

நம் வீட்டின் சமையல் அறையிலும், மாடித் தோட்டத்திலும் இன்றியமையாத இடத்தைப் பிடித்திருக்கும் மூலிகைகளில் புதினா முதன்மையானது. அதன் நறுமணமும் மருத்துவ குணங்களும் உணவுக்குச் சுவை சேர்ப்பதோடு, நமது உடல்நலத்திற்கும் பெரிதும் உதவுகின்றன. இருப்பினும், கோடைக்காலத்திலும் மிதமான வெயிலிலும் செழிப்பாக வளரும் புதினா செடி, மழைக்காலம் என்றாலே அதிகப்படியான ஈரப்பதம் மற்றும் சூரிய ஒளி பற்றாக்குறையால் எளிதில் அழுகி வாடிவிடும். இயற்கையின் இந்தச் சவாலைச் சமாளித்து, புதினா செடி மழைக்காலத்திலும் அழுகாமல் செழித்து அடர்ந்து வளரச் செய்ய சில எளிய மற்றும் முறையான வழிமுறைகளைப் பின்பற்றுவது அவசியமாகும்.
மழைக்காலத்தில் புதினா செடியைப் பராமரிக்கும் 4 முக்கிய குறிப்புகள்
1.சிறந்த வடிகால் வசதி:
மழைக்காலத்தில் செடி அழுகுவதற்கு முக்கியக் காரணம் வேர்களில் நீர் தேங்குவதே ஆகும். எனவே, புதினா வளர்க்கும் தொட்டிகள் அல்லது பைகளில் அடியில் போதுமான துளைகள் இருக்க வேண்டும். களிமண் தன்மையுள்ள மண்ணுக்குப் பதிலாக, தோட்டத்து மண், ஆற்றுமணல் மற்றும் மண்புழு உரம் ஆகியவற்றைச் சம அளவில் கலந்து நல்ல வடிகால் வசதியுள்ள மண்ணைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இது மழைநீர் தொட்டியில் தேங்காமல் உடனடியாக வெளியேற வழிவகுக்கும்.
2. அதிகப்படியான நீர்ப்பாய்ச்சலைத் தவிர்த்தல்:
மழைக்காலத்தில் வளிமண்டலத்தில் ஈரப்பதம் அதிகமாக இருப்பதால், மண் நீண்ட நேரத்திற்கு ஈரமாகவே இருக்கும். எனவே, வழக்கம் போல தினமும் தண்ணீர் ஊற்றுவதைத் தவிர்க்க வேண்டும். தொட்டியின் மேல்மண் காய்ந்திருப்பதை உறுதிசெய்த பிறகு மட்டுமே, அளவாகத் தண்ணீர் தெளிக்க வேண்டும்.
3. முறையாக கத்தரித்து விடுதல்:
மழைக்காலத்தில் புதினா செடிகள் நெருக்கமாக வளர்ந்து காற்றோட்டம் இல்லாமல் போகும் போது பூஞ்சைத் தாக்குதலுக்கு ஆளாகும். அதனால் செடியின் நுனிப்பகுதிகளை அவ்வப்போது கிள்ளி விடுவது, புதிய பக்கவாட்டுக் கிளைகள் கிளைத்துச் செடி அடர்த்தியாக வளர உதவும். மேலும் அழுகிய, பழுத்த அல்லது நோய் தாக்கிய இலைகளை உடனே அகற்றிவிட்டு வேர் பகுதியில் சிறிதளவு மஞ்சள் கலந்த தண்ணீரை ஊற்றினால் செடியின் ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும்.
4. போதுமான சூரிய ஒளி மற்றும் பூஞ்சைக் கட்டுப்பாடு:
தொடர் மழையும் மேகமூட்டமும் இருந்தாலும், புதினா செடிக்குக் குறைந்த பட்சம் 3 முதல் 4 மணி நேரமாவது வெளிச்சமும் சூரிய ஒளியும் கிடைக்கும்படி வைக்க வேண்டும். அதிக ஈரப்பதத்தால் ஏற்படும் பூஞ்சைத் தொற்றைத் தவிர்க்க, இயற்கையான முறையில் தயாரிக்கப்பட்ட வேப்ப எண்ணெய் கரைசலை வாரம் ஒருமுறை இலைகளின் மீது தெளிப்பது சிறந்தது. மேலும் ஆட்டு சாணம் இடையில் போட்டு அரிசி களைந்த தண்ணீரையும் இடை இடையே தெளித்து விட்டால் போதும். புதினா தள தள என்று வளரும்.
இயற்கை நமக்கு அளித்த அரிய கொடைகளில் ஒன்றான புதினாவை, பருவத்திற்கேற்பச் சரியான முறையில் பராமரித்தால் அது வீட்டின் சூழலை நறுமணத்தால் நிரப்புவதோடு ஆண்டு முழுவதும் பசுமையாய் இருக்கும்.
மழைக்காலத்தில் ஏற்படும் அதிகப்படியான ஈரம் மற்றும் பூஞ்சைத் தாக்கங்களை முறையான வடிகால், சரியாக வெட்டி விடுதல் மற்றும் சூரிய ஒளியின் மூலமாக எளிதில் தடுத்துவிடலாம். உரிய கவனமும் சிறிய பராமரிப்பும் இருந்தால், மழைக்காலத்திலும் புதினா செடி செழித்து வளர்ந்து நமது தோட்டத்திற்கு அழகு சேர்ப்பது உறுதி.
வாசனை நிறைந்த புதினாவை மழைக்காலத்திலும் அழுகவிடாமல் எப்படிப் பாதுகாப்பது என்ற எளிய உத்திகளைத் தெரிந்து கொண்டு உங்கள் வீட்டுத் தோட்டத்தைப் பசுமையாக்குங்கள்.