வீட்டு தொட்டியில் எலுமிச்சை செடி காய்க்க வில்லையா? இந்த 4 தவறுகளை உடனே திருத்துங்க!

பால்கனி தொட்டியில் எலுமிச்சை செடி பூக்கவோ காய்க்கவோ இல்லையா? எளிய பராமரிப்பு முறைகள் மற்றும் காரணங்களை தெரிந்து கொள்ளுங்கள்.
எலுமிச்சை செடி | Lemon Plant
எலுமிச்சை செடி | Lemon PlantImage credit: Chatgpt
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

தொட்டியில் செழித்து வளரும் எலுமிச்சைச் செடி பூக்கவோ காய்க்கவோ இல்லையா? இதோ உங்கள் பால்கனித் தோட்டத்தை எலுமிச்சை குலுங்கும் அற்புத தோட்டமாக மாற்றும் 4 ரகசியக் காரணங்களும் எளிய தீர்வுகளும்!

பால்கனியில் அல்லது கீழேயோ தொட்டியில் வளர்க்கப்படும் எலுமிச்சைச் செடி நன்கு செழித்து வளர்ந்தாலும், பூக்களோ காய்களோ பிடிக்காமல் இருப்பது பலருக்கும் ஏற்படும் பொதுவான பிரச்சனையாகும். நிலத்தில் வளரும் செடிகளை போலன்றி, தொட்டியில் வளரும் செடிகளுக்கு இடவசதி மற்றும் ஊட்டச்சத்துக்கள் குறைவாகவே கிடைக்கும். எனவே அவற்றின் வளர்ச்சியைக் கவனித்துச் சரியான பராமரிப்பை வழங்குவது அவசியம்.

தொட்டியில் உள்ள எலுமிச்சைச் செடி காய்க்காமல் இருப்பதற்கான 4 முக்கிய காரணங்களும், அவற்றிற்கான எளிய தீர்வுகளும் பற்றி பார்க்கலாம்.

1. சூரிய ஒளி பற்றாக்குறை:

காரணம்: எலுமிச்சை ஒரு முழு சூரிய ஒளியை விரும்பும் தாவரமாகும். நிழலான இடத்திலோ அல்லது தினமும் 4 மணி நேரத்திற்கும் குறைவாக வெயில் படும் இடத்திலோ செடி இருந்தால் இலைகள் மட்டும் வளருமே தவிர பூக்கள் பூக்காது.

தீர்வு: தொட்டி மரங்களை அதிக சூரிய ஒளி படும் இடத்திற்கு நகர்த்தவும். அல்லது சுற்றியுள்ள நிழலைக் கத்தரிக்கவும், வீட்டினுள் வளர்க்கப்படும் செடிகளுக்குக் கூடுதல் வளர்ச்சி விளக்குகளை பொருத்துவதைக் கருத்தில் கொள்ளவும்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திலும் புதினா செடி தளதளன்னு வளர இந்த 4 டிப்ஸ் போதும்!
எலுமிச்சை செடி | Lemon Plant

2. ஊட்டச்சத்து சமநிலையின்மை:

காரணம்: அதிகபடியான நைட்ரஜன் பூக்களின் வளர்ச்சியைப் பாதித்து இலைகளின் வீரியமான வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. பாஸ்பரஸ், பொட்டாசியம், இரும்பு, துத்தநாகம் மற்றும் போரான் ஆகியவற்றின் பற்றாக்குறை, பூக்கள் பூப்பதையும், காய்ப்பதையும் குறைக்கக் கூடும்.

தீர்வு: சமச்சீரான NPK மற்றும் நுண்ணூட்டச் சத்துக்கள் கொண்ட சிட்ரஸ் பழங்களுக்கென பிரத்யேகமான உரத்தை பயன்படுத்துங்கள். (மாதம் ஒருமுறை தொழுஉரம் அல்லது மண்புழு உரத்துடன், எலும்புத் தூள் மற்றும் வாழைப்பழத் தோல் உரம் ஆகியவற்றை மண்ணில் கலந்து விடவும்) பொதுவாக வருடத்திற்கு 3 முதல் 4 முறை பூக்கள் பூக்கும். பூக்கள் பூப்பதற்கு 2 முதல் 3 மாதங்களுக்கு முன்பு அதிக நைட்ரஜன் இடுவதை நிறுத்தவும்.

3. முறையற்ற நீர் பாசனம் மற்றும் சிறியத் தொட்டி:

காரணம்: தொட்டியில் எப்போதும் ஈரப்பதம் அதிகமாக இருந்தாலோ அல்லது வேர்கள் வளர இடமில்லாமல் தொட்டி மிகவும் சிறியதாக இருந்தாலோ செடி அழுத்தத்திற்கு உள்ளாகி பூப்பதை நிறுத்திவிடும்.

எலுமிச்சை செடி | Lemon plant
எலுமிச்சை செடி | Lemon plantImage credit: Gemini AI

தீர்வு: தொட்டியில் மேல் மண் 1 முதல் 2 அங்குலம் காய்ந்த பின்னரே தண்ணீர் ஊற்றவும். செடி வளர வளர, குறைந்தது 16 முதல் 18 அங்குல அகலமுள்ள பெரிய தொட்டிக்கு அல்லது பெரிய குரோ பேக்கிற்கு மாற்றவும்.

4. விதைகள் மூலம் வளர்க்கப் பட்ட செடி:

காரணம்: நர்சரியில் வாங்கிய விதைகளில் இருந்து முளைத்த செடியாக இருந்தால், அது பூ பூத்து காய்க்க 5 முதல் 7 ஆண்டுகள் வரை ஆகும்.

தீர்வு: தொட்டியில் வளர்ப்பதற்கு எப்போதும் ஒட்டுக் கட்டிய (Grafted) அல்லது பதியம் போட்ட (Air-layered) எலுமிச்சைச் செடிகளைத் தேர்ந்தெடுக்கவும். இவை நட்ட 1 முதல் 2 ஆண்டுகளிலேயே காய்க்கத் தொடங்கி விடும். மேலும், காய்ந்த மற்றும் குறுக்கு நெடுக்காக வளரும் கிளைகளை அவ்வப்போது கவாத்து செய்வதன் மூலம் புதிய கிளைகள் துளிர்த்து பூக்கள் பிடிக்கும்.

இதையும் படியுங்கள்:
கொத்தமல்லி விதை முளைக்கவில்லையா? இந்த ஒரு ட்ரிக்ஸ் போதும்!
எலுமிச்சை செடி | Lemon Plant

தொட்டியில் வளர்க்கப்படும் எலுமிச்சை செடிக்குச் சரியான சூரிய ஒளி, அளவான தண்ணீர் மற்றும் பூப்பதற்குத் தேவையான சத்துக்களை வழங்கினால், அது நிச்சயம் ஆரோக்கியமாக வளர்ந்து அதிக மகசூலைத் தரும். சிறிய அளவிலான பராமரிப்பு மாற்றங்களைச் செய்வதன் மூலமும், பொறுமையுடன் செடியைக் கவனிப்பதன் மூலமும், நம் வீட்டுத் தோட்டத்திலேயே ரசாயனமற்ற, சுவையான எலுமிச்சைப் பழங்களை எளிதாக அறுவடை செய்யலாம்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், கடைகளில் வாங்கும் காய்களுக்கு விடைகொடுத்துவிட்டு, உங்கள் சொந்த மாடித்தோட்டத்திலிருந்தே நஞ்சு இல்லாத பிரெஷ்ஷான எலுமிச்சைப் பழங்களை தினசரி சமையலுக்குப் பயன்படுத்தி மகிழலாம்.