
தானியங்கள், கீரைகள், மூலிகைகள் மற்றும் காய்கறிகளின் இளம் நாற்றுகளே, ‘மைக்ரோ கீரைகள்’ என அழைக்கப்படுகின்றன. மைக்ரோ கீரைகள் உடல் நலனுக்கு மிகுந்த பலன் அளிக்கும். இதனால் நீண்ட நாட்கள் இளமையாக இருப்பதற்கான ரகசியம் ஒளிந்திருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பொதுவாக, விதைகள் முளைக்கத் தொடங்கும் நிலையை, ‘முளை’ என்று அழைப்பார்கள். இரண்டு முதல் மூன்று அங்குலம் வரை இது வளரும்.
மைக்ரோ கீரையின் இளம் இலைகள், மையத்தண்டு மற்றும் சின்ன இளம் இலைகளுடன் இருக்கும். மைக்ரோ கீரைகள் 8 முதல் 10 அங்குலம் வரை வளர்க்கப்படும். விதைகளை விதைத்த பிறகு 10 முதல் 15 நாட்களுக்குள் மைக்ரோ கீதைகள் அறுவடைக்குத் தயாராகி விடும்.
மைக்ரோ கீரையின் முளைகள் வளர்வதற்கு சூரிய ஒளியோ, தண்ணீரோ தேவையில்லை. ஆனால், கீரை வளர்வதற்கு இவை இரண்டும் அவசியம். இதில் சுவையும் மணமும் இருப்பதால் மக்களால் அதிகமாக விரும்பப்படுகிறது. இருப்பினும், இதன் சாகுபடி குறைந்த பரப்பளவிலேயே இருக்கிறது.
வீட்டிலேயே கூட மைக்ரோ கீரைகளை வளர்க்க முடியும். கண்ணாடியிலான கொள்கலன் அல்லது தொட்டியில் மைக்ரோ கீரைகளை வளர்க்கலாம். விதைகளை ஆறு முதல் எட்டு மணி நேரம் ஊறவைத்து வடிகட்டிக் கொள்ள வேண்டும். இந்த விதைகளை தொட்டியில் விதைத்தால் அடுத்த ஐந்து நாட்களில் முளைக்கத் தொடங்கிவிடும்.
அதன் பிறகு இரண்டு வாரத்திலேயே இவற்றை அறுவடை செய்யலாம். அதிக ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் மைக்ரோ கீரைகளை வளர்த்து பயன் பெறலாம். இதை வெகு விரைவாக குறைந்த செலவில் நம்மால் வளர்க்க முடியும்.
பயன்கள்:
மைக்ரோ கீரைகள் அத்தியாவசிய ஊட்டச்சத்துகளும் என்சைம்களும் நிறைந்தவை. மைக்ரோ கீரைகளை என்சைம்களின் 'ஸ்டோர் ஹவுஸ்' எனக் கூறுவர்.
செல்களின் சரியான வளர்ச்சிக்கும், பராமரிப்புக்கும் என்சைம்களின் பங்கு முக்கியமானது.
உடல் எடை இழக்க விரும்புபவர்கள், குறைக்க விரும்புபவர்கள் தினமும் தங்கள் உணவுப் பட்டியலில் இதை ஒரு சிறிய அளவாக சேர்க்கலாம். இது நோய் வருவதைத் தடுக்கும். இவற்றில் உள்ள புத்தம் புதிய சக்தி வாய்ந்த இரத்த சுத்திகரிப்பானாக செயல்படும்.
கீரைகளில் உள்ள சத்துக்கள்:
வெந்தயக் கீரையில் இரும்புச் சத்து அதிகமாக இருப்பதால் ரத்த சோகை குணமாக உதவுகிறது.
சிவப்பு முட்டை கோஸ், கொத்தமல்லி, முள்ளங்கி போன்ற மைக்ரோ கீரைகளில் முதிர்ந்த கீரைகளை விட 40 மடங்கு அதிக அளவு சத்துக்கள் இருப்பதாக ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து உள்ளனர்.
மைக்ரோ கீரைகள் இரண்டு, மூன்று வாரங்களில் அறுவடை செய்யப்படுவதால் அவை வளரும் மண்ணுக்கு பூச்சி கொல்லிகள் பயன்படுத்தத் தேவையில்லை. ஆனால், இது ரசாயனம் இல்லாத மிகவும் ஆரோக்கியமான கீரைகள் என்பதால் நம்பி உட்கொள்ளலாம் என விவசாயிகள் கூறுகின்றனர்.