

நமது கிராமத்து கிணறுகளிலும் குளங்களிலும் பாம்பு போல நெளிந்து செல்லும் ஒரு விசித்திரமான உயிரினத்தை பலரும் பார்த்திருப்போம். இதன் பெயர் விலாங்கு மீன். ஆங்கிலத்தில் இதை இந்தியன் மோட்டில்டு ஈல் (Indian Mottled Eel) என்று அழைப்பார்கள்.
இந்த மீனின் வாழ்க்கை முறை பல நூறு ஆண்டுகளாக உலகெங்கிலும் உள்ள மிகப்பெரிய அறிவியல் அறிஞர்களையே தலையை பிய்த்துக்கொள்ள வைத்த ஒரு சுவாரஸ்ய கதையாகும். விலாங்கு மீனின் மர்மங்கள் நிறைந்த வாழ்க்கைப் பயணத்தப் பற்றி இந்தப் பதிவில் பார்ப்போம்.
நீர்வழி வாழ்க்கை!
விலாங்கு மீன்களின் வாழ்க்கை ஒரு பிரம்மாண்டமான சாகசப் பயணத்தைக் கொண்டது. இவை நன்னீரில் அதாவது ஆறுகள் மற்றும் ஏரிகளில் வாழ்ந்தாலும், இவற்றின் பிறப்பிடம் அங்கு கிடையாது. நடுக்கடலின் ஆழமான இருண்ட பகுதிகளில் தான் இவை முட்டையிலிருந்து முதல் முறையாக வெளிவருகின்றன.
கடலில் பிறக்கும் இந்த சிறிய குஞ்சுகள், கடல் நீரோட்டங்களின் உதவியோடு பல ஆயிரம் கிலோமீட்டர்கள் பயணம் செய்து ஆறுகளின் முகத்துவாரங்களை வந்தடைகின்றன. அங்கிருந்து எதிர்நீச்சல் போட்டு நமது ஊர்களில் இருக்கும் ஆறுகள், குளங்கள் மற்றும் சிறிய கிணறுகளுக்கு வந்து சேர்கின்றன. எவ்வித தொழில்நுட்பமும் இல்லாமல் இயற்கையாகவே இவை வழியைக் கண்டுபிடிப்பது மாபெரும் ஆச்சரியம்.
தனித்துவமான உடலமைப்பு!
பார்ப்பதற்கு அச்சு அசலாக பாம்பு போலவே நீளமாக இருக்கும் இதன் உடலமைப்பு பலரையும் முதல் பார்வையில் பயமுறுத்தும். இதன் உடலில் வழுவழுப்பான ஒரு திரவம் தொடர்ந்து சுரப்பதால், இதை வெறும் கைகளில் பிடிப்பது மிகக் கடினமான காரியம். விலாங்கு மீன்கள் இரவு நேரங்களில் தான் மிகவும் சுறுசுறுப்பாக இரை தேடும் பழக்கம் கொண்டவை. சிறிய மீன்கள், நண்டுகள் மற்றும் தவளைகளை இவை மிகவும் விரும்பி வேட்டையாடும்.
பழுப்பு, மஞ்சள் நிறங்களில் உடலில் புள்ளிகளுடன் காணப்படும் இதன் தோற்றம், சேற்றுப் பகுதிகளில் எதிரிகளின் கண்களில் சிக்காமல் மறைந்திருக்க ஒரு சிறந்த இயற்கை கவசமாக செயல்படுகிறது. தண்ணீரிலிருந்து வெளியே வந்து சேற்றில் கூட சிறிது நேரம் உயிர்வாழும் அளவுக்கு இவை கடினமான உடலமைப்பைப் பெற்றிருக்கின்றன.
இறுதிப் பயணம்!
இவற்றின் வாழ்க்கையில் நடக்கும் மிக நெகிழ்ச்சியான தருணம் இவற்றின் இனப்பெருக்கக் காலம் தான். பல வருடங்கள் நன்னீரில் வாழ்ந்து முழு வளர்ச்சியடைந்த பிறகு, மீண்டும் கடலை நோக்கிய தங்களது இறுதிப் பயணத்தை இவை அவசரமாகத் தொடங்குகின்றன. இந்த நீண்ட பயணத்தின் போது இவை எந்த ஒரு உணவையும் உட்கொள்வதில்லை.
தங்களது உடலில் சேமித்து வைத்துள்ள கொழுப்பை மட்டுமே நம்பி பல ஆயிரம் கிலோமீட்டர்கள் நீந்தி, தாங்கள் பிறந்த அதே ஆழ்கடல் பகுதிக்குச் சரியாகச் செல்கின்றன. அங்கு முட்டையிட்ட பிறகு தங்களது ஆற்றல் முழுவதையும் இழந்து அங்கேயே தங்கள் உயிரையும் தியாகம் செய்கின்றன.
ஆழ்கடலில் தொடங்கி மீண்டும் ஆழ்கடலிலேயே முடியும் இந்த விலாங்கு மீன்களின் சுவாரஸ்யமான வாழ்க்கை சுழற்சி உண்மையிலேயே இயற்கையின் ஒரு மாபெரும் பேரதிசயம். தங்கள் இனத்தை விருத்தி செய்வதற்காக உணவு கூட இல்லாமல் பல ஆயிரம் கிலோமீட்டர்களைத் துல்லியமாகக் கடந்து செல்லும் இவற்றின் உறுதி வியக்க வைக்கிறது.