பூமியும் அதில் வாழும் உயிரினங்களும் உருவான வரலாறு மிகவும் வியப்பூட்டுபவை. நாம் வாழும் இந்த பூமி பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் உருவாகி மெல்ல மெல்ல வளர்ந்து பல யுகங்களைக் கடந்து இன்றைய நிலையை அடைந்துள்ளது. இதைப் பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்ளுவோம்.
பல கோடி ஆண்டுகளுக்கு முன்னால் சூரியனிலிருந்து பிரிந்து வந்த ஒரு பகுதியே இந்த பூமிப்பந்து. சூரியனுடைய ஈர்ப்பு விசையின் காரணமாக பூமியும் மற்ற கிரகங்களும் சூரியனைச் சுற்றி வருகின்றன. பூமியானது சூரியனிலிருந்து பிரிந்து வந்த பின்பு கோடிக்கணக்கான ஆண்டுகள் நெருப்புக்கோளமாகவே இருந்தது. பூமி தன்னைத்தானே சுற்றிக் கொண்டிருந்ததால் பூமியில் இருந்த அதிக அளவு இரும்பானது பூமியின் மையப்பகுதியில் தங்கத் தொடங்கியது. இரும்பை விட இலேசான மற்ற உலோகங்கள் இரும்பின் மேலே மெல்ல மெல்ல படிய ஆரம்பித்தன.
பூமியில் நிலவிய கடுமையான வெப்பம் காரணமாக பூமியில் இருந்த அணுக்கள் தனித்தனியே பிரிந்து பின்னர் ஒன்றாகக் கூடி பலவிதமான வாயுக்கள் உருவாகின. பிராண வாயு அணுவும் ஹைட்ரஜன் அணுவும் இணைந்து நீர் உருவானது. பூமியிலே நிலவிய கடுமையான வெப்பத்தின் காரணமாக நீரானது நீராவியாக மாறி வான்வெளிக்குச் சென்று பரவியது. வானத்திற்குச் சென்ற நீராவியானது அங்கு நிலவிய கடும் குளிர் காரணமாக நீராக மாற்றமடைந்தது.
நீராக மாற்றமடைந்த பின்னர் வான்வெளியில் மிதக்க இயலாத காரணத்தினால் பூமியை நோக்கிப் பாய்ந்தது. இப்படியாக மழை உருவானது. இவ்வாறு விழுந்த மழை நீரானது மீண்டும் நீராவியாக மாறி வான்வெளியை அடைந்தது. அப்போதெல்லாம் மழையானது இப்போது பெய்வது போல சிறிய அளவில் பெய்யவில்லை. மழை பெய்தால் தொடர்ந்து பல ஆண்டுகள் மிகக்கடுமையாக பெய்துகொண்டே இருந்தது.
தொடர்ந்து மழை பெய்ததன் காரணமாக பூமியின் மேற்பரப்பில் இருந்த பாறைகள் குளிர்ச்சி அடைந்து உறுதியாயின. பூமியும் குளிர்ச்சி அடைந்தது. இதனால் பூமியின் வெப்பமும் மெல்ல மெல்ல குறையத் தொடங்கியது. இதன் காரணமாக நீராவியாவது குறைந்து பெய்த மழையானது பூமியின் தாழ்வான பகுதிகளில் நிரம்ப ஆரம்பித்தது. இப்படியே நிரம்பி கடல், ஆறு, ஏரி, குளம் என பல வகையான நீர்நிலை ஆதாரங்கள் உருவாகின. மழை நீரானது பெருக்கெடுத்து ஓடும்போது பூமியின் மீது படிந்திருந்த உலோகங்கள், உப்பு போன்றவை கரைந்து நீரில் கலந்தன. தொடர்ந்து மழை பெய்வது நின்றதும் வானம் தெளிவாகியது. இதன் காரணமாக சூரிய ஒளியானது பூமியின் மீது விழத் தொடங்கியது.
கடல் நீரில் பல வகையான உலோகங்களும் அலோகங்களும் கலந்திருந்தன. பூமி வெப்ப மண்டலமாக இருந்தபோது வெளியேறிய கரியமில வாயுவானது, பூமியைச் சூழ்ந்து நின்றன. இவ்வாயு நீரில் இருந்த உயிர் அணுக்களை சூரிய ஒளியின் உதவியோடு தனியே பிரித்தது. இதன் காரணமாக பச்சைப் பாசி இனம் உருவானது. இந்த பச்சைப் பாசியானது தன்னுடைய உணவைத் தானே தயாரித்துக்கொள்ளும் திறன் பெற்றதாக இருந்தது. இவை கடலில் மிக வேகமாக வளர்ந்து பரவின.
இந்த பாசி இனம் உணவை உற்பத்தி செய்யும்போது மிஞ்சிய பிராண வாயுவானது வான்வெளியில் கலந்தது. இந்த சந்தர்ப்பத்தில்தான் கடலில் ஒற்றை அணு உயிர்கள் உருவாகின. இவற்றால் தங்களுடைய உணவைத் தாங்களே தயாரித்துக்கொள்ள முடியவில்லை. இதனால் இவை கடலில் இருந்த பாசியை தங்கள் உணவாக உட்கொண்டு வளர்ந்தன. இத்தகைய உயிரினங்களுக்கு வாய், கால், வால் போன்ற எந்த உறுப்பும் இல்லை. எனவே, இவை பாசிகளின் மீது சூழ்ந்து அவற்றைச் செரித்து வாழ்ந்து வந்தன.
