

தொட்டால் விரலைத் துண்டாக்கும் அமேசான் நதியின் பிரானா மீன் மற்றும் சிங்கத்திற்கே சவால் விடும் அஞ்சாநெஞ்சன் ஹனி பேட்ஜர் பற்றிய திகிலூட்டும் தகவல்களை அறிவீர்களா? இயற்கையின் விசித்திரமான இந்த இரண்டு கொடூர விலங்குகளின் மிரள வைக்கும் ரகசியங்கள் இதோ!
1. தொட்டால் விரலைத் துண்டாக்கும் பிரானா:
விரால் மீனை பற்றி கேள்விபட்டிருக்கிறோம். விரலை தின்னும் மீனை பற்றி கேள்வி பட்டுள்ளீரா?
அதுதான் பிரானா (Piranha). மிகவும் கருணையற்ற மீன். இது இருக்கும் தொட்டியில் கைவிட்டால், உங்கள் விரல் ஆகிவிடும் ஸ்வாஹா. பிரானாவைத் தொட்டவன் இல்லை; அப்படித் தொட்டவன் கையை பிரானா விட்டதும் இல்லை. தொட்டால் விரல் போகும். வலியில் சும்மா உயிர் போகும்.
பிரானா என்றாலே நடுங்காத நபர் இல்லை எனலாம். இது ரம்பம் போன்ற பற்களை உடைய மிக மிக கோபக்கார மீன். தென் அமெரிக்க நதிகளிலும் ஏரிகளிலும் தான் இவை வசிக்கின்றன. முக்கியமாக அமேசான் நதியில் இது இல்லாத இடமே இல்லை; பொதுவாக இந்த மீன் 8 முதல் 12 அங்குலம் வரை வளரும்.
இந்த மீன்கள் மிகவும் பட்டினியாக கிடக்கும் போது மட்டும் தான் மனிதர்களை தாக்குகின்றன. மற்றபடி மனிதர்களை விட்டு விலகியே இருக்க விரும்புகின்றன. கோடை காலங்களில் நீர் நிலைகளில் தண்ணீர் மிகவும் குறையும் நாட்களில் உணவில்லாமல் மிக மிக ஆத்திரத்தில் வெறி கொண்டு உலாவுமாம்.
அப்போது அதன் எதிரில் எது வந்தாலும் அதோகதி தான். சும்மா குதறி விடுமாம் குதறி. எலும்பு கூட மிஞ்சாதம். அதன் மின்னல் வேக பற்களை மின் ரம்பத்திற்கு ஒப்பிடுகிறார்கள். சிவப்பு தொப்பை கொண்ட பிரானாக்கள்தான் மிகவும் வெறி பிடித்தவை.
பாரிசில் உள்ள சில நகைக் கடைகளில் மிக விலை உயர்ந்த வைரங்களை பிரானா தொட்டியில் வைத்து பாதுகாக்கிறார்கள்.
இந்த பிரானாவுக்கு பரிந்து பேச நிறைய பேர் உள்ளனர். புலியிடமிருந்தும் தப்பலாம் பிரானாவிடமிருந்து தப்ப முடியாது. சவுத் அமெரிக்கர்கள் இதனிடம் கொஞ்சம் மரியாதையோடு தான் நடந்து கொள்கிறார்கள். பிரானா பற்றிய இன்னொரு விஷயம். இப்படிபட்ட பிரானாவைக்கூட பொரித்தும் வருத்தும் தருவதற்கென்றே தனிப்பட்ட ரெஸ்டாரண்டுகள் உள்ளனவாம்.
விலை மட்டும் கேட்டால் தலை சுற்றும். பிரானாவை பற்றி பல படங்கள் வந்துள்ளன. 1978 இல் வெளிவந்த PIRANHA என்ற படம் தான் மிக நன்றாக எடுக்கப்பட்ட படம். இந்த மீன்களை வீட்டில் தொட்டியில் வளர்ப்பவர்களும் இருக்கிறார்கள். ஆனால் வீடுகளில் கேட்டில் நாய்கள் ஜாக்கிரதை என்று எச்சரிக்கை அறிவிப்பை தொங்க விடுவது போல இதன் தொட்டியில் பிரானாக்கள் ஜாக்கிரதை என்று எழுதி வைக்கிறார்கள்.
