தேனீக்களின் நடனம்: நோபல் பரிசு வாங்கிய ரகசியம்!

Bee collecting nectar from a flower
Bee collecting nectar from a flower
Published on

தேனீக்கள் உலகின் மிகவும் சுவாரஸ்யமான உயிரினம். தேனீக்கள் குறித்த ஆச்சரியமான விஷயங்களை இந்தப் பதிவில் அறிந்து கொள்வோம். தேனீதான் உலகின் மிகச்சிறந்த மகரந்தச் சேர்க்கையாளர். தென்னை, வாழை, பூசணி, ஆப்பிள் போன்ற பல பழ வகைகள், காபி, ஏலக்காய், பருத்தி போன்ற செடிகள் மற்றும் உணவு தானியங்கள் என பல கோடி மகரந்தச் சேர்க்கைகளுக்குக் காரணமாக இருப்பவை தேனீக்கள்தான்.

உலகில் ஐந்து வகை தேனீக்கள் இருக்கின்றன. மலைத் தேனீ, இந்தியத் தேனீ, கொம்புத் தேனீ, இத்தாலியன் தேனீ, கொடுக்கில்லாத் தேனீ. இதில் இந்திய, இத்தாலிய மற்றும் கொடுக்கில்லாத தேனீக்களைத்தான் மனிதர்கள் வளர்க்கிறார்கள். மற்ற தேனீக்கள் தானாகவே காட்டில் வளரும். ஒரு குடும்பத்தில் ஒரு ராணித் தேனீ, சில நூறு ஆண் தேனீக்கள், பல்லாயிரம் பணித்தேனீக்கள் இருக்கும். இதில் ஆண் தேனீக்களுக்கு 90 நாட்களும், பணித்தேனீக்களுக்கு 70 நாட்களும், ராணித்தேனீக்கு இரண்டு வருடங்களும் ஆயுள் காலமாகும். ராணித் தேனீக்களுக்கு முட்டையிடுவது மட்டும்தான் வேலை. ஆண் தேனீக்கு, ராணியோடு இணைவதும் தேன் கூட்டைப் பாதுகாப்பதும் கடமை.

இதையும் படியுங்கள்:
கியூட்னஸின் உச்சம்: மனதை உருக வைக்கும் 10 குட்டி பறவை மற்றும் விலங்குகள்!
Bee collecting nectar from a flower

மற்ற எல்லா வேலைகளும் பணித் தேனீக்களின் பொறுப்பு. உணவுச் சேகரிப்பு, தேன்கூடு கட்டுவது, தேனை பக்குவப்படுத்துவது, கூட்டைச் சுத்தமாகப் பராமரிப்பது எல்லா வேலைகளையும் பணித் தேனீக்கள்தான் கவனிக்கும். தேனீக்களின் பொறியியல் அறிவு அபாரமானது. தேன் கூட்டை அறுங்கோண வடிவத்தில் கட்டும். காரணம், இப்படிக் கட்டினால்தான் ஒரு சென்டி மீட்டர் இடத்தைக்கூட வீணாக்காமல் முழுமையாகப் பயன்படுத்த முடியும். ஆண் தேனீகளுக்குப் பெரிய அறுங்கோண செல், பணித் தேனீக்களுக்குச் சிறிய அறுங்கோண செல் வடிவத்தில் கூடு கட்டிவிட்டு, ராணித் தேனீக்கு சிலிண்டர் வடிவில் செல் கட்டும். கூட்டின் கட்டுமானம் திருப்தியாக இருந்தால் மட்டுமே ராணித்தேனீ அதில் முட்டையிடும்.

பூக்களின் மகரந்தம் மற்றும் மதுரம் ஆகிய இரண்டும்தான் தேனீக்களின் உணவு. அப்போதைய பசிக்கு அப்போதே சாப்பிட்டுவிடும். பிறகு ஏன் தேன் சேகரிக்கிறது? குளிர் காலங்கள் மற்றும் பூ பூக்காத காலங்களில் உணவுத் தட்டுப்பாட்டைச் சமாளிக்கத்தான் தேனீக்கள் தேனை சேகரிக்கின்றன.

தேனீக்கள் தேன் சேகரித்துப் பதப்படுத்துவதுதான் உலகின் சிறந்த உணவுப் பதப்படுத்தும் தொழில் நுட்பம். தேன் தேடிச்செல்லும் பணித் தேனீக்கள், பூக்களின் மதுரத்தை உறிந்து தனது உடலில் இருக்கும் 'தேன் பை’யில் சேகரித்துக்கொள்ளும். அந்த மதுரம், முழுவதும் செரிக்காமல், தேனீயின் வயிற்றில் இருக்கும் நொதிகளுடன் சேர்ந்து திரவமாக மாறிவிடும். கூட்டுக்குத் திரும்பி வரும் தேனீக்கள், கூட்டின் வாசலில் காத்திருக்கும், தேனீக்களிடம் அந்தத் திரவத்தை ஒப்படைக்கும்.

