
வடக்கு டான்ஜானியாவில் அமைதியின் உறைவிடம் என்று வர்ணிக்கப்படும் பெரிய நகரான தார் எஸ் சலாமுக்கு வடமேற்கே 350 மைல் தொலைவில் அமைந்துள்ளது கோரோங்கோரோ எரிமலை வாய்!
ஆப்பிரிக்காவின் அற்புதமான பல்வகை வனவிலங்குகளின் இருப்பிடம் இதுவேதான். எரிமலையின் கீழே உள்ள செழுமையான புல்வெளிப்பகுதி தான் 30000 மிருகங்களுக்குச் சொர்க்கமாகத் திகழும் இடம்.
ஆப்பிரிக்காவின் பூர்வீகக் குடியினர் மஸாய் குடியினர் ஆவர். இவர்கள் இந்தப் பகுதியில் நெடுங்காலம் வாழ்ந்து வந்தவர்கள். இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தான் இங்கிருந்து வெளியேறினர். இவர்கள் கோரோங்கோரோவைப் பெரிதும் பூஜித்தனர்.
கடும் பஞ்சகாலத்திலும் கூட அவர்கள் இந்த இடத்தைவிட்டு நகரவில்லை. தாகத்தைத் தணித்துக்கொள்ள அங்குள்ள நீரூற்றுகள் அவர்களுக்கு உதவின.
கிழக்கு ஆப்பிரிக்காவின் செயலிழந்த எரிமலைகளுள் கோரோங்கோரோவும் ஒன்று. இரண்டரை கோடி வருடங்களுக்கு முன்னர் இது பொங்கி எழுந்து கொண்டிருந்தது. ஜாம்பியா நதியிலிருந்து தெற்கே 4060 மைல் நீளம் நீண்டிருந்த இந்த எரிமலைப் பகுதி உருவானது.
ஒரு காலத்தில் பூமியின் கீழ் உள்ள டெக்டோனிக் தகடுகளில் இரண்டு அசையவே பெரும் வெடிப்புகள் இரண்டு உருவாயின. அவற்றுள் ஒன்றினால் உருவானது தான் இந்த ஆப்பிரிக்க கொரோங்கோரோ எரிமலை!
அந்தக் காலத்தில் இதன் உச்ச பட்ச உயரம் பிரமிக்க வைக்கும் 15000 அடியாகும். இதன் அடிப்பரப்பு மட்டும் நூறு சதுரமைல்களாகும்.
மற்ற எரிமலைப் பகுதிகள் போலல்லாமல் அதிர்ஷ்டவசமாக இந்தப் பகுதியில் எப்போதும் நல்ல தண்ணீர் கிடைக்கிறது. ஆகவே கூட்டம் கூட்டமாக விலங்குகள் இந்தப் பகுதியை நோக்கி வந்தன.
மூங்கே மற்றும் லோன்யோகி (MUNGE AND LONYOKIE) ஆகிய இரு நதிகள் நீரைக்கொண்டு வந்து இங்கு சேர்க்கின்றன. நீல நிறமுள்ள ஒரு அற்புதமான ஏரி இங்கு உருவாகிவிட்டது.
அரிய இனமான இரண்டு வகை ஃப்ளெமிங்கோ பறவைகள் இங்கு வளர ஆரம்பித்தன. நீர்யானைகளும், யானைகளும் ஏராளமாக இங்கு வசிக்க ஆரம்பித்தன.
இங்கு ஏராளமான செடிவகைகளும் மூலிகைகளும் உள்ளதால் வெப்பத்தைத் தணித்துக் கொள்ள அவற்றின் கீழே காண்டாமிருகங்கள் ஓய்வெடுக்கின்றன. இவற்றையே அவை தனது உணவாகவும் எடுத்துக்கொள்கின்றன!
அற்புதமான பெரிய ஏரி, அருகில் பரந்த சமவெளி ஆகியவை இருப்பதால் உற்சாகத்துடன் இங்கு சிங்கங்கள் விளையாடுகின்றன.
எரிமலைப் பகுதியில் ஒரு வனவிலங்கு சரணாலயம் அமைந்திருப்பது உலகத்திலேயே இந்த ஒரு இடத்தில் தான் என்பதால் கோரோங்கோரோ ஒரு தனிச் சிறப்பைப் பெற்றுள்ளது!