை | Veldt grape pot cultivation

அளவான தண்ணீர் மட்டுமே போதும். மண்ணின் மேற்பகுதி காய்ந்த பிறகு தண்ணீர் ஊற்றவும். அதிகப்படியான தண்ணீர் ஊற்றினால் தண்டு அழுகிவிடும்.

இயற்கை உரம்: மாதம் ஒருமுறை போடலாம். சிறிதளவு மண்புழு உரம் அல்லது நன்கு மக்கிய கம்போஸ்ட் சேர்க்கலாம்.

பிரண்டைகொடி படர ஆதாரம்சரியாக அமைக்க வேண்டும். கொடி வளரத் தொடங்கியதும் குச்சி அல்லது கம்பி மூலம் படர விடவும்.

தண்ணீர் தேங்கக்கூடாது என்பது முக்கியமானது. கொடி அழுகாமல் இருக்க தொட்டியின் அடியில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.

தொட்டியில் நட்டாயிற்று.. எப்போது அறுவடை செய்யலாம்?

பிரண்டை நன்றாக வளர்ந்து புதிய தண்டுகள் உருவான பிறகு தேவையான அளவு அறுவடை செய்யலாம். ஒரே நேரத்தில் முழுக் கொடியையும் வெட்டாமல், வளர்ச்சிக்கு ஏற்றவாறு தண்டுகளை மட்டும் வெட்டுவது நல்லது.

வீட்டில் பிரண்டை வளர்ப்பதால் என்ன பயன் தெரியுமா?

தேவையானபோது புதிதாக அறுவடை செய்து சமைக்கலாம். கடையில் குறைவாக வாங்குவதைத் தவிர்த்து வீட்டுப் பிரண்டையில் தாராளமாக

பிரண்டைத் துவையல், குழம்பு, பொடி போன்ற உணவுகளைச் செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
சின்ன வெங்காயம் வளர்ப்பது இவ்வளவு சுலபமா? 5 நாளில் துளிர்விடும் எளிய ரகசியம்!
பிரண்டை | Veldt grape pot cultivation

குறைந்த இடத்திலேயே வளர்க்க முடியும்.

கடையில் கிடைக்கும் பிரண்டையின் தரம், புத்துணர்ச்சி குறித்த கவலை இல்லாமல் நாமே வளர்த்து நிறைவு காணலாம். மேலும் அழகியலாக நம் வீட்டு

மாடித்தோட்டத்தில் அழகான பசுமையான கொடியாகவும் இருக்கும்.

பிரண்டை சமைக்கும்போது கவனிக்க வேண்டிய எச்சரிக்கை..

பிரண்டையைப் பச்சையாகச் சாப்பிடக்கூடாது. நன்றாகச் சுத்தம் செய்து, நார்களை நீக்கி தகுந்த முறையில் சமைத்துப் பயன்படுத்த வேண்டும். கையாளும்போது அரிப்பு ஏற்பட வாய்ப்புள்ளதால் கையுறை அணிவது நல்லது.

இனி என்ன? சிறிய இடம், ஒரு தொட்டி, ஒரு துண்டு ஆரோக்கியமான பிரண்டைத் தண்டு எடுங்கள்.உங்கள் வீட்டிலும் பிரண்டைத் தோட்டத்தை உருவாக்கி பெருமிதம் கொள்ளுங்கள்.