

பனிமலைகளின் கடுமையான குளிரையும் தாண்டி வாழும் உலகின் ஒரே ஆல்பைன் கிளியான 'கியா' (Kea) பற்றிய அறிமுகம் இது. 'மலைகளின் கோமாளி' என்று அழைக்கப்படும் இந்நிகரற்ற பறவையின் புத்திசாலித்தனமும், அழியும் அபாயமும் உங்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தும். இத்தகைய அபூர்வ பறவையின் வியக்க வைக்கும் வாழ்க்கை ரகசியங்களை இந்தத் தொகுப்பு மூலம் முழுமையாக அறியலாம்!
இது நியூசிலாந்து ஆல்பைன் மலைகளில் மட்டுமே காணப்படுகிறது. ஆலிவ் பச்சை நிறத்தில் உள்ள இக்கிளி மலையின் கடுமையான பனி, காற்று மற்றும் குளிரைத் தாங்கக் கூடியது. ஆராய்ச்சியின்படி இது மிகவும் புத்திசாலியாக கருதப்படுகிறது. இது எந்தவித தாக்குதலையும் சமாளிக்கும். ஆயுதங்களைக் கையாளும் இதை 'மலைகளின் கோமாளி' என்று அழைக்கிறார்கள்.
வேட்டையாடுதலால் கியா இனம் அழிந்து கொண்டிருப்பது வேதனைக்குரியது. இதை நியூசிலாந்தில் மட்டுமே காணலாம். இதன் விஞ்ஞானப் பெயர் நெஸ்டர் நோடாபில் ஆகும். நெஸ்டர் என்பது கிரேக்க புராணக் கடவுளைக் குறிப்பது. 'நோடாபில்' என்றால் லாடின் மொழியில் 'தனித்துவம் வாய்ந்தது' என்று பொருள். இந்த கியா கிளி பத்து மில்லியன் வருடங்களுக்கு முன் வாழ்ந்த ஸ்ட்ரோகோபிடை வம்சாவளியைச் சேர்ந்தது.
கியா கிளியின் தோற்றம்:
கியா கிளி உலகின் மிகப்பெரிய ஆல்பைன் கிளி மற்றும் புத்திசாலி பறவைகளில் ஒன்று ஆகும். 18 லிருந்து 21 இன்ச் நீளமிருக்கும். இதன் இறக்கைகள் சுமார் ஒரு மீட்டர் நீளம் இருக்கும். அதனாலேயே மலைப்பகுதிகளில் இது வாழ முடிகிறது. ஆண் இனம் பெண் இனத்தைவிட எடை அதிகம் இருக்கும்.
நியூசிலாந்தின் கியா கிளி இனம் மிகப்பெரிய பறக்கும் பறவையாக உலகில் கருதப்படுகிறது. இதன் இறக்கைகள் ஆலிவ் பச்சை நிறத்தில் இருக்கும். இறக்கையின் ஓரத்தில் கருப்பு நிறமாக இருக்கும். இதன் அலகு நீளமாகவும் வளைந்தும் காணப்படும். இதன் அலகின் நீளம் 5.5 செ. மீ. இருக்கும். இதன் வலுவான அலகினால் மரத்துண்டுகளை கிழிக்கவும் கார்களின் ரப்பர்களை கிழிக்கவும் முடியும்.
கியா கிளி சிறியவையாக இருக்கும்போது கண்கள், அலகு சுற்றி மஞ்சள் நிறம் இருக்கும். வளர வளர அவை கருமை ஆகின்றன. மலைப்பகுதிகளில் மட்டுமே காணப்படும் இது பனியிலும் கூட தன்னை நன்றாகத் காத்துக் கொள்ளும் ஒரே இனமாகும்.
இது பலவகையான செடிகள், இலைகள், வேர்கள், பழங்கள் கொட்டைகளை உண்ணும்; பூச்சி வகைகளையும் உண்ணும். இதற்கு உணவே கிடைக்காத நிலையில் பிணங்களைக் கொத்தி உண்ணும். கியா கிளிகள் மலைகளில் உள்ள ஆடுகளின் கழுத்தைச் சுற்றியுள்ள கொழுப்பை உண்பதால் ஆடு இனங்கள் அழிவதாக ஆடு மேய்ப்பர்கள் கூறுகிறார்கள்.
இதன் பழக்கம்:
மிகவும் சமூக ஒற்றுமையோடு வாழக்கூடிய இனமாகும். இதனுடைய புத்திசாலித்தனம் பறவைகள் உலகிலேயே தனித்துவமாகக் கருதப்படுகிறது. விளையாட்டுத் தனம் நிறைந்த பறவை இது. எந்தவித பிரச்னையையும் சமாளிக்கத் கூடிய திறன் கொண்டது தனிச்சிறப்பு. கியா பறவைகள் மரங்களில் கூடு கட்டாமல் தரையில் பாறையில் மற்றும் மரவேர்களில் கூடு கட்டும் பழக்கம் உள்ளவை.
இனப்பெருக்கம் குளிர்காலத்தில் நடைபெறும். பெண் இனமே குஞ்சை அடைகாக்கிறது. இரண்டிலிருந்து நான்கு முட்டை இடும். கியா பறவைகள் சுமார் 30 ஆண்டு காலம் வாழ்கின்றன. சில கியா கிளிகள் 50 ஆண்டுகள் கூட வாழ்கின்றன.
கியா கிளிகள் சுற்றுச்சூழலை பாதுகாப்பாக வைக்கின்றன. விதைகளை பறப்புவதிலும் பூச்சிகள், பிணங்களை உண்ணுவதிலும் சுற்றுச்சூழலை ஆரோக்கியமாக வைக்கின்றன. நியூசிலாந்தின் மலைகளின் பாதுகாவலனாக கியா கிளி கருதப்படுகிறது. இது தேசிய அடையாளமாகவும் உள்ளது. தற்போது இதன் எண்ணிக்கை தோராயமாக 3,000 முதல் 7,000 வரை இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளது. நிலைக்கு இது தள்ளப்பட்டுள்ளது.. 1970ம் ஆண்டில் அதிக அளவு ஆடுகள் பாதிக்கப்பட்டதால் 1,50,000 கியா கிளிகள் கொல்லப்பட்டன.
இந்த கிளி இனத்தைப் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவது வரவேற்கத்தக்கது.