மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள் - காட்டுயிர்கள் மேல் அக்கறை கொள்வோம்!

மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்
Published on

உலகம் முழுவதும், ஒவ்வொரு ஆண்டும், மார்ச் 3 ஆம் நாளன்று, உலகக் காட்டுயிர் நாள் (World Wildlife Day) கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அழிந்து வரும் காட்டு விலங்குகள் மற்றும், தாவர இனங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கத்தில், 2013 ஆம் ஆண்டு டிசம்பர் 20 அன்று நடைபெற்ற ஐக்கிய நாடுகள் பொதுச்சபையின் (UNGA) 68 ஆவது அமர்வில், “காட்டு விலங்குகள் மற்றும் தாவரங்கள் அழிந்து வரும் உயிரினங்களின் பன்னாட்டு வணிக சாசனம்” (CITES) மூலம், மார்ச் 3 ஆம் நாளை உலகக் காட்டுயிர் நாள் கடைப்பிடிக்க வேண்டுமென்கிற தாய்லாந்தினால் முன்மொழியப்பட்ட தீர்மானம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2014 ஆம் ஆண்டிலிருந்து உலகக் காட்டுயிர் நாள் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.

காட்டுயிர் (wildlife) என்பது வீட்டைச் சாராத அனைத்துத் தாவரங்கள், விலங்குகள் போன்றவற்றை உள்ளடக்கியதாகும். மனிதனின் நன்மைக்காகக் காட்டுத் தாவரம் மற்றும் விலங்கினங்களை வீட்டுப் பயன்பாட்டிற்கு பயன்படுத்துதல் உலகம் முழுவதும் பலமுறை நடந்துள்ளது.

இது சுற்றுப்புறத்திற்கு நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

காட்டுயிர்களை அனைத்து சூழ்நிலை மண்டலங்களிலும் காணலாம். பாலைவனங்கள், மழைக்காடுகள், சமவெளிகள் போன்ற இடங்களில் மட்டுமன்றி மிகவும் வளர்ச்சியுற்ற நகர்ப்புறங்களில் கூடத் தனித்துவமான காட்டுயிர்கள் காணப்படுகின்றன. பெரும்பாலான அறிவியலாளர்கள் உலகம் முழுவதும் காட்டுயிர்கள் மனித நடவடிக்கைகளால் தாக்கப்படுகின்றன என்பதை ஏற்றுக் கொள்கின்றனர்.

வரலாற்று ரீதியாக, சட்டம், சமூகம் மற்றும் ஒழுக்கம் சார்ந்த உணர்வு உள்ளிட்ட பல வழிகளில் நாகரிகத்தை காட்டுயிர்களில் இருந்து மனிதர்கள் பிரித்திருக்கின்றனர். இவை பதிவு செய்யப்பட்ட வரலாறு முழுவதிலும் விவாதத்திற்கான காரணமாகின. சமயங்கள் பொதுவாக சில விலங்குகளைப் புனிதத்தன்மை உடையவையாகத் தெரிவித்துள்ளன.

இதையும் படியுங்கள்:
ஆஸ்திரேலியர்கள் கண்டு அஞ்சும் ஆக்ரோஷ பறவை!
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்

தற்காலத்தில் இயற்கைச் சூழலில் ஏற்பட்டுள்ள அக்கறை, மனித நன்மைக்காக அல்லது பொழுதுபோக்குக்காக காட்டுயிர்களைச் சுரண்டுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை ஆர்வலர்களால் மேற்கொள்ளுவதற்குத் தூண்டுகோலாக அமைந்துள்ளது.

மனிதனால் காட்டுயிர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளன. காட்டுயிர்களின் வாழ்விடச் சூழல் பறிப்பு மட்டுமின்றி, உணவு, மருந்து மற்றும் மனிதர்களின் ஆடம்பர ஆசைக்காகப் பெரிதும் கொல்லப்பட்டு, கடத்தப்பட்டு அழிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் காட்டுயிர்கள் அனைத்தும் பாதுகாக்கப்பட வேண்டியது அவசியமாகிறது.

மனிதனால் காடு என்று வரையறுத்துள்ள எல்லைக்குள் வாழும் உயிர்களே காட்டுயிர் என்று தவறாக எண்ண வேண்டாம்.

உங்கள் வீட்டைச் சுற்றி உள்ள தாவரங்கள் விலங்குகளை நேசியுங்கள். அணில், பல்லி, சிட்டுக் குருவி, ஓணான், தேனீ போன்றவைகளையும் நேசியுங்கள். அவசியமின்றி, வீட்டிற்கு அருகிலுள்ள புல், புதர் தாவரங்களை அகற்ற வேண்டாம். வீட்டில் பறவைகள் கூடு கட்டியிருந்தால் அதை அவசரப்பட்டு அகற்றி விடாதீர்கள். காட்டுயிர் இறைச்சிகள், ஆபரணப் பொருட்கள் போன்றவைகளை வாங்கிப் பயன்படுத்துவதைத் தவிருங்கள். காட்டுயிர் வேட்டையாடப்பட்டால் தடுத்து விடுங்கள். இதேப் போன்று காட்டுயிர்கள் கடத்தப்பட்டால் தகவல் கொடுக்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்ளுங்கள்.

2015 ஆம் ஆண்டு முதல், ஒவ்வொரு ஆண்டும், ஒரு கருப்பொருள் அறிவிக்கப்பட்டு, அதனடிப்படையில் காட்டுயிர்களின் பாதுகாப்பும், மக்களிடம் காட்டுயிர்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்துவதும் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றனர். 2025 ஆம் ஆண்டிற்கான கருப்பொருளாக, “காட்டுயிர் பாதுகாப்பு நிதி: மக்கள் மற்றும் புவியியல் மீதான முதலீடு” (Wildlife Conservation Finance: Investing in People and Planet) என்று அமைந்திருக்கிறது.

அப்புறமென்ன, இனியாவது, காட்டுயிர்கள் மேல் அக்கறை கொள்வோம். அவைகளைப் பாதுகாக்க அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றுவோம்.

இதையும் படியுங்கள்:
பால் கறக்கும் இயந்திரங்கள் - நல்லதா? கெட்டதா?
மார்ச் 3: உலகக் காட்டுயிர் நாள்

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com