

1970களில் நடந்த நிகழ்வு அது. மும்பைக்கு தெற்கே உள்ள கிஹிம் எனும் கடலோரக் கிராமத்தில் எங்கள் ஓய்வு இல்லம் அமைந்திருந்தது. விடுமுறைக்கு வந்திருந்த கல்லூரித் தோழியோடு நாள் முழுவதும் கடற்கரையிலே சுற்றிக் கொண்டிருந்ததில், வெயிலின் தாக்கம் தாளாமல் அவளுக்குக் காய்ச்சலே வந்துவிட்டது. அம்மா ஐஸ் ஒத்தடம் கொடுத்த பிறகும் காய்ச்சல் தணியவில்லை. மருத்துவரை அணுகிய போது, “அவளுக்குத் தேவையெல்லாம் நல்ல தூக்கம்தான்” என்று அறிவுறுத்தினார். அருகிலிருந்த கிராமத்தில் திருமணச் சடங்குகள் கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்ததால் அந்த நல்ல தூக்கத்திற்கு வாய்ப்பின்றி போனது.
இந்தியாவில் திருமணம் முதலான விழாக்களில் நிலவும் இரைச்சல் அளவு பற்றி நம் அனைவருக்கும் தெரியும். சத்தத்தின் அளவு 'டெசிபல்' என்ற அலகால் குறிப்பிடப்படுகிறது. இரைச்சல் மிக்க டெசிபல் அளவுகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இணையத்தில் தகவல்கள் கொட்டிக்கிடக்கின்றன. இந்த பாதிப்புகள் யாவும், நெஞ்சுப் படபடப்பு (chest slam) மற்றும் ஒழுங்கற்ற இதயத்துடிப்பு தொடங்கி மரணம் வரை நீள்கின்றன.
2020 பிப்ரவரியில் தெலங்கானாவில் தனது சொந்த திருமணக் கொண்டாட்டத்தின் போது மணமகன் ஒருவர் மாரடைப்பால் காலமானார். திருமண ஊர்வலத்தில் எழுப்பப்பட்ட அதிக டெசிபல் அளவுகள் அவரது மாரடைப்பைத்தூண்டி இருக்கக்கூடும் என்று அப்போது செய்திகள் வெளியாகின.
ஒலி மாசற்ற கொண்டாட்டங்கள் சாத்தியமா?
ஒரு கொண்டாட்டத்தின் அதீத இரைச்சல் அளவைப் பொருத்து குடும்பத்தின் அந்தஸ்து இருப்பதாக நம்பும் சில குடும்பங்களும் இருக்கவே செய்கின்றன. இரைச்சல் மாசைக் கட்டுப்படுத்த நம்மிடம் “ஒலி மாசு விதிகள், 2000” என்ற அருமையான சட்டம் ஒன்று இருக்கிறது. ஆனால், மின்சார ஒலிபெருக்கிகளைப் பயன் படுத்தும்போது, அனுமதிக்கப்பட்ட டெசிபல் அளவையும் நேரத்தையும் பின்பற்றுமாறு வாடிக்கையாளர்களைச் சம்மதிக்க வைக்க விடுதி ஊழியர்கள் பெரும்பாடு படுகிறார்கள். “நாங்கள் காசு கொடுத்திருக்கிறோம், அதனால் எவ்வளவு சத்தம் வைக்க வேண்டும், எவ்வளவு நேரம் கொண்டாடுவோம் என்பதை நாங்களே முடிவு செய்வோம்” என்கிற அதிகாரத் தோரணைதான் அவர்களிடம் மேலோங்கி நிற்கிறது. இது சென்னையின் கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பெரும்பாலான விடுதிகள் சந்திக்கும் சவால் ஆகும்.
மேலும், பண்டிகை காலங்களில் வெடிக்கப்படும் பட்டாசுகளால் ஏற்படும் அதீத இரைச்சலும், தெருக்களில் மலைபோல் குவியும் கழிவுகளும் ஒட்டுமொத்த சுற்றுச்சூழலையும் சீர்குலைக்கின்றன. இவற்றிலிருந்து வெளிப்படும் நச்சுப்பொருட்கள் நாட்கணக்கில் காற்றிலேயே கலந்து இருப்பதால், சுவாசக்கோளாறு உட்பட பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதுண்டு. மனிதர்கள் மட்டுமின்றி பறவைகள், விலங்குகள், மற்றும் செல்லப்பிராணிகள் முதலான உயிரினங்களும் (Noise pollution on animals) பாதிப்படைகின்றன.
