சளி, இருமலுக்கு கைகொடுக்கும் கற்பூரவள்ளி! தொட்டியில் எளிதாக வளர்க்க 4 வழிகள்!

குறைந்த பராமரிப்பில் மாடித் தோட்டத்தில் கற்பூரவள்ளி செடியை செழிப்பாக வளர்த்து, சளி மற்றும் இருமலுக்கான தீர்வை வீட்டிலேயே பெறுங்கள்.
கற்பூரவள்ளி | Indian borage plant care
கற்பூரவள்ளி | Indian borage plant careImage credit: Chatgpt
இந்திராணி தங்கவேல்

தஞ்சாவூரைச் சேர்ந்த இந்திராணி தங்கவேல், மங்கையர் மலரில் வெளியான முதல் கட்டுரை மூலம் எழுத்துப் பயணத்தைத் தொடங்கியவர், இன்று கல்கி ஆன்லைனில் தொடர்ந்து எழுதி வருகிறார். அருமையான சிறுகதைகளும் பயனுள்ள பல கட்டுரைகளும் எழுத வல்லவர்.

Updated on: 

அற்புத மூலிகையான கற்பூரவள்ளியை உங்கள் வீட்டிலேயே மிகக் குறைந்த பராமரிப்பில் பால்கனியிலோ அல்லது அழகிய தொங்கும் தொட்டியிலோ செழிப்பாக வளர்ப்பது எப்படி? தெரிந்து கொள்ளக் கட்டுரையைத் தொடர்ந்து படியுங்கள்!

கற்பூரவள்ளி இலைகளின் பயன்களை சொல்லி மாளாது. சளி ஜுரம் என்று மழை குளிர் காலங்களில் வந்து விட்டால் கற்பூரவள்ளியில் கஷாயம் முதல் பஜ்ஜி வரை போட்டு பயன்படுத்துவது உண்டு. அதற்கு வீட்டிலேயே அந்த செடியை வளர்த்தால் ஆபத்துக்கும் உதவும். மற்றவர்களுக்கும் கொடுத்து உதவலாம். அதை வீட்டிலேயே வளர்ப்பதும் எளிது.

இந்த கற்பூரவல்லி (Indian Borage / Mexican Mint) மிகக் குறைந்த பராமரிப்பிலேயே வேகமாக வளரக்கூடிய ஒரு மூலிகைச் செடியாகும். தொட்டியில் இதைச் செழிப்பாகவும், பெரிய இலைகளுடனும் வளர்ப்பதற்கான நான்கு எளிய வழிகள் பற்றி இப்பதிவில் காண்போம்:

தொட்டிகள் அளவு:

ஓமவள்ளி என்று அழைக்கப்படும் கற்பூரவள்ளி செடியை சாதாரண தொட்டியில் பால்கனியில் வைத்தும் வளர்க்கலாம். அழகாக வளர்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் தொங்கும் தொட்டியில் வைத்தும் வளர்க்கலாம்.

ஓமவல்லி செடி நன்கு புதர் போல படர்ந்து வளரும் தன்மை உடையது என்பதால் அதற்கு 8 முதல் 15 இன்ச் (20-30 சென்டிமீட்டர்) அகலமும், 6-8 இன்ச் (15ல் இருந்து 20 சென்டிமீட்டர்) ஆழமும் கொண்ட தொட்டி போதுமானது.

தொங்கும் தொட்டி என்றால் ஓமவள்ளி கிளைகள் வளர வளர தொட்டிக்கு வெளியே தொங்கும் தன்மை கொண்டவை என்பதால் 8 - 10 இன்ச் அகலம் உள்ள தொங்கும் தொட்டிகளில் இதனை அழகாக வளர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டு தொட்டியில் எலுமிச்சை செடி காய்க்க வில்லையா? இந்த 4 தவறுகளை உடனே திருத்துங்க!
கற்பூரவள்ளி | Indian borage plant care

தொங்குந்தொட்டியில் வளர்த்தாலும் தொட்டியை தரையில் வைத்து வளர்த்தாலும் இதனை வளர்க்கும் முறை, அதற்கு பயன்படுத்தப்படும் உரம் போன்ற பொருள் தண்ணீர் எல்லாம் ஒரே மாதிரியானது தான்.

வளர்ப்பு முறைக்கு ஏற்ப மண் தொட்டியை எடுத்துக்கொண்டு அதில் தண்ணீர் 50% தோட்டத்து மண், 30% ஆற்று மணல் (அல்லது கோகோபீட்) மற்றும் 20% மண்புழு உரம் கலந்து தொட்டியில் இடவும். தொட்டியின் அடியில் தண்ணீர் வெளியேறத் துளைகள் இருப்பதை கவனித்து வாங்க வேண்டும். அப்படி இல்லையென்றால் நீங்களே போட்டு விட வேண்டும்.

அளவான தண்ணீர் ஊற்றுதல்:

கற்பூரவள்ளி செடியின் வேர்கள் அதிக ஆழமாக செல்லாது என்பதால் அதிக ஆழமில்லாத தொட்டியில் அதிகப்படியான தண்ணீர் ஊற்றினால் ஈரம் தேங்கி வேர் அழுக வாய்ப்புள்ளது. அதனால் செடியின் தொட்டியின் மேல் மண் காய்ந்திருப்பதைத் தொட்டுப் பார்த்து, 2 அல்லது 3 நாட்களுக்கு ஒருமுறை மட்டும் தண்ணீர் ஊற்றினால் போதும். அப்படி ஊற்றும் போது இலைகளின் மீது தண்ணீர் தேங்காமல் வேர்ப் பகுதியில் ஊற்றுவது அவசியம்.

கற்பூரவள்ளி | Indian borage plant care
கற்பூரவள்ளி | Indian borage plant careImage credit: Gemini AI

மிதமான சூரிய ஒளி:

கற்பூரவல்லிக்குத் தினமும் 3 முதல் 4 மணி நேரம் காலை அல்லது மாலை நேர மிதமான சூரிய ஒளி கிடைத்தால் போதுமானது. உச்சி வெயிலில் நேரடியாக வைத்தால் இலைகள் கருகிப் போக வாய்ப்புள்ளது; எனவே, பால்கனி அல்லது மாடியில் சற்று நிழல் படும் இடத்தில் வைப்பது செழிப்பான வளர்ச்சிக்கு உதவும்.

அதேபோல் வீட்டு தோட்டத்தில் மண்ணில் வளர விடுபவர்களும் சற்று நிழலும் வெயிலும் உள்ள இடமாக பார்த்து இந்த செடியை நட்டு வளர்த்தால் போதுமான அளவு சூரிய ஒளி கிடைத்து செடி கருகாமல் ஒரே சீரான வளர்ச்சியைப் பெறுவதை காணலாம். அந்த பெரிய இலைகளை பறித்து உபயோகப்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
தக்காளிச் செடியில் பூக்கள் கொத்து கொத்தாய் உதிர்கிறதா? காய் பிடிக்க 4 எளிய வழிகள்!
கற்பூரவள்ளி | Indian borage plant care

நுனியைக் கிள்ளி விடுதல் மற்றும் இயற்கை உரம்:

ஓமவல்லி செடியில் ஒரு அதிசயம் என்னவென்றால் நாம் எப்படி விடுகிறோமோ அப்படி எல்லாம் வளரும். ஆதலால் செடி ஒரே கிளையாக நீளமாக வளர்வதைத் தடுத்துப் புதர் போல அடர்த்தியாக வளர, அதன் நுனிப் பகுதியை அவ்வப்போது கிள்ளி (Pruning) விடவேண்டும். மாதத்திற்கு ஒருமுறை கைப்பிடி அளவு மண்புழு உரம் அல்லது காய்ந்த சாண எரு இட்டால் இலைகள் பெரியதாகவும் பசுமையாகவும் வளரும்.

தொட்டி வாங்கும் பொழுதே இரண்டு தொட்டிகளை அதிகமாக வாங்கி வைத்து அதில் இட வேண்டிய மண், உரம் போன்றவற்றை போட்டு வைத்துக் கொண்டால் கிள்ளி எடுக்கும் தண்டுகளை இதில் நட்டு அதிக பயன்பெறலாம்.

இந்த 4 வழிகளை பின்பற்றினால் வீட்டுத் தொட்டியில் அழகாக ஓம வள்ளி செடிகளை வளர்த்து பயன்படுத்தலாம்.

இதைப் படிப்பவர்கள் ஓமவள்ளி செடி வளர்க்கும் விதத்தைப் பற்றி நன்றாக தெரிந்து கொள்வார்கள். வீட்டிலும் வளர்க்க முற்படுவார்கள். அதற்கு இது ஒரு நல்ல வழிகாட்டியாக பயன்படும்.