மீன் போன்ற ஒரு உயிரினம் இந்தச் சூழ்நிலையில்தான் தோன்றியது. இந்த உயிரினத்திற்கு வாய், வயிறு போன்ற உறுப்புகளும் சுருள் போன்ற ஒரு உறுப்பும் அமைந்திருந்தது. இச்சுருள் போன்ற உறுப்பினாலே இவை உணவை கிரகித்துக் கொண்டன. இதைத் தொடர்ந்து வேறு சில உயிரினங்களும் தோன்றின. இவ்வுயிரினங்கள் மென்மையான உடலமைப்பைப் பெற்றிருந்தன. இவ்வுயிரினங்கள் கடலில் அபரிமிதமாக இருந்த சுண்ணாம்புச் சத்தைக் கொண்டு கூட்டை உருவாக்கிக் கொண்டன. இத்தகைய கூடுகளே பவழத் தீவுகளாக மாற்றமடைந்தன. இதன் பின்னர் கடல் பஞ்சு உயிரினம் தோன்றியது.
கடல் பஞ்சு உயிரினத்தைத் தொடர்ந்து கடலில் ஒரு புதிய வகை உயிரினம் தோன்றியது. இத்தகைய உயிரினங்கள் கடினமான உடல் அமைப்பைப் பெற்றிருந்தன. இவையே பின்னர் பூச்சி இனமாக மாற்றமடைந்தன. இத்தகைய உயிரினங்களுக்கு கால்களும் இருந்தன. இவை கடலுக்கு அடியில் பாசிகளைச் சாப்பிட்டு மிக வேகமாகப் பெருகின. இந்த உயிரினங்களுக்குப் பின்னர் புதியதொரு உயிரினம் கடலில் தோன்றியது. இவ்வுயிரினங்களுக்கு ஏராளமான கால்கள் அமைந்திருந்தன.
அதே நேரம், நிலப்பரப்பிலே தாவர வகைகள் தோன்றின. மெல்ல மெல்ல தாவரங்கள் பூமியின் பல பகுதிகளிலும் உருவாகின. பூமியில் ஏராளமான அளவில் சூரிய ஒளி விழுந்த காரணத்தினால் தாவர இனமானது மிக வேகமாக வளர்ந்தது. பின்னர் மரங்கள் மிகப்பெரிய அளவில் வளர்ந்தன. நன்கு வளர்ந்த மரங்களின் ஆயுட்காலம் முடிந்ததும் மடிந்து பூமிக்குள் புதையுண்டன. புதிய புதிய மரங்கள் முளைத்தன. பூமிக்குள் நிலவிய கடும் வெப்பத்தின் காரணமாக பூமிக்குள் புதையுண்ட மரங்கள் கரியாக மாற்றமடைந்தன. இந்த யுகமானது ‘கரியுகம்’ என்று அழைக்கப்பட்டது.
தொடர்ந்து, கடலில் மீன் இனமானது உருவானது. இத்தகைய மீன்கள் தற்போது காணப்படுவது போல அமைந்திருக்கவில்லை. பின்னர் மெல்ல மெல்ல இவை உருமாற்றம் பெற்றன. மீன்களின் உடலில் காற்றிலுள்ள பிராண வாயுவைச் சுவாசிக்கக்கூடிய நுரையீரல்கள் உருவாகின. இதன் காரணமாக ஆதி காலத்தில் தோன்றிய மீன் இனமானது நீரிலும் நிலத்திலும் வாழக்கூடியவைகளாக இருந்தன. நீர் நிலைகள் வற்றியபோது இவை நிலத்தில் வாழ ஆரம்பித்தன. இத்தகைய மீன்கள் முட்டையிட நீர்நிலைகளுக்குச் செல்ல வேண்டியது அவசியமானது. இதன் காரணமாக இவை உடலுக்கு அடியில் இருந்த செதிள்களின் உதவியோடு நிலத்தில் நகர்ந்து நீர் நிலைகளுக்குச் சென்றன.
பல்லாண்டுகளுக்குப் பின்னர் இத்தகைய செதிள்கள் மெல்ல மெல்ல கால்களாக மாற்றமடைந்தன. இத்தகைய உயிரினங்களே பின்னர் தவளை இனமாக மாற்றமடைந்தன. இவை நீரிலும் நிலத்திலும் வாழத் தகுதி பெற்றவைகளாக விளங்கின. இதன் பின்னர் பல்லியினம் தோன்றியது. இந்தப் பல்லி இனத்தில் பல்வேறு வகையான பல்லிகள் தோன்றின. பலவகையான டைனோசர்கள் தோன்றி பூமியில் ஆதிக்கம் செலுத்தின. பறக்கும் பல்லிகள் தோன்றின. ஆனால், இவற்றிற்கு பறவைகளுக்கு இருப்பதைப் போன்ற இறகுகள் அமைந்திருக்கவில்லை. இறக்கை போன்ற ஒரு தோல் படலத்தின் உதவியோடு இவை சிறிது தொலைவிற்குப் பறந்தன. இவை மீன்களைத் தின்று வாழ்ந்து வந்தன.
பறக்கும் பல்லி இனத்தைத