உருளைக்கிழங்கில் ரோஜா நட்டா வேர் பிடிக்குமா? உண்மை என்ன? சரியான வழி இதோ!

உருளைக்கிழங்கில் ரோஜா கிளையைச் செருகி நட்டால் வேர் பிடிக்குமா? இதன் அறிவியல் பின்னணி, அழுகும் அபாயம் மற்றும் சரியான மண் கலவை தயாரிப்பு முறைகளை இங்கே அறியுங்கள்.
ரோஜா | Rose plant care
ரோஜா | Rose plant careImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

ஆரம்பத்தில் பசுமையாகத் தெரிந்தாலும் சில நாட்களில் கிளை கருகிப் போவதன் பின்னணியில் உள்ள அறிவியல் காரணங்களையும், எந்தச் சிரமமுமின்றி வீட்டிலேயே ஆரோக்கியமான ரோஜா செடியை உருவாக்கும் 100% நிரூபிக்கப்பட்ட தோட்டக்கலை ரகசியங்களையும் இங்கே விரிவாக அறிந்துகொள்ளுங்கள்.

சமூக வலைதளங்களில் ரோஜா கிளையை உருளைக்கிழங்கில் செருகி நட்டால் எளிதாக வேர் பிடிக்கும் என்ற கருத்து பரவலாகக் காணப்படுகிறது. ஆனால், தாவரவியல் மற்றும் தோட்டக்கலை அடிப்படையில் பெரும்பாலும் இது சாத்தியம் இல்லை. ஒரு கட்டு கதை தான். என்னுடைய அனுபவத்தில் சில நாட்கள் ஈரப்பதம் கிடைப்பதால் கிளை பசுமையாகத் தெரிந்தாலும், நீண்டகாலம் ஆரோக்கியமாக வேர் பிடித்துச் செடியாக வளர்வதற்கு உருளைக்கிழங்கு ஒரு நம்பகமான வழி அல்ல.

இந்த முறையின் பின்னணியில் உள்ள அறிவியல் உண்மைகளும் ரோஜா கிளையில் வேர் பிடிக்கச் செய்வதற்கான சரியான தோட்டக்கலை முறையும் பற்றி இங்கே பார்க்கலாம்.

உருளைக்கிழங்கு முறையில் உள்ள உண்மையும், அறிவியலும்:

1. உருளைக்கிழங்கில் ரோஜா கிளையைச் செருகி வைக்கும் போது அதில் நீர்ச்சத்து அதிகமாக இருப்பதால், கிளையின் அடிப்பகுதி உடனடியாகக் காயாமல் சிறிது காலம் ஈரமாக இருக்கலாம். ஆனால், தாவரத்தின் வேர்கள் உருவாக ஈரப்பதத்துடன் காற்றோட்டமும் மிக அவசியம். அடர்த்தியான உருளைக்கிழங்கின் உள்ளே காற்றோட்டம் இல்லாததால், கிளையின் அடிப்பகுதி அழுகும் வாய்ப்பு அதிகம்.

இதையும் படியுங்கள்:
சின்ன வெங்காயம் வளர்ப்பது இவ்வளவு சுலபமா? 5 நாளில் துளிர்விடும் எளிய ரகசியம்!
ரோஜா | Rose plant care

2. உருளைக்கிழங்கில் மாவுச்சத்து இருந்தாலும் வேர்கள் உருவாவதற்குத் தேவையான வேர் வளர்ச்சி ஹார்மோன்கள் அல்லது உடனடியாகப் பயன்படுத்தக்கூடிய கனிமச் சத்துக்கள் உருளைக்கிழங்கில் ரோஜா கம்பை செருகப்பட்டாலும் கிளைக்கு கிடைத்துவிடாது.

3. மண்ணில் புதைக்கப்பட்ட உருளைக்கிழங்கு சில வாரங்களில் சிதைந்து அழுகத் தொடங்கும். இது ரோஜா கிளையின் அடிப்பகுதியிலும் பூஞ்சை மற்றும் பாக்டீரியா தொற்றை ஏற்படுத்தி, கிளையைக் கருகச் செய்துவிடும்.

சில சமயங்களில் கிளையில் உள்ள சேமிப்புச் சத்தைக் கொண்டு சிறிய இலைத் துளிர்கள் வெளிவரலாம். ஆனால், உள்ளே உறுதியான வேர்கள் உருவாகவில்லை என்றால் அந்தத் துளிர்கள் சில நாட்களிலேயே வாடிச் செடி காய்ந்து விடும்.

ரோஜா கிளையில் வேர் பிடிக்கச் செய்வதற்கான சரியான முறை:

ரோஜா செடியை வெற்றிகரமாக் கிளை மூலம் உருவாக்க உருளைக்கிழங்கை தவிர்த்து, நல்ல காற்றோட்டமும், வடி காலும் கொண்ட சரியான வழி முறையையும், முறையான பராமரிப்பையும் பின்பற்ற வேண்டும்.

