
சீனப் புத்தாண்டையொட்டி வீடுகள், வேலை செய்யும் பணிமனைகள், வணிக நிலையங்கள் போன்ற இடங்களின் முகப்பில் அல்லது வீடுகளின் முன்னால் பூஞ்செடிகள் வைப்பது போன்று, ‘மெண்டரின் தோடம் பழச் செடிகள்’ அழகாக காட்சிப்படுத்தி வைப்பது வழக்கமாக இருக்கிறது. சீனப் புத்தாண்டுக் காலத்தில் இந்த மெண்டரின் தோடம் பழச் செடிகள் வணிகம் அதிகமாக இருக்கும்.
மெண்டரின் தோடம் பழச் செடிகள் (Mandarie Orange plants) என்பது மெண்டரின் தோடம் பழம் காய்க்கும் சிறிய செடி வகைகள் ஆகும். சிலர் இதனை சிறிய வகை மரங்கள் என்றும் குறிப்பிடுவதுண்டு. இருப்பினும், இதன் தோற்றம் ஒரு செடியாகவே இருக்கிறது. இந்த மெண்டரின் தோடம் பழச் செடிகளில் பல உட்பிரிவுகள் உள்ளன. சில செடிகள் ஒரு அடி மட்டுமே வளரும். சில செடிகள் 2 முதல் 5 அடிகள் வரை வளரும். இந்தச் சிறிய தோடம்பழச் செடிகளில், பூச்செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குவது போன்று தோடம் பழங்களும் நூற்றுக்கணக்கில் காய்த்துக் கிடக்கும்.
மரத்தின் தண்டு மற்றும் முக்கிய கிளைகளில் முட்கள் உள்ளன. இலைகள் பளபளப்பாகவும், பச்சையாகவும், சிறியதாகவும் இருக்கும். இலைக்காம்புகள் குட்டையாகவும், கிட்டத்தட்ட இறக்கைகள் இல்லாததாகவும் அல்லது சற்று இறக்கைகள் கொண்டதாகவும் இருக்கும். பூக்கள் இலை அச்சுகளில் தனித்தனியாகவோ அல்லது சிறிய குழுக்களாகவோ பிறக்கின்றன. ஒரு முதிர்ந்த மாண்டரின் மரம் 80 கிலோ கிராம் (175 பவுண்டு) வரை பழங்களை விளைவிக்கும்.
மெண்டரின் ஆரஞ்சு பழங்கள் 40 முதல் 80 மில்லி மீட்டர்கள் எனும் அளவில் சிறியவை. இப்பழத்தின் நிறம் ஆரஞ்சு, மஞ்சள் - ஆரஞ்சு அல்லது சிவப்பு - ஆரஞ்சு என்றிருக்கிறது. இப்பழத்தின் தோல் மெல்லியதாகவும், எளிதில் உரிக்கக் கூடியதாகவும் இருக்கும். மற்ற சிட்ரஸ் பழங்களைப் போலவே, மாண்டரின் விதைகள் இல்லாமல் அல்லது குறைந்த எண்ணிக்கையிலான விதைகளைக் கொண்டிருக்கும்.
ஒரு மெண்டரின் ஆரஞ்சு பழத்தில் 85% நீர், 13% கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் மிகக் குறைந்த அளவு கொழுப்பு மற்றும் புரதம் உள்ளது. நுண்ணூட்டச் சத்துக்களில், 100 கிராம் குறிப்பு பரிமாறலில் வைட்டமின் சி மட்டுமே குறிப்பிடத்தக்க அளவில் உள்ளது. மற்ற அனைத்து ஊட்டச்சத்துக்களும் குறைந்த அளவிலேயே இருக்கின்றன.
இனிப்பு ஆரஞ்சுகளை விட மெண்டரின்கள் வலுவான மற்றும் இனிமையான சுவை கொண்டவை. மெண்டரின்கள் தோல் நீக்கி புதியதாக உண்ணப்படுகின்றன அல்லது சாலட்டுகள், இனிப்பு வகைகள் மற்றும் முக்கிய உணவுகளில் பயன்படுத்தப்படுகின்றன.
சீன மரபு வழிப் பழக்க வழக்கங்களில் ஒன்றான, சீனப் புத்தாண்டுக் காலத்தில் மெண்டரின் தோடம்பழச் செடிகளை வீட்டின் முகப்பில் வைக்கும் வழக்கம், சீனாவில் மட்டுமின்றி, ஹாங்காங், மக்காவ், தைவான் மற்றும் சீனர்கள் அதிகமாக வாழும் அல்லது சீன மரபு வழிப் பழக்க வழக்கங்கள் பரவிய நாடுகளான சிங்கப்பூர் மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளிலும் இருந்து வருகிறது என்பது இங்கு கவனிக்கத்தக்கது.