
இந்தியாவின் ஒன்றியப் பகுதியான ஜம்மு - காஷ்மீரிலுள்ள ஒரு மலை வாழிடத்தின் பெயர் தூத்பாத்ரி (Doodhpathri) எனப்படுகிறது. இது பட்காம் மாவட்டத்தின் பீர்வா பகுதியில் அமைந்துள்ளது. கடல் மட்டத்திலிருந்து 2,730 மீட்டர் (8,960 அடி) உயரத்தில் இப்பகுதி அமைந்துள்ளது. ஒன்றியப் பகுதியின் கோடைக்காலத் தலைநகரான ஸ்ரீநகரிலிருந்து 42 கி.மீ. (26 மைல்) தொலைவிலும், மாவட்டத் தலைமையகமான பட்காமிற்கு 22 கி.மீ. (14 மைல்) தொலைவிலும் அமைந்துள்ளது.
"தூத்பாத்ரி" என்ற பெயருக்கு பால் பள்ளத்தாக்கு என்று பொருள். இப்பகுதிக்கு இப்பெயர் வந்தததற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதாவது, காஷ்மீரின் புகழ் பெற்ற துறவியான ஷேக் உல் ஆலம் ஷேக் நூர் தின் நூரானி இங்கு பிரார்த்தனை செய்திருக்கிறார். ஒரு முறை அவர் பிரார்த்தனை செய்வதற்கு, புல்வெளிகளில் தண்ணீரைத் தேடிய போது, ஒரு குச்சியால் தரையில் குத்தியிருக்கிறார். அந்த இடத்திலிருந்து தண்ணீருக்குப் பதிலாக, பால் வந்ததால், இப்புல்வெளிப் பகுதிக்கு, பால் பள்ளத்தாக்கு என்று சொல்லப்படும் "தூத்பத்ரி" என்ற பெயர் வந்தது என்று அந்தக் கதை சொல்கிறது.
உண்மையில் இங்குள்ள புல்வெளிகளில் பாயும் நீர் தொலைவிலிருந்து பார்க்கும் போது பாலின் வெண்மையான நிறத்தைக் கொண்டுள்ளது. மேலும், ஆண்டு முழுவதும் மிகவும் குளிராக இருக்கிறது. பரந்த புல்வெளிகளுக்கு மேல் பசுமையான புற்களும், பெரிய கற்களின் மீது ஓடும் நீரோடைகளும் அதன் அழகை மேலும் அதிகரிக்கின்றன. தூத்பத்ரி, சாங் பகுதி வரை பல வண்ண மலர்களின் பன்முகத்தன்மை கொண்ட புல்வெளி நிலப்பரப்புகளைக் கொண்டிருக்கிறது. புகழ்பெற்ற தோசா மைதானம் இதன் மேற்கில் அமைந்துள்ளது.
இமயமலையின் பிர் பாஞ்சால் மலைத்தொடரில் ஒரு கிண்ண வடிவிலான பள்ளத்தாக்கில் கடல் மட்டத்திலிருந்து 2,730 மீ (8,957 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இது பனி மூடிய மலைகளாலும், பைன், தேவதாரு , போன்ற மரங்களாலும் சூழப்பட்டுள்ளது. இந்தப் புல்வெளிகள் குளிர்காலத்தில் பனியால் மூடப்பட்டிருக்கும்.
தூத்பத்ரிக்கு நிரந்தர குடியேற்றம் என்பது இல்லை. மேலும், கடுமையான பனிப்பொழிவு காரணமாக, குளிர்காலத்தில் இதை அணுக முடியாது. கோடைக்
காலத்தில் பட்காம் மாவட்டத்தின் சமவெளிகளில் இருந்து இடையர்கள் தங்களது கால்நடைகளை மேய்ச்சலுக்காக அழைத்து வந்து இங்கு சுமார் ஆறு மாதங்கள் வரை தங்கியிருப்பார்கள்.
ஸ்ரீநகர் அல்லது ஸ்ரீநகர் விமான நிலையத்திலிருந்து தூத்பத்ரியை கார் அல்லது பேருந்து மூலம், ஸ்ரீநகர் - பட்காம் - கன்சாஹிப் - இரையார் வழியாக மொத்தம் சுமார் 42 கிமீ (26 மைல்) கடந்து 2 முதல் 3 மணி நேரத்திற்குள் சென்றடைய முடியும்.