வெங்காயத் தாள் வேரை தூக்கி எறியாதீங்க.. தொட்டியில் நட்டால் என்ன நடக்கும் தெரியுமா?

சமையலுக்குப் பிறகு மிஞ்சும் வேர்ப் பகுதியிலிருந்து மீண்டும் பசுமை தழைக்கும் ரகசியம் இதுதான்.
வெங்காயத் தாள்
வெங்காயத் தாள் Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா. 15 வயதில் துவங்கிய இவரது எழுத்து பயணம் தொய்வின்றி தொடர்கிறது. 200 க்கும் மேற்பட்ட தன்னம்பிக்கை கட்டுரைகள், 20 க்கும் மேற்பட்ட சிறுவர் கதைகள், எண்ணற்ற நேர்காணல்கள், பரிசு பெற்ற சிறுகதைகள், கவிதைகள் , புத்தகமாக வெளிவந்த சிறுகதைத் தொகுப்பு என இவரது எழுத்துகளின் பரிமாணம் விரிவடைந்து கொண்டே வருகிறது. தற்போது கல்கி ஆன்லைனில் தொடர்ந்து வெளிவரும் கட்டுரைகள் இவரது எழுத்துக்கு கிடைத்த அங்கீகாரம். இவரது வயது கூடினாலும், இவரது எழுத்து அன்றும் இன்றும் என்றும் இளமையின் புத்துணர்வு தரும்.

Updated on: 

வெங்காயத்தை ஒத்த மணத்துடன் பலரும் விரும்பும் சுவையான வெங்காயத் தாள் பற்றித் தெரியுமா? சமையலில் சட்னி, வெஜிடபிள் சூப், ஃப்ரைடு ரைஸ், நூடுல்ஸ், பொரியல் போன்றவற்றில் பயன்படுத்தப்படும் இது குறைந்த கலோரியும் பல்வேறு சத்துகளும் நிறைந்த காய்கறிகளில் ஒன்று.

வெங்காயத்தைப் போலவே சுவையும் மணமும் கொண்டது வெங்காயத் தாள் என்றாலும் இது வெங்காயத்தின் இலைப் பகுதி மட்டுமல்ல; இளம் வெங்காயச் செடியின் பச்சைத் தாள்களும், அடிப்பகுதியில் உள்ள வெள்ளைத் தண்டும் சேர்ந்ததே வெங்காயத் தாள் (Spring Onion) ஆகும். இதில் உடலுக்குத் தேவையான வைட்டமின் C, K, வைட்டமின் A (பீட்டா கரோட்டின் வடிவில்) ஃபோலேட் (வைட்டமின் B9), பொட்டாசியம், கால்சியம், நார்ச்சத்து மற்றும் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளிட்ட பல்வேறு சத்துகள் உள்ளதால் இதய ஆரோக்கியம் முதல் எலும்பு வலு வரை நிறைய நலன்களை தருகிறது என்பதால் இதை அடிக்கடி சமையலில் சேர்க்கலாம்.

இவ்வளவு நன்மைகளுடன் சமையலுக்குத் தேவையான வெங்காயத் தாளை ஒவ்வொரு முறையும் கடைக்குச் சென்று வாங்க வேண்டியது சங்கடமாக உள்ளதா? இனி கடைக்குச் செல்வது அவசியமில்லை. ஒருமுறை வாங்கிய வெங்காயத் தாளின் அடிப்பகுதியில் இருக்கும் வேரைத் தூக்கி எறியாமல், ஒரு சிறிய தொட்டியில் நட்டு வைத்தாலே போதும். சில நாட்களில் மீண்டும் பசுமையான வெங்காயத் தாள் வளரத் தொடங்கிவிடும்.

வீட்டில் பால்கனி, மொட்டை மாடி அல்லது ஜன்னல் ஓரம் எனச் சிறிய இடத்திலும் வெங்காயத் தாள் எளிதாக வளர்க்கலாம். அதைப் பற்றிய விபரங்களை இங்கு காண்போம்.

வெங்காயத் தாள் வளர்க்க அதிக செலவு ஆகாது. கடையில் வாங்கிய வெங்காயத் தாள், அடிப்பகுதியில் வேருடன் இருக்கும் வெங்காயத் தண்டு. சிறிய பூந்தொட்டி அல்லது பழைய பிளாஸ்டிக் டப்பா, செம்மண் அல்லது தோட்ட மண். இயற்கை உரம் அல்லது மண்புழு உரம், தண்ணீர் தெளிப்பான் ஆகியவையே போதும்.

குறிப்பாக வேர்கள் இருக்கும் அடிப்பகுதியைத் தேர்ந்தெடுக்க வேண்டும். வேர் இல்லாத வெட்டப்பட்ட தண்டுகளை நடுவதற்குப் பதிலாக, வேருடன் இருக்கும் தண்டுகளைப் பயன்படுத்துவது நல்லது.

வெங்காயத் தாளை நடவு செய்யும் முறைகள் இதுதான்..

கடையில் வாங்கிய வெங்காயத் தாளின் பச்சைப் பகுதியை சமையலுக்குப் பயன்படுத்திக்கொண்டு வெள்ளை நிற அடிப்பகுதியையும் வேர்களையும் தனியாக வெட்டிக்கொள்ளுங்கள்.

அடிப்பகுதியில் சுமார் 2 முதல் 3 செ.மீ. தண்டு இருக்கும்படி வெட்டுங்கள்.

ஒரு தொட்டியில் செம்மண், தேங்காய் நார் உரம், மண்புழு உரம் ஆகியவற்றைக் கைகளால் கலந்து நிரப்பிக் கொள்ளுங்கள்.

வெங்காயத் தாள்
வெங்காயத் தாள்Gemini image

இப்போது தண்டின் மேற்பகுதி மண்ணுக்கு வெளியே தெரியும் படியும் அதன் வேர்ப்பகுதி மண்ணுக்குள் செல்லும் படியும் நடுங்கள் . இதில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி, நேரடியாகக் கடுமையான வெயில் படாத இடத்தில் வையுங்கள்.

முதல் 2 முதல் 3 நாட்களில் புதிய துளிர்கள் தெரியத் துவங்கி சுமார் ஒரு வாரத்தில் தாள்கள் நன்றாக வளரத் தொடங்கும். தொடர்ந்து 2 முதல் 3 வாரங்களில் பயன்படுத்தும் அளவுக்கு வளரக்கூடும். இந்த நிலைகள் பராமரிப்பு, வெப்பநிலை, செடியின் ஆரோக்கியம் ஆகியவற்றைப் பொறுத்து மாறுபடும்.

வெங்காயத் தாள் நன்றாக வளர இந்த முக்கிய குறிப்புகளை நினைவில் கொள்ளுங்கள்..

1. தினமும் 4 முதல் 6 மணி நேரம் மிதமான சூரிய ஒளி கிடைக்கும் இடத்தில் வையுங்கள். அதிக சூரிய ஒளி வேண்டாம்.

2. மண் ஈரப்பதத்துடன் இருக்க வேண்டும். அதிகமாகத் தண்ணீர் ஊற்றினால் வேர்கள் அழுகிவிடும்.

3.15 நாட்களுக்கு ஒருமுறை சிறிதளவு மண்புழு உரம் சேர்க்கலாம்.

4. தொட்டியின் அடியில் தண்ணீர் வெளியேறுவதற்குத் வடிகால் துளைகள் அவசியம் இருக்க வேண்டும்.

5. வெட்டுதலில் கவனம் தேவை. தாள்கள் வளர்ந்ததும் தேவையான அளவு மட்டும் வெட்டிப் பயன்படுத்துங்கள். அடிப்பகுதியை அப்படியே விட்டுவிடுங்கள்.

6. மேலும் ஒரே வேரிலிருந்து சில முறைகள் வளர விடலாம் என்பதால் வெங்காயத் தாளை வெட்டும்போது அடிப்பகுதியை முழுமையாக வெட்டிவிடாமல் விட்டால் மீண்டும் துளிர்க்கும். ஆனால் ஒரே வேரிலிருந்து முடிவில்லாமல் வளர்க்க முடியாது. சில முறை அறுவடை செய்த பிறகு வளர்ச்சி குறையலாம். அப்போது புதிய வேர்களை நட்டு வளர்க்கலாம்.

இதையும் படியுங்கள்:
சின்ன வெங்காயம் வளர்ப்பது இவ்வளவு சுலபமா? 5 நாளில் துளிர்விடும் எளிய ரகசியம்!
வெங்காயத் தாள்

நிறைய பேருக்கு தண்ணீரில் மட்டும் வளர்க்க முடியுமா எனும் கேள்வி உண்டு. ஆம் முடியும். வேருடன் இருக்கும் வெங்காயத் தண்டுகளை எடுத்து ஒரு சிறிய கண்ணாடி டம்ளரில் வையுங்கள்.வேர்கள் மட்டும் மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி நல்ல வெளிச்சம் கிடைக்கும் இடத்தில் வையுங்கள். 1 முதல் 2 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீரை மாற்றுங்கள்.

புதிய பச்சைத் தாள்கள் வளர ஆரம்பிக்கும். இருப்பினும் நீண்ட கால வளர்ச்சிக்கும், ஆரோக்கியமான அறுவடைக்கும் மண்ணில் வளர்ப்பதே சிறந்தது.

வெங்காயத் தாளை வீட்டில் வளர்ப்பதால்

அடிக்கடி கடைக்குச் சென்று வாங்க வேண்டியதில்லை. நாம் நினைத்தபோது சமையலுக்குத் தேவையானபோது பறித்துப் பயன்படுத்தலாம்.

இதையும் படியுங்கள்:
20 நாட்களில் கைநிறைய வெந்தயக் கீரை: வீட்டிலேயே வளர்க்கும் எளிய முறை!
வெங்காயத் தாள்

குறைந்த இடத்தில் வளர்க்கலாம். மேலும் நம் குழந்தைகளுக்கு செடி வளர்ப்பதில் ஆர்வத்தை ஏற்படுத்தலாம். முக்கியமாக வீட்டில் சிறிய சமையலறைத் தோட்டம் அமைக்க உதவும். 

ஆம். வெங்காயத் தாளை வெட்டிப் பயன்படுத்திய பிறகு அதன் வேர்ப்பகுதியைத் தூக்கி எறியாமல் தொட்டியில் நட்டு வைப்பதன் மூலம் சமையலறைக் கழிவாக நினைக்கும் ஒரு சிறிய வேர்ப்பகுதியே உங்கள் வீட்டின் பசுமையான காய்கறித் தோட்டத்திற்கு அச்சாரமாகி ஆர்வத்தை தூண்டும்.

இனி என்ன? ஃபிரைடு ரைஸ்க்காக வெங்காயத் தாளை தேடி அலைய வேண்டியதில்லை.

இனி ஃப்ரைடு ரைஸ், சூப் அல்லது சட்னிக்குத் தேவையான வெங்காயத் தாளுக்காக ஒவ்வொரு முறையும் கடைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை; வீட்டிலேயே எளிதாக அறுவடை செய்ய முடியும்.