2. அஞ்சாநெஞ்சன் ஹனி பேட்ஜர்:
மிருகங்களிலேயே தில்லுள்ள மிருகம் சிங்கம். அந்த சிங்கத்தை கண்டாலும் பயப்படாத ஒரு ஜந்து உண்டென்றால் அது ஹனி பேட்ஜர் என்ற அஞ்சா நெஞ்சன் தான்.
பயம் என்றால் என்ன என்பதே தெரியாது இந்த பயலுக்கு. நீயா நானா பார்க்கலாம் என்று யானைக்கு கூட சவால் விடுவான். பத்து டன் ஆண் மத யானையும் பட்டென்று பட்டாளக்காரன் பக்கவாட்டில் ஒதுங்குவான். இந்த ஹனி பேட்ஜரை ஆப்பிரிக்காவில் இருக்கும் வேட்டைக்காரர்கள் டெத் சோல்ஜர் என்று அழைக்கின்றனர்.
கரடு முரடான காண்டாமிருகமும் கூட இவனிடமிருந்து விலகியே செல்லும். இவன் தன் கூர்மையான பல்லை பதித்தான் என்றால் அவ்வளவுதான் அதோகதிதான் பஞ்சர் ஆகிவிடும். இதனிடம் மாட்டினால் எப்பேர்ப்பட்ட பாம்புகளின் கதையும் கந்தல் ஆயிடும். என்னதான் விஷ பாம்புகள் கடிக்க முயன்றாலும் ஹனி பேட்ஜரின் மூன்று இன்ச் கடினமான தோலை துளைக்க முடியாது.
ஹனி பேட்ஜ்ரை சீண்டினால் கடைசிவரை சீண்டியவனை விட மாட்டான். குதறி விடுவான் குதறி. பின் வாங்குதல் என்றால் இவனுக்கு என்ன என்று தெரியாது. மேலும் இவன் முகத்தில் சாந்தமே பார்க்க முடியாது. எப்போதும் ரவுடி போல கைகளை மடித்து விட்டுக்கொண்டு திரிபவன்.
எவ்வளவு மரமானாலும் சரி, விறு விறு வென்று ஏறி தேன்கூட்டை பிழிந்து குடித்து விட்டுத்தான் மறு வேலை பார்ப்பான். ஆயிரம் தேனீக்கள் கொட்டினாலும் அசரமாட்டான். இவனிடம் அடிக்கடி வாலாட்டி வாங்கி கட்டிக் கொள்ளும் விலங்கு சிறுத்தை.
தன்னை விட பல மடங்கு பெரிய எதிரிகளையும் தன் கண்மூடி தனமான தாக்குதலால் கதி கலங்க வைத்து விடுவான்.. இவன் தோல் தடியானது மட்டுமல்ல மிகவும் லூஸானதும்கூட. இவன் உடம்பை மலை பாம்பு இறுக்க முடியாது. எப்படியோ சுழன்று சுழன்று வெளியே வந்து விடுவான். அப்படி வந்து விட்டால் மலை பாம்பு தலைஇல்லா பாம்பாகிவிடும்.
இவனை பற்றி இன்னொரு வேடிக்கையான விஷயம் skunk என்ற மிருகத்தை போல இவன் Stink -Bomb என்றழைக்கப்படும் குசு குண்டை போட்டு மூச்சு திணறடித்து விடுவான். இதற்கென்றே இவன் உடம்பில் ஒரு சுரப்பி இருக்கிறது. சுரங்கம் தோண்டுவதிலும் இவன் சுட்டி.
தேன் இவனுக்கு மிகவும் பிடிக்கும்; ஆனால் தேனையும் சாப்பிடுவான்; அதேசமயம் தேள் பல்லி பூரான்களையும் தின்று விடுவான்.