மழைக்காலத்தில் தொட்டியில் உள்ள கற்றாழையை அழுகாமல் பாதுகாக்க 4 வழிகள்!

தொடர் மழையில் இருந்து உங்கள் வீட்டுத் தோட்ட கற்றாழை செடியை பாதுகாத்து, எப்போதும் பசுமையாக வைத்திருக்க உதவும் 4 எளிய டிப்ஸ்.
கற்றாழை | aloe vera care
கற்றாழை | aloe vera careImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

கோடைக்காலத்தில் பசுமையாகக் காட்சியளிக்கும் கற்றாழைச் செடிகள், மழைக்காலம் வந்தாலே வேர் அழுகி மஞ்சள் நிறமாக மாறி வீணாகிவிடுகின்றனவா? எந்தவொரு சிரமமும் இல்லாமல் வளரும் இந்தக் குட்டித் தாவரத்தை, பருவமழையின் அதிகப்படியான நீரிலிருந்து எப்படிப் பாதுகாப்பது? செடிகள் எப்போதும் வாடாமல் செழிப்பாக இருக்க 4 மிக முக்கியமான மற்றும் எளிய வழிமுறைகளைத் தெரிந்து கொள்ள தொடர்ந்து படியுங்கள்!

வீட்டுத் தோட்டத்திலோ அல்லது பால்கனியிலோ நாம் அதிக சிரமமின்றி வளர்க்கும் செடிகளில் கற்றாழைக்கு எப்போதுமே தனி இடம் உண்டு. எந்தவொரு பராமரிப்பும் இல்லாமல் வறண்ட மண்ணிலும் செழித்து வளரும் இதன் தன்மை அனைவருக்கும் பிடிக்கும். ஆனால் கோடை காலத்திலும் பச்சை பசேல் என்று இருக்கும் கற்றாழைச் செடிகள் மழைக்காலம் வந்தாலே தொடர் மழையின் காரணத்தால் கற்றாழையின் வேர்கள் அழுகி இலைகள் மஞ்சள் நிறமாகி வீணாகி விடும். அதனால் மழைக்காலத்தில் கற்றாழை செடிகளை பாதுகாக்க பின்பற்றும் 4 மிக முக்கியமான வழிகள் பற்றி பார்க்கலாம்.

1) சரியான வடிநீர் வசதியுள்ள தொட்டியும் அதற்கேற்ற மண்ணும்:

கற்றாழை ஒரு சதைப்பற்றுள்ள தாவரம். இதன் இலைகளில் தண்ணீரை சேமித்து வைத்து கொள்ளும் ஆற்றல் இருப்பதால் இதற்கு அடிக்கடி தண்ணீர் ஊற்ற தேவையில்லை மழைக்காலத்தில் இயற்கையாக வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருக்கும். எனவே கற்றாழைச் செடிகள் பிளாஸ்டிக் தொட்டியில் இருந்தால் மண் தொட்டிக்கு மாற்றவும். அல்லது தொட்டியின் அடிப்பகுதியில் உள்ள துளைகள் சரியாக இருக்கிறதா என்பதை உறுதி செய்யவும்.

கற்றாழை | aloe vera care
கற்றாழை | aloe vera careImage credit: Gemini AI

தண்ணீர் உடனே வடியும் வகையில் மணல் மற்றும் தேங்காய் நார்க்கழிவு கலந்த இலகுவான மண்ணை பயன்படுத்தவும். ஒருபோதும் களிமண் போன்ற இறுகிய மண்ணை பயன்படுத்தக்கூடாது. ஏனெனில் தண்ணீரை தேக்கி வைத்து வேர்களை அழுக செய்து விடும்.

2) தேவைக்கேற்ப பாதுகாப்பான இடத்திற்கு மாற்றுதல்:

முதலில் செடிகள் தடைகள் இல்லாத மழைநீர் படும் இடத்தில் இருந்தால் தொடர் மழை பெய்யும் போது கற்றாழைத் தொட்டிகளைத் தாழ்வாரத்திற்கோ அல்லது பால்கனியின் மறைவான பகுதிக்கோ மாற்றி விடலாம். மழை நின்ற பிறகு மீண்டும் சூரிய ஒளி படும் இடத்திற்கு மாற்றுவதும் செடியை நோய்களிலிருந்து காப்பாற்ற உதவுகிறது.

இதையும் படியுங்கள்:
மாடியில் உள்ள செடிகளின் இலைகள் மஞ்சள் நிறமாக மாறுவது ஏன்? தடுப்பது எப்படி?
கற்றாழை | aloe vera care

3) நீர்ப்பாசனத்தைக் முழுமையாக தவிர்த்தல்:

கோடைகாலத்தில் தினமும் அல்லது இரண்டு நாளைக்கு ஒரு முறை தண்ணீர் ஊற்றுவது நல்லது. ஆனால் மழைக்காலம் வந்து விட்டால் நீர்பாசன முறையை முற்றிலும் மாற்றி விடவும். மழைக்காலத்தில் செடிக்குத் தேவையான ஈரப்பதம் காற்றில் இருந்தும், லேசான சாரல் மழை மூலமாக கிடைத்து விடும். எனவே தொட்டியில் உள்ள மண் முழுமையாக காய்ந்திருக்கிதா என்பதை விரல்களால் தொட்டு சோதித்துப் பார்த்த பிறகு மண் முற்றிலும் வறண்டு இருந்தால் மட்டுமே மிக குறைந்த அளவு தண்ணீர் ஊற்றலாம். சிலர் இந்த விஷயம் தெரியாமலேயே மழைக்காலத்திலும் வழக்கம் போல் தண்ணீர் ஊற்றி செடியை கொன்று விடுகிறார்கள். ஒரு நாளும் இவ்வாறு செய்யாமல் பார்த்துக் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மிளகாய் செடியில் பூக்கள் கொட்டுகிறதா? கொத்து கொத்தாக காய் காய்க்க டிப்ஸ்!
கற்றாழை | aloe vera care

4) செடியைச் சுற்றியுள்ள களைகளை அகற்றுவதும், காற்றோட்டத்தை உறுதி செய்வதும்:

மழைக்காலத்தில் செடியின் அடிப்பகுதியில் தேவையில்லாத களைச் செடிகள் விரைவாக வளரத் தொடங்கும். இந்த சிறிய களைச் செடிகள் மண்ணில் உள்ள சத்துக்களையும், ஈரப்பதத்தையும் உறிஞ்சிக் கொள்வதோடு கற்றாழையின் வேர்களுக்கு அருகில் காற்றோட்டம் செல்வதை தடை செய்கின்றன.

எனவே அடிக்கடி கற்றாழைச் செடியைச் சுற்றியுள்ள மண்ணை லேசாக கிளறி விட்டு, களைகளை அகற்றவும். மேலும் தொட்டிகளை ஒன்றுக்கொன்று நெருக்கமாக வைக்காமல் போதுமான இடைவெளியில் வைக்கலாம். நல்ல காற்றோட்டம் கிடைப்பது இலைகளில் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுத்து கற்றாழையை எப்போதும் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கற்றாழை என்பது அதிகத் தண்ணீர் தேவையில்லாத ஒரு எளிய தாவரம். மழைக்காலத்தில் நாம் செய்ய வேண்டியதெல்லாம் இயற்கையின் அதிகப்படியான நீரிலிருந்து அதை பாதுகாப்பது மட்டுமே. இந்த 4 எளிய முறைகளை கடைப்பிடிப்பதன் மூலம் கற்றாழைச் செடிகள் எந்த காலத்திலும் வாடி விடாமல் பசுமையாகவும், ஆரோக்கியமாகவும் வளர முடிகிறது. எனவே கற்றாழைச் செடியை வளர்ப்பவர்கள் இந்த முறையை பின்பற்றி உங்கள் செடிகளை பாதுகாப்பாக வைக்கலாம்.