1. சரியான கிளையைத் தேர்ந்தெடூத்தல்: மிகவும் இளசான கிளைகளையும், மிகவும் முற்றிய மரத் தன்மை கொண்ட பழைய கிளைகளையும் தவிர்க்கவும். அண்மையில் பூத்த கிளையிலிருந்து, பென்சில் தடிமன், ஆரோக்கியமான செமி ஹார்டுவுட் கிளையைத் தேர்ந்தெடுக்கவும். கிளையின் நீளம் சுமார் 6 முதல் 8 அங்குலம் இருக்குமாறும், குறைந்தது 3 முதல் 4 கணுக்கள் இருக்கும் படியும் வெட்டவும்.

2. வெட்டும் முறை மற்றும் இலைகளை நீக்குதல்: கிளையின் கீழ்ப்பகுதியை கணுவுக்குள் சற்று கீழே (சுமார் 0.5–1 செ.மீ கீழே) 45 டிகிரி சாய்வாக கூர்மையான கத்தி அல்லது கத்தரிக்கோல் வெட்டவும். இது வேர் உருவாகும் பரப்பை அதிகரிக்கும். கிளையின் கீழ்ப்பகுதியில் உள்ள இலைகள் மற்றும் முட்களை நீக்கவும்; மேல் பகுதியில் 2 முதல் 3 சிறிய இலைகளை மட்டும் விட்டு வைக்கவும்.

அதிக இலைகள் இருந்தால் ஆவியாதல் மூலம் கிளையில் உள்ள நீர்ச்சத்து வேகமாக வெளியேறிவிடும்.

ரோஜா |Rose plant care
ரோஜா |Rose plant careImage credit: Chatgpt

3. வேர் ஊக்கி பயன்படுத்துதல்: வெட்டிய கிளையின் அடிப்பகுதியில் வேர் வளர்ச்சி ஹார்மோன் (IBA/NAA) பொடியைத் தடவுவது வேர் பிடிக்கும் வாய்ப்பை கணிசமாக உயர்த்தும். இயற்கை வழியில் தேன் அல்லது கற்றாழை ஜெல் போன்றவற்றை மெல்லியதாகத் தடவியும் முயற்சிக்கலாம் (பூஞ்சை வளராமல் இருப்பதை கண்காணிக்க வேண்டும்).

4. சரியான மண் கலவை மற்றும் நடவு: நன்கு சலித்த தோட்டத்து மண் (1 பங்கு) + ஆற்று மணல் (1 பங்கு) + நன்கு மக்க வைத்த எரு அல்லது கோகோபீட் (1 பங்கு) கலந்த மண் கலவை வேண்டும்.

தொட்டியின் அடிப்பகுதியில் அதிகப்படியான நீர் வெளியேற வடிகால் துளைகள் இருப்பதை உறுதி செய்யவும். கிளையை 2 முதல் 3 அங்குலம் ஆழத்திற்கு மண்ணில் செருகி, சுற்றியுள்ள மண்ணை மென்மையாக அழுத்தி விடவும்.

5. பராமரிப்பு மற்றும் வெளிச்சம்: தொட்டியை நேரடி கடும் வெயிலில் வைக்காமல், பிரகாசமான மறைமுக வெளிச்சத்தில் லேசான வெயிலில் வைக்கவும்.

இதையும் படியுங்கள்:
வீணாகும் அன்னாசி தலைப்பகுதியை எளிய முறையில் தொட்டியில் வளர்ப்பது எப்படி?
ரோஜா | Rose plant care

பொதுவாக 3 முதல் 6 வாரங்களில் வேர்கள் உருவாகத் தொடங்கும். கிளையை மெதுவாக இழுக்கும்போது லேசான எதிர்ப்புத் தெரிந்தால், வேர் பிடித்துள்ளதை அறியலாம்.

ரோஜா கிளையை உருளைக்கிழங்கில் நட்டு வளர்ப்பது ஒரு சுவாரசியமாக தோன்றினாலும், உறுதியான வேர்கள் உருவாகி ஆரோக்கியமான ரோஜா செடியாக வளர சரியான கிளைத் தேர்வு, காற்றோட்டமான மண் கலவை, சீரான ஈரப்பதம் மற்றும் பொறுமையான பராமரிப்பு ஆகியவையே உண்மையான அடிப்படை.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், சில வாரங்களிலேயே உங்கள் வீட்டுத் தோட்டத்தில் உறுதியான வேர்களுடன் கூடிய புதிய ரோஜா செடிகளை நீங்களே எளிதாக உருவாக்க முடியும்.