வடகிழக்குப் பருவமழை காலத்தில் விதைக்கக் கூடிய 5 வகை கீரைகள்!

வடகிழக்குப் பருவமழை காலத்தில் சிறுகீரை, அரைக்கீரை, பாலக்கீரை உள்ளிட்ட 5 முக்கியக் கீரைகளை மாடியில் எளிதாக வளர்த்து அறுவடை செய்வது எப்படி என்று தெரிந்து கொள்ளுங்கள்.
கீரைகள் | greens gardening
கீரைகள் | greens gardeningImage credit: Gemini AI
கலைமதி சிவகுரு

கலைமதி சிவகுரு, 1983-ல் நாகர்கோவில் ஹோலி கிராஸ் கல்லூரியில் பட்டம் பெற்றவர். இவரது படைப்புகள் மங்கையர் மலர், தேவதை, தினத்தந்தி குடும்ப மலர் இதழ்களில் வெளியாகிப் பரிசுகள் பெற்றுள்ளன. தற்போது கல்கி குழுமத்தில் எழுதுகிறார். சமையல், ஆன்மிக வாசிப்பு, தையல் கலையில் ஆர்வம் கொண்டவர்.

Updated on: 

தமிழகத்தின் முதன்மை வேளாண் பருவமான வடகிழக்குப் பருவமழை காலம் அக்டோபர் முதல் டிசம்பர் வரை, பயிர் வளர்ச்சிக்கு உகந்த களத்தை அமைத்துத் தருகிறது. குறுகிய காலத்தில் பலன் தரும் கீரை வகைகளை சாகுபடி செய்ய இக்காலம் மிகவும் ஏற்றது. அந்த வகையில் எளிதாக வளர்த்து பலன் கிடைக்கும் 5 முக்கியக் கீரைகள் மற்றும் அவற்றின் விதைப்பு முறைகளைப் பற்றி இங்கே பார்க்கலாம்.

1. சிறுகீரை: குறைந்த பராமரிப்பில் 20 முதல் 25 நாட்களில் அறுவடைக்குத் தயாராகும். இதை எளிதாக வளர்க்க முதலில் மண்ணை நன்றாக கொத்தி தயாராக வைத்து விட்டு கீரை விதைகள் சிறியதாக இருப்பதால் மணலோடு கலந்து தூவி விடவும். அதனால் ஒரே இடத்தில் கொத்தாக இல்லாமல் இடம் விட்டு முளைக்கும். விதைத்த உடனே பூ வாளி வைத்து தண்ணீர் தெளிக்கலாம். 4 – ம் நாளில் குட்டி குட்டியாக முளைத்து பச்சை கம்பளம் போல் வளர்ந்து அழகாக காட்சி அளிக்கும்.

செடி வளர ஆரம்பித்ததும் புளித்த மோர் தெளித்தால் இலைகள் பெரிதாக பச்சையாக வளரும். வாரம் ஒருமுறை வேப்பெண்ணெய் தண்ணீரில் கலந்து தெளித்து விட்டால் பூச்சிகள் வராது. சரியாக 25 -ம் நாளில் பச்சை பசேல் என்று இருக்கும் சிறுகீரை அறுவடை செய்து விடலாம்.

இதையும் படியுங்கள்:
வீட்டுத் தோட்டத்தில் சுண்டைக்காய் செடி கொத்துக் கொத்தாக காய்க்க எளிய வழிகள்!
கீரைகள் | greens gardening

2. அரைக்கீரை: இதை மிக வேகமாக வளரக்கூடியது. 25 முதல் 30 நாட்களில் தொடர்ந்து பல முறை அறுவடை செய்யலாம். முதலில் செம்மண் மற்றும் மக்கிய தொழுஉரம் கலந்து வைத்துக் கொள்ளலாம். விதைகளை மணலில் அல்லது சாம்பலிலோ கலந்து பரவலாக தூவி லேசாக தண்ணீர் தெளித்து விடலாம். விதைகள் 5-ம் நாளில் இருந்து முளைக்க ஆரம்பித்து விடும். மண் எப்போதும் லேசான ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். 10 முதல் 15 நாட்களில் ஒரு முறை மண்புழு உரம் சேர்க்கலாம். நீர்த்த புளித்த மோர் தெளிக்கலாம். பூச்சிகள் இருந்தால் வேப்பெண்ணெய் சரியான அளவில் தண்ணீரில் கலந்து தெளிக்கவும். செடியின் மேல் பகுதியை வெட்டி விட்டால் மீண்டும் துளிர் விடும். சரியாக 30 நாட்களில் அறுவடை செய்யலாம்.

3. பாலக்கீரை: பாலக்கீரை, பருவமழை காலத்தில் பெரிய இலைகளுடன் செழித்து வளரும். செம்மண் தொழு உரம் அல்லது மண்புழு உரம் சம பங்கு கலந்து காய்கறி கழிவு உரம் சிறிதளவு கலந்து மண் கலவையை வைத்திருப்பது சிறந்தது. 15 செ.மீ இடைவெளியில் வரிசையாக 1/2 அங்குல ஆழத்தில் விதைத்து லேசாக மண் மூட வேண்டும். தெளிப்பானை பயன்படுத்தி லேசாக நீர் தெளிக்கவும். 30 முதல் 35 நாட்களில் வெளிப்பக்கமுள்ள பெரிய இலைகளை மட்டும் நறுக்கி அறுவடை செய்யலாம். அடித் தண்டை வெட்டாமல் இலைகளை மட்டும் எடுத்தால் 3 முதல் 4 முறை வரை தொடர்ந்து அறுவடை பெறலாம்.

கீரைகள் | greens gardening
கீரைகள் | greens gardeningImage credit: Chatgpt

4. வெந்தயக்கீரை: இது மிகக் குறுகிய காலத்தில் அறுவடைக்கு வரும் கீரை வகை. நல்ல வடிகால் வசதியுள்ள தோட்டத்து மண் (50%) + மண்புழு உரம் (30%) + தேங்காய் நார் (20%) கலந்த கலவை மண் தேவை. வெந்தயத்தை இரவில் ஊறவைத்து மறுநாள் விதைத்தால் 2-3 நாட்களில் முளைத்துவிடும். சீராகத் தூவி, மேலே ¼ அங்குல ஆழத்திற்கு மெல்லிய மண் படலம் மூடி வேண்டும்.

மழைக்காலத்தில் பூஞ்சைக்காளான் தாக்குதல் வராமல் இருக்க மண் காய்ந்த பிறகு நீர் தெளித்தால் போதுமானது. 15 முதல் 20 நாட்களில் 4-6 அங்குல உயரம் வளர்ந்ததும் வேரோடு பிடுங்கி அறுவடை செய்யலாம்.

இதையும் படியுங்கள்:
மழைக்காலத்திலும் புதினா செடி தளதளன்னு வளர இந்த 4 டிப்ஸ் போதும்!
கீரைகள் | greens gardening

5. தண்டுகீரை: தோட்டத்து மண் (40%) + நன்கு மக்கிய தொழு உரம் (40%) + தேங்காய் நார் (20%) கலந்த மண் கலவையையில் விதைகளை 3 முதல் 4 மடங்கு உலர்ந்த மணல் அல்லது சாம்பலைக் கலந்து சீராக தூவி மணலால் லேசாக மூட வேண்டும். விதைத்த 3 முதல் 5 நாட்களில் சிறிய முளைகள் வரத் தொடங்கும். செடி வளர்ந்ததும் செடிகளுக்கு இடையே போதிய இடைவெளி இருந்தால் மட்டுமே தண்டு தடிமனாகவும் சதைப்பற்றுடனும் வளரும். பூவாளி மூலம் நீர் தெளிக்க வேண்டும். விதைத்து 15-வது நாளில் 1 லிட்டர் தண்ணீரில் 30 மி.லி பஞ்சகவ்யா தெளித்து வந்தால் செடி பசுமையாகவும் தண்டு பருமனாகவும் வளரும். 40 நாட்களில் தண்டுக் கீரை அறுவடைக்குத் தயார் நிலையை அடையும்.

இந்தக் கட்டுரையை வாசிப்பதன் மூலம், இரசாயன நஞ்சற்ற சொந்த வீட்டுத் தோட்டத்து மூலிகைக் கீரைகளைத் தொடர்ந்து அறுவடை செய்து, உங்கள் குடும்பத்தினரின் நோய் எதிர்ப்புச் சக்தியையும் ஆரோக்கியத்தையும் முழுமையாகப் பாதுகாக்கலாம்.