இரைச்சலுக்கு இரையாகும் முதலைகள்!
ஒலிமாசு விதிகளின்படி 85 டெசிபலுக்கும் அதிகமான ஒலியளவு, மனிதர்களின் செவித்திறனை பாதிக்கக்கூடும் என்பதால், குடியிருப்புப்பகுதிகளில் ஒலியளவு 55 டெசிபலை மீறாமலிருக்க அறிவுறுத்தப்படுகிறது. ஆனால் நாம் பட்டாசுகளை வெடிக்கும்போது 140 டெசிபல் அளவையே தாண்டிவிடுகிறது.
இரைச்சலால் முதலைகளுக்கு மன அழுத்தம் ஏற்பட்டு நோய்த்தொற்று உண்டாகும் வாய்ப்புகள் அதிகம். இதற்குச் சான்றாக, தென்னாப்பிரிக்க முதலைப்பண்ணை ஒன்றின் அருகே ஏற்பட்ட வெடி சத்தத்தினால் 26 நைல் முதலைகள் உயிரிழந்தன. அதேபோல், நீலநாக்கு அரணைகள் இரைச்சல் காரணமாக செயலற்றுப் போகும் உறைதல் நிலைக்கு (freezing behaviour) தள்ளப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.
ஊர்வனவகை விலங்குகளில், கார்டிகோஸ்டிரோன் என்பது மனஅழுத்தத்துடன் தொடர்புடைய முக்கியமான ஹார்மோனாகும். சென்னை முதலைப் பண்ணையில் பணிபுரிந்துவரும் மருத்துவர் ருச்சிகாவின் குழுவினர், இது தொடர்பான தகவல்களை திரட்டியும், ஊர்வன விலங்குகளில் ஒலியினால் உண்டாகும் பிரச்னை களையும் கண்டறிய முயன்று வருகின்றனர்.
இரைச்சலில்லா உலகம் கேட்போம்!
காலநிலை மாற்றத்தினால் பல்வேறு சீரழிவுகளை சந்தித்துவரும் நம் பூமியை பாதுகாத்திட தனிநபராக என்ன செய்யவேண்டும் என்பது பெரும்பாலான மக்களின் கேள்வியாக உள்ளது. சிறுதுளி பெருவெள்ளம் என்பதைப் போல நாம் செய்யும் சிறுசிறு செயல்கள் பெரிய மாற்றங்களுக்கு வழிவகுக்கும்.
உதாரணத்திற்கு, நமது குடும்பநிகழ்ச்சிகள் மற்றும் விழாக்காலங்களில், பட்டாசுகள் மற்றும் ஒலிபெருக்கிகளை பயன்படுத்தும்போது, சட்டத்திற்கு உட்பட்ட டெசிபல் அளவினை உறுதிசெய்வதுடன், அவற்றை தவிர்ப்பது குறித்தும் நாம் சிந்திக்கவேண்டும். ஒலிமாசு விழிப்புணர்வில், ‘ஆவாஸ்’ போன்ற அமைப்புகள் முக்கியப் பங்காற்றும் வேளையில், முதலைப் பண்ணைக்கு அருகில் உள்ள வடநெம்மேலி கிராமமக்கள், விழாக்களின்போது சத்தத்தை குறைக்கவும் பட்டாசுகளை தவிர்க்கவும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்றது, ‘இன்பத்தேன் வந்து பாயுது காதினிலே!’ என்பது போன்ற நற்செய்தியாக அமைந்தது.
கிழக்கு கடற்கரைச்சாலையில் உள்ள விடுதிகள் மட்டுமல்ல, நாம் அனைவரும் வடநெம்மேலி மக்களின் வழியைப் பின்பற்றினால், அது சுற்றுச்சூழலுக்கும் அங்கு வாழும் பல உயிரினங்களுக்கும் நாம் செய்யும் மிகப்பெரிய நன்மையாகும். நாம் ஒன்றிணைந்தால் இது சாத்தியமே!