
சுமார் ஒன்றரை லட்சம் ஆண்டுகளுக்கு முன்பு பூமியில் வாழ்ந்த பழுப்புக் கரடிகளே, பரிணாம வளர்ச்சி பெற்று, குளிர் பிரதேசத்தில் வாழ்வதற்கேற்ப உடலைத் தகவமைத்துக் கொண்டு துருவக்கரடிகளாக மாறியிருக்கின்றன.
வட துருவத்தில் மட்டுமே துருவக்கரடிகள் வாழ்கின்றன. வட துருவத்தை ஒட்டிய கனடா, ரஷ்யா, அலாஸ்கா, கிரீன்லாந்து, நார்வே பகுதிகளில் உறைந்த கடல் பரப்புகளில் மட்டுமே இவை காணப்படுகின்றன.
இவை பிறக்கும்போது ஒரு பவுண்ட் எடைக்கும் குறைவாகவே இருக்கும்! பல் கிடையாது. கண்பார்வை இருக்காது. அது பிறக்கும் சூழலில் வெப்பநிலை மைனஸ் 50 டிகிரி பாரன்ஹீட்டாகக்கூட இருக்கலாம்.
அம்மா கரடியின் வெதுவெதுப்பான வயிற்றுக்குள் இருந்து உறைபனிச் சூழலில் வந்து பிறக்கும் அந்தப் பனிக்கரடிக் குட்டிகளுக்கு, மிக விரைவிலேயே ஆர்டிக்கின் அசாதாரணச் சூழலுக்கேற்ப தன்னைத் தகவமைத்துக் கொள்ளும் இயற்கையான திறன் உண்டு.
தாய்ப் பனிக்கரடி, பனிப்பரப்பில் குகைப் போன்ற அமைப்பை உருவாக்கி குட்டிகளை ஈன்றெடுக்கும். கொடும்பனிக்காலத்தில் பல மாதங்களுக்குக் குட்டிகளைவிட்டு நகராது. உணவு தேடவும் போகாது. பட்டினிதான் கிடக்கும். ஆனால், தனது குழந்தைகளுக்கு அதீதக் கொழுப்புச் சத்து நிறைந்த தாய்ப்பாலைக் கொடுத்துக் கொண்டே இருக்கும். அந்தத் தாய்ப்பாசம், அந்தப் பனியைவிடத் தூய்மையானது. குட்டிகள், கிட்டத்தட்ட இரண்டேகால் வயது வரை தாயுடனேயே வாழும்.
வளர்ந்த ஓர் ஆண் பனிக்கரடியின் எடை அதிகபட்சம் 770 கிலோ வரை இருக்கும். பெண் பனிக்கரடியின் எடை 300 கிலோ வரை இருக்கும். உலகில் உலவும் மாமிச உண்ணிகளில், ஆபத்தான விலங்குகளில் அளவில் பெரியவை ஆண் பனிக்கரடிகள்தாம். அவை எழுந்து நின்றால் 8 அடி உயரம் கொண்டவை.
நிலப்பரப்பிலும் பனிப்பரப்பிலும் மணிக்கு நாற்பது கிலோ மீட்டர் வேகத்தில் ஓடும் பனிக்கரடியின் மேலுள்ள ரோமங்கள் நிறமற்றவை. அவை ஒளியை வெள்ளை நிறத்தில் பிரதிபலிப்பதால் பனிக்கரடிகள் பனியின் நிறத்திலேயே தோற்றமளிக்கின்றன. அவற்றின் மேல்தோலின் நிறம் கருப்புதான். கொழுப்புத் திசுக்களால் ஆன அந்த 4 இன்ச் தடிமனான தோலே மைனஸ் டிகிரி குளிரிலும் பனிக்கரடியைப் பாதுகாக்கிறது.
பனிக்கரடிகள் பொதுவாக கடலை ஒட்டிய பனிப்பிரப்பில் மட்டுமே வசிக்கின்றன. காரணம், கடல்வாழ் உயிரினங்களே அவற்றுக்கான அடிப்படை உணவு. ஒரு பனிக்கரடி ஸீலை (seal) வேட்டையாட பத்து முறை முயற்சி செய்தால், அதில் ஓரிரு முறை மட்டுமே வெற்றி பெறும். அதன் வாழ்வில் பாதி நேரத்தை ஸீலை வேட்டையாடுவதில் மட்டுமே கழிக்கிறது.
பனிக்கரடிகளுக்கு ஒவ்வொரு குளிர் காலத்திலும் உணவே கிடைக்காது. மாதக்கணக்கில் எதுவும் புசிக்காமல் பிழைத்திருக்க வேண்டும். எனில், இப்போதே உரியதை வேட்டையாடி உடலுக்கு அதீகக் கொழுப்புச் சத்தைக் கொடுக்கும் உணவைத் தின்று தயாராக வேண்டும். அப்படிப்பட்ட ஒரே உணவு ஸீல் மட்டுமே.
பனிக்கரடி, தன் உடல் எடையில் 20% எடை கொண்ட உணவை ஒரே வேளையில் உண்ணும் திறன் கொண்டது. அதில் 84% புரதச்சத்தையும், 97% கொழுப்புச்சத்தையும் கிரகித்துக் கொள்ளும் அளவுக்கு அதன் செரிமான மண்டலம் வலிமையானது.
இத்தனை நூற்றாண்டுகளாக பனிக்கரடிகளே வட துருவப்பகுதிகளைப் பாதுகாத்தன என்பதும் உண்மை. அதனால், அங்கே வாழும் உயிரினங்கள் எல்லாம் அதனதன் போக்கில் தோன்றி, வளர்ந்து, வாழ்ந்து, மறைந்தன. உணவுச்சங்கிலி எந்தவிதமானத் தொந்தரவும் இன்றி நீடித்தது. எப்போது மனிதன் தன் சுயநலத்துக்காக அந்தப் பனிப்பரப்புக்குள் நுழைந்தானோ, அந்த உயிரினங்களை நேரடியாகவும் மறைமுகமாகவும் வேட்டையாடினானோ, கொஞ்சம்கூடப் பொறுப்பே இன்றி எரிவாயு மற்றும் எண்ணெய் எடுக்கிறேன் என்று சுற்றுச்சூழலைக் கெடுத்தானோ, வளிமண்டலத்தில் கார்பன் உமிழ்வை அதிகமாக்கினானோ, அப்போதே துருவப்பகுதியில் தலைகீழ் மாறுதல்கள் தொடங்கிவிட்டன.
பொதுவாகவே பனிக்கரடிக்கு நீந்தப் பிடிக்கும். கடலில் ஒரு மணி நேரத்துக்கு ஆறு மைல்களை வரை அபாரமாக நீந்தக்கூடியது. பல மணி நேரங்கள்கூட தொடர்ந்து நீந்தக்கூடியது.
ஆனால், இப்போதெல்லாம் வட துருவத்தின் கோடைக்காலங்களில் பனிக்கரடிகள் நாள்கணக்கில் நீந்துகின்றன. உருகிக் கரைந்து காணாமல்போல தன் பனிப்பரப்பை இழந்து, இன்னொரு பனிப்பரப்பைத் தேடி நூற்றுக்கணக்கான மைல்கள் நீந்திக் கொண்டே இருக்கின்றன. எதிரி மனிதன்தான் என்று உணர்ந்தபடி எதிர் நீச்சலடிக்கின்றன.
துருவப்பகுதிகளில் புவிவெப்பமயமாதல் மற்றும் பருவ நிலை மாற்றங்களால் பனிப்பாறைகள் உருகிக்கொண்டே இருப்பதால் 2100-ஆம் ஆண்டுக்குள் துருவக்கரடிகள் முற்றிலும் அழிந்துபோக வாய்ப்பிருக்கிறது. இது சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான கனடாவின் டோராண்டோ பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கும் செய்தி.