இதையும் படியுங்கள்:
கொரில்லா பாதுகாப்பு: உலகளாவிய முயற்சிகள் மற்றும் சவால்கள்!
Bee collecting nectar from a flower

அதற்காக ஏப்பமிட்டு ஏப்பமிட்டு தேன் பையில் இருந்து திரவத்தை வெளியில் கொண்டு வந்து, எதிர் தேனீயின் வாயில் கொட்டும். ஒரு தேனீ இப்படி 50 முறை கக்கினால்தான், ஒரு துளி தேன் சேரும். கூட்டைப் பராமரிக்கும் தேனீக்கள் அந்தத் திரவத்தைக் கூட்டின் ஓர் ஓரத்தில் இருக்கும் தேனடையில் கக்கி, அதில் இன்வர்டோஸ் எனும் நொதியைச் சேர்க்கும். பிறகு அந்தத் திரவத்தில் இருந்து நீர்த்தன்மை வற்றிப்போவதற்காக தனது இறகை ஆட்டி ஆட்டி ஆவியாக்கும். பிறகு தேனைப் பாதுகாக்க ஒருவகை மெழுகைப் பூசி வைக்கும். இத்தனை நடைமுறைகளுக்குப் பிறகுதான் நாம் சுவைக்கும் தேன் உருவாகிறது.

உணவுத் தேவை ஏற்படும்போது, 'ஸ்கவுட்’ ஆக சில தேனீக்கள் முன்னே சென்று பூக்கள் இருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விட்டுக் கூட்டுக்குத் திரும்பும். கூட்டில் உள்ள மற்ற பணித் தேனீக்களுக்கு ஸ்கவுட் தேனீக்கள், தாங்கள் கண்டுபிடித்த தோட்டம் அல்லது சோலை எந்தத் திசையில், எவ்வளவு தொலைவில் உள்ளது என்பதை நடனம் ஆடி தெரிவிக்கும். இதில் இரண்டு வித நடனங்கள் உள்ளன. வட்ட நடனம் மற்றும் வாலாட்டு நடனம். வட்ட நடனத்தில் வட்டமிட்டு வட்டமிட்டு பூக்கள் இருக்கும் தொலைவை மட்டும் குறிக்கும். வாலாட்டு நடனத்தில் உயரப் பறந்து வாலை ஆட்டினால், சூரியன் இருக்கும் அதே திசையில் உணவு உள்ளது என்றும், கீழே பறந்து வாலை ஆட்டினால், சூரியனுக்கு நேரெதிர் திசையில் தோட்டம் உள்ளது என்றும் அர்த்தம்.

இதையும் படியுங்கள்:
மடகாஸ்கர் தீவை செழிப்பாக்கிய அரிய வகை யானைப் பறவை!
Bee collecting nectar from a flower

வாலை வேகமாக ஆட்டினால், சோலை அருகில் உள்ளது என்றும், மெதுவாக ஆட்டினால், தொலைவில் உள்ளது என்றும் அர்த்தம். சூரியன், சோலையின் திசை, தங்கள் கூட்டின் இருப்பிடம் இந்த மூன்றையும் சம்பந்தப்படுத்தி நடன அசைவுகள் இருக்கும். இந்த நுட்பமான நடன ரகசியத்தைக் கண்டுபிடித்த ஆஸ்திரிய ஸ்காலர்கார்ல்வான் ஃப்ரிஸ்-க்கு நோபல் பரிசு கொடுத்தார்கள்.

அதிக நறுமணமுள்ள மல்லிகை, ரோஜா போன்ற பூக்களைத் தேடி தேனீக்கள் போவதில்லை. சூரிய காந்தி, எள், முருங்கை, மா போன்றவற்றின் பூக்களைத்தான் தேனீக்கள் அதிகம் தேடி வருகின்றன. செங்காந்தள் மலர்கள் மீது தேனீக்களுக்கு விருப்பம் அதிகம் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள். தேனீக்களுக்கு தண்ணீரும் தேவை. தேனீக்கள் எப்போதும் ஓடும் தண்ணீரை மட்டுமே அருந்தும். தேங்கிய தண்ணீரை அருந்தாது.

தேன் சேகரிக்கும்போது தேனீக்களின் காலில் ஒட்டிக்கொள்ளும் பூக்களின் மகரந்தம், அடுத்தடுத்த பூக்களின் மேல், உட்காரும்போது விதவிதமான கூட்டணியுடன் பரவும். இதுதான் காடுகளின், சோலைகளின் பரவலுக்குக் காரணம். தேனீக்களை அதிகம் காடுகளுக்குள்தான் பார்க்க முடியும். காரணம், தேனீக்கள் இருக்கிற இடத்திலேயே இயற்கையாகவே அடர்ந்த காடுகள் உருவாகிவிடும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com