இந்தியாவில் அமைந்திருக்கும் மிகப்பெரிய விதை வங்கி!

Indian Seed Vault
Indian Seed Vault
Published on

1980 ஆம் ஆண்டுகளின் பிற்பகுதியில் இந்தியாவின் உத்தரகண்டில், விசய் சர்தாரி தலைமையில், பிபிஏ (பீச் பச்சாவ் அந்தோலன்) எனப்படும் விதைகளைக் காப்பாற்று இயக்கம் தொடங்கப் பெற்றது. இந்த இயக்கத்தின் வழியாக, நாட்டு விதைகளைச் சேமிப்பதற்காக விதை வங்கிகள் உருவாக்கப்பட்டன. அதனைத் தொடர்ந்து, பல்வேறு மாநிலங்களில் விதை சேமிப்பு முயற்சிகள் தொடங்கப் பெற்றன.

வேளாண்மையில் மரபு வழியிலான விதைகளை மீட்பதன் பங்கு முதன்மையானது. நெல் உட்பட பல்வேறு பயிர் வகைகளின் மரபு வழியிலான விதைகளை மீட்கும் முயற்சிகள் தமிழ்நாடு முழுவதும் முன்னெடுக்கப்பட்டு வருகிறது. இதே போன்று, தற்செயலாக ஏற்படும் இயற்கைச் சீற்றங்களான வறட்சி, வெள்ளம் மற்றும் வெட்டுக்கிளி உள்ளிட்ட பல்வேறு பூச்சிகளின் படையெடுப்பு போன்ற காலக்கட்டத்தில், தரமான விதைகள் கிடைக்காமல் போய்விடும் வாய்ப்புகள் அதிக அளவில் இருக்கின்றன.

இவ்வேளைகளில், விவசாயிகளுக்குத் தேவையான விதைகளைக் கிடைக்கச் செய்வதற்காக இந்தியாவில் பல இடங்களில் 'விதை வங்கிகள்' அமைக்கப் பட்டிருக்கின்றன. தேசிய விதைக் கழகம், மாநிலப் பண்ணைக் கழகம் மற்றும் 13 மாநில விதைக் கழகங்களின் கீழ், விதை வங்கிகள் செயல்படுத்தப்படுகின்றன. இவை தவிர, தனியார் அமைப்புகள், மகளிர் சுய உதவிக் குழுக்கள் போன்றவைகளின் வழியாகவும் விதைகள் சேமித்து வைக்கப்படுகின்றன.

தமிழ்நாட்டில் நாமக்கல் மாவட்டம், கொல்லிமலைப் பகுதியில் பழங்குடியினப் பெண்கள் 12 பேர் இணைந்து, பத்து ஆண்டுகளுக்கு முன்பாக, மகளிர் சுய உதவிக் குழு ஒன்றைனைத் தொடங்கி, அதன் வழியாக, தங்கள் பகுதிக்கே உரித்தான மரபு வழியிலான சிறுதானிய விதைகளை மீட்டுப் பராமரிப்பதற்காக, சமுதாய விதை வங்கி ஒன்றைத் தொடங்கினர். இந்தச் சமுதாய விதை வங்கியின் வழியாக, கொல்லிமலைக்கு உரித்தான 21 வகையான மரபு வழியிலான சிறுதானிய வகைகள் மீட்டுப் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இதையும் படியுங்கள்:
பாரம்பரிய விதை வங்கி மூலம் விவசாயத்தை மீட்டெடுத்த பழங்குடிப் பெண்கள்!
Indian Seed Vault

இந்த சமுதாய வங்கி இலாப நோக்கமின்றி, ’ஒரு படிக்கு இரு படி’ என்கிற முறையில் செயல்பட்டு வருகிறது. அதாவது, இந்த வங்கியிடம் விதைகளைப் பெற்று பயிரிடும் விவசாயிகள் அறுவடையின் போது, அதை இரண்டு மடங்காகத் திருப்பித் தர வேண்டும். இத்தகைய நடைமுறையால் விதைகளைத் தொடர்ந்து இருப்பு வைத்துக் கொள்ள முடிகிறது. மேலும், இந்தச் சமுதாய விதை வங்கி மூலம் பெறப்படும் விதைகள் மூலம் கொல்லிமலை விவசாயிகளுக்கு விளைச்சலும், வருமானமும் அதிகரித்துள்ளதாகக் கூறுகின்றனர்.

இந்தியாவில் லடாக் ஒன்றியப் பகுதியில் இருக்கும் சாங் லா மலைப் பாதையில், இந்திய விதைப் பெட்டகம் (Indian Seed Vault) அமைக்கப் பெற்றது. இந்த விதை வங்கியில், இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் உணவுப் பயிர்களின் விதைகள் சேமித்து வைக்கப்பட்டிருக்கின்றன. 2010 ஆம் ஆண்டு உயர் ஆராய்ச்சிப் பாதுகாப்பு நிறுவனமும், தேசியத் தாவர மரபணு வளங்கள் அமைப்பும் இணைந்து, இந்த பாதுகாப்பான விதை வங்கியை உருவாக்கின. இந்த விதை வங்கி உலகின் இரண்டாவது பெரிய விதை வங்கியாக இருக்கிறது.

இதையும் படியுங்கள்:
நகர்ப்புறங்களில் வசிப்போரும் பறவைகள், பட்டாம்பூச்சிகளுக்கு உதவலாம்!
Indian Seed Vault

இந்த விதை வங்கியில், 10,000 எண்ணிக்கைக்கும் மேற்பட்ட விதைகள் மற்றும் 200 தாவர இனங்கள் இந்திய விதைப் பெட்டகத்தில் சேமிக்கப்பட்டிருக்கின்றன. இந்த விதைகளில் பாதாம், பார்லி, முட்டைக்கோசு, கேரட், முள்ளங்கி, உருளைக்கிழங்கு, தக்காளி, அரிசி, கோதுமை போன்றவற்றின் விதைகளும் அடங்கும். இங்கு விதைகள் 18 டிகிரி செல்சியஸ் எனும் அளவுக்குக் கீழான வெப்பநிலையில் விதைகள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. லடாக்கில் மே மாதம் முதல் ஜூன் மாதம் வரை 18 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பநிலை அதிகரிக்கும் போது, செயற்கை முறையில் வெப்பநிலை குறைக்கப்பட்டு விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com