கொத்தமல்லி விதை முளைக்கவில்லையா? இந்த ஒரு ட்ரிக்ஸ் போதும்!

கொத்தமல்லி விதைகள் தொட்டியில் முளைக்கவில்லையா? விதையை இரண்டாக உடைத்து விரைவாக முளைக்க வைக்கும் எளிய ரகசியத்தை தெரிந்து கொள்ளுங்கள்
கொத்தமல்லி விதை | coriander seeds
கொத்தமல்லி விதை | coriander seedsImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

நம் அன்றாட சமையலறையில் மணத்திற்காகவும், சுவைக்காகவும் பயன்படுத்தப் படும் கொத்தமல்லி தழையை நம் வீட்டு மாடித்தோட்டத்திலோ அல்லது சிறிய தொட்டிகளிலோ வளர்ப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கும் ஒரு செயலாகும். இருப்பினும், பலரும் எதிர்கொள்ளும் ஒரு சவால் என்னவெனில் கொத்தமல்லி விதைகளைப் போட்டு பல நாட்களாகியும் அவை முளைக்காமல் போவதுதான். “ஏன் கொத்தமல்லி விதை முளைக்கவில்லை?”, “இதற்கு என்ன தீர்வு?” என்பதை ஆராய்ந்து, விதையைச் சரியாக உடைத்து விரைவாக முளைக்க வைக்கும் ரகசியத்தை இங்கே பார்க்கலாம்.

கொத்தமல்லி விதைகள் தொட்டியில் முளைக்காமல் போவதற்கான முதன்மைக் காரணங்கள்:

நாம் கடைகளில் வாங்கும் கொத்தமல்லி விதை உண்மையில் ஒரு முழுமையான உறை ஆகும். இதற்குள் இரண்டு தனித்தனி விதைகள் பாதுகாப்பாக மூடி இருக்கும். இதன் வெளிப்புற ஓடு மிகவும் கடினமாக இருப்பதால் தண்ணீர் மற்றும் காற்று உள்ளே ஊடுருவி விதையை சென்றடைய நீண்ட நாட்கள் ஆகும். மேலும் விதைகளை மண்ணின் மேல் பகுதியில் தூவாமல் மிகவும் ஆழமாக புதைத்து விட்டால் சிறிய முளைகள் மண்ணைத் துளைத்துக் கொண்டு மேலே வர முடியாமல் உள்ளேயே அழுகி விடும்.

கொத்தமல்லி விதை முளைக்கும் வரை மண் எப்போதும் மிதமான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதிக தண்ணீர் ஊற்றினால் விதைகள் அழுகிவிடும்; அதே சமயம் மண் முற்றிலும் காய்ந்து விட்டாலும் முளைக்கும் திறன் அழிந்து விடும். மேலும் சமையலுக்குப் பயன்படுத்தும் வறுக்கப்பட்ட கொத்தமல்லி விதைகளையோ அல்லது பழைய முளைப்பு திறன் குறைந்த விதைகளையோ பயன்படுத்தினால் அவை முளைக்காது.

இதற்கான தீர்வு:

விதையை உடைத்து விதைக்கும் முறை: கொத்தமல்லி விதையில் 100 சதவீதம் முளைப்பதற்கு விதைகளை இரண்டாகப் பிளந்து விதைப்பதே சிறந்த முறையாகும்.

coriander seeds
coriander seedsImage credit: Gemini AI

விதையைச் சரியாக உடைப்பது எப்படி?: முதலில் நல்ல தரமான வறுக்கப்படாத புதிதாக வாங்கிய முழு கொத்தமல்லி விதைகளை தேர்ந்தெடுக்கவும் விதைகளை ஒரு சுத்தமான துணியிலோ அல்லது பிளாஸ்டிக் தாளிலோ பரப்பி வைக்கவும். ஒரு மரப் பலகை, சப்பாத்தி உருளை அல்லது சமையலறை இடிக் கல்லைக் கொண்டு விதைகள் மீது மென்மையாக உருட்டவும். விதைகள் தூளாக உடைந்து விடக் கூடாது; அதன் வெளி ஓடு பிளந்து இரண்டு பாதிகளாக பிரிய வேண்டும்.

இதையும் படியுங்கள்:
ரோஜா செடியின் இலைகள் கருப்பாக மாறுதா? இந்த 4 எளிய வழிகளை ஃபாலோ பண்ணுங்க!
கொத்தமல்லி விதை | coriander seeds

உடைத்த விதைகளை விதைப்பதற்கு முன் 8 முதல் 12 மணி நேரம் நீரில் ஊறவைத்து விதைத்தால், முளைப்புத் தூண்டல் இன்னும் விரைவாக நடக்கும். விதைக்கும் சரியான வழிமுறைகள்:

விதைகளைத் தயார் செய்த பிறகு, தொட்டியில் விதைக்கும் போது பின்பற்ற வேண்டிய படிகள்:

மண் கலவை: கொத்தமல்லி செடிக்கு நீர் தேங்காத, இலகுவான மண் அவசியம். 50% தோட்டத்து மண், 30% மண்புழு உரம் அல்லது தொழு உரம், 20% தேங்காய் நார் கழிவு அல்லது மணல். தயாரித்த மண் கலவையின் மேல் உடைத்த விதைகளை சீராகத் தூவவும். விதைகளின் மேல் அரை அங்குலத்திற்கு மிகாமல் மெல்லிய மண் அல்லது தேங்காய் நார் கழிவைத் தூவி மூடி விட வேண்டும். பூவாளி அல்லது தெளிப்பான் பயன்படுத்தி லேசாக நீர் தெளிக்க வேண்டும். தண்ணீர் வேகமாக அடித்தால் விதைகள் அடித்து செல்லப்படும்.

தொட்டியை விதைத்த முதல் சில நாட்களுக்கு பகுதி நிழலிலும், முளைத்து வந்த பிறகு நாளொன்றுக்கு 4 முதல் 5 மணி நேரம் மிதமான வெயில் படும் இடத்திலும் வைக்க வேண்டும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்தில் தொட்டியில் உள்ள கற்றாழையை அழுகாமல் பாதுகாக்க 4 வழிகள்!
கொத்தமல்லி விதை | coriander seeds

விதைகள் பிளக்கப் பட்டு விதைக்க படுவதால் 5 முதல் 8 நாட்களுக்குள் சிறிய முளைகள் வெளியே தெரியும். செடிகள் வளர்ந்த பிறகு மண் காய்ந்த பிறகே நீர் ஊற்ற வேண்டும்.

விதைத்த 35 முதல் 45 நாட்களில் பசுமையான, நறுமணம் மிக்க கொத்தமல்லித் தழைகளை அறுவடை செய்ய முடியும்.

கொத்தமல்லி விதையை மென்மையாக இரண்டாக உடைத்து, சரியான மண் கலவையில் மிதமான ஈரப்பதத்துடன் விதைத்தால் தொட்டி நிறைய பசுமையான கொத்தமல்லியை மிக எளிதாக வளர்க்க முடியும். இயற்கை உரம் தந்து நாம் வீட்டில் வளர்க்கும் கொத்தமல்லி தரும் நறுமணமும் ஆரோக்கியமும் கடைகளில் வாங்குவதற்கு ஈடாகாது.