

வெயில் காலம் வந்தாலே வீட்டுத் தோட்டச் செடிகளில் வெள்ளை பஞ்சு போலப் படர்ந்து, செடிகளை வாடச் செய்யும் மாவுப்பூச்சிகள் தொல்லை தருகிறதா? எவ்வளவு சக்திவாய்ந்த மருந்து அடித்தாலும் அவற்றின் மேலிருக்கும் மெழுகு கவசம் அழிவதில்லை என்று கவலைப்படுகிறீர்களா? ரசாயனக் பூச்சிக்கொல்லிகளுக்கு விடைகொடுத்துவிட்டு, உங்கள் வீட்டுப் சமையலறையில் உள்ள எளிய பொருட்களைக் கொண்டே இந்த மாவுப்பூச்சிகளை எளிதில் வேரோடு அழிப்பது எப்படி என்பதை இந்தத் தொகுப்பில் பார்க்கலாம் வாருங்கள்!
நம் வீடுகளில் தோட்டத்திலும், தொட்டிகளில் வைத்திருக்கும் செடிகளில் வெள்ளை பஞ்சு போலக் காணப்படும் மாவுப்பூச்சி சாற்றை உறிஞ்சி செடிகளை வாடச் செய்யும். வெயில் காலம் வந்தால் மிளகாய், கொய்யா, மாதுளை, செம்பருத்தி, சீதாப்பழம் இவற்றில் இந்த மாவுப்பூச்சி படர்ந்திருக்கும் அதற்காக என்னதான் பவர்ஃபுல் மருந்து அடித்தாலும் இந்த மாவு பூச்சியின் மேலிருக்கும் Wax coat ஐ தாண்டி இந்த பூச்சிகளை பாதிக்காது. அவற்றை வேதிப்பொருட்கள் இல்லாமல், வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டே இயற்கை முறையில் எளிதாகக் கட்டுப்படுத்தலாம்.
1. அரிசி கழுவிய நீர்: இந்த பூச்சியின் மேலிருக்கும் மெழுகு போன்ற லேயரை அகற்றும் தன்மை அசிட்டிக் ஆசிட்-க்கு இருக்கு. இந்த அசிட்டிக் ஆசிட்டை வீட்டில் எளிதில் தயாரிக்கலாம். அரிசி கழுவிய தண்ணீரை 1 லிட்டர் அளவு எடுத்து ஒரு பாட்டிலில் ஊற்றி நிழலான பகுதியில் 4 அல்லது 5 நாட்கள் வைத்து விடலாம். பாக்டீரியா மற்றும் ஈஸ்ட் இந்த தண்ணீரில் இருக்கும் கார்போஹைட்ரேடை சாப்பிட்டு இதில் லேக்ட்டிக் ஆசிட், அசிட்டிக் ஆசிட் இன்னும் பல ஆசிட்களை உருவாக்கி விடும்.
இந்த கலவையில் தண்ணீர் கலக்காமல் நேரடியாக மாவு பூச்சிகள் இருக்கும் செடிகளின் மேல் ஸ்ப்ரே பண்ணினால் பூச்சியின் மேலிருக்கும் Wax layer அப்படியே கரைந்து போய்விடும். 2 முதல் 3 நாட்கள் இதை செய்தால் இந்த மாவு பூச்சியை முற்றிலும் அளித்து விடலாம்.
2. வேப்பெண்ணெய் மற்றும் சலவை சோப் பவுடர்: வேப்பெண்ணெய் மாவுப்பூச்சிகளின் சுவாசப் பாதையை அடைத்து அவற்றை முற்றிலும் அழிக்கும். அதற்கு 1 லிட்டர் தண்ணீரில் 50 மி.லி வேப்பெண்ணெய் மற்றும் 50 கிராம் சலவை சோப் பவுடர் கலந்து நன்றாகக் கலக்கவும்.
இந்த கலவையை மாலை வேளையில் மாவுப்பூச்சி உள்ள இடங்களில் தெளிக்கவும். வாரத்திற்கு ஒருமுறை என 3 வாரங்கள் தெளித்தால் பூச்சிகள் முழுமையாகக் கட்டுப்படும்.
3. இஞ்சி, பூண்டு மற்றும் மிளகாய்க் கரைசல்: பூச்சிகளுக்குக் காரமான வாசனையும் காட்டமும் சகித்துக் கொள்ள முடியாது. எனவே, 50 கிராம் பூண்டு, 25 கிராம் இஞ்சி, 2 பச்சை மிளகாய் ஆகியவற்றை அரைத்து 1 லிட்டர் தண்ணீரில் கலந்து வடிகட்டவும். இந்தக் கரைசலைச் செடிகளின் இலைகளின் அடிப்பகுதி மற்றும் தண்டுகளில் தெளித்து வர மாவுப்பூச்சிகள் செடியை விட்டு ஓடிவிடும்.
4. மைதாமாவு மற்றும் பெருங்காயத்தூள் கரைசல்: ஒட்டும் தன்மை உடைய 5 ஸ்பூன் மைதா மாவை கட்டிகள் இல்லாமல் நன்கு கரைத்து கொள்ளவும். பின் எரிச்சலை தரக்கூடிய பெருங்காயத்தூள் 2 ஸ்பூன் எடுத்து தனியாக சிறிது தண்ணீரில் கரைத்து வைக்கவும். பின்பு காதி சோப் கரைசல் அல்லது இயற்கை முறையில் தயாரித்த சோப் கரைசல் 1 ஸ்பூன் எடுக்கவும்.
ஒரு பாத்திரத்தில் 5 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்துக் கொதிக்க வைக்கவும். இத்துடன் கரைத்து வடிகட்டி வைத்த மைதா கரைசலை ஊற்றவும், பிறகு இந்த கரைசல் நன்கு ஆறியப் பிறகு பெருங்காயத்தூள் கரைசல் மற்றும் சோப்பு கரைசல் வடிகட்டி ஊற்றி நன்கு கலக்கி பின்னர் கூடுதலாக 5 கப் தண்ணீர் ஊற்றி அந்த தண்ணீரை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி காலையில் வெயில் நேரத்தில் தெளிக்க வேண்டும்.
இதில் பசையுடன் கூடிய மைதா கரைசல் பூச்சியின் மீது ஒட்டி கொண்டு பெருங்காயத் தூளின் எரிச்சலுடன் மாவுப்பூச்சி அத்தனையும் அடியோடு மறைந்து விடும்.
மேலே குறிப்பிட்டுள்ள இயற்கை முறைகளில் ஏதேனும் ஒன்றை வாரத்திற்கு ஒருமுறை தொடர்ந்து பின்பற்றி வந்தால், செடிகளுக்கு எந்த பாதிப்பும் இல்லாமல் மாவுப்பூச்சிகளை முழுமையாகக் கட்டுப் படுத்தலாம். பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தவிர்த்து இயற்கை முறைகளைப் பயன்படுத்துவது நம் செடிகளுக்கும் சூழலுக்கும் பாதுகாப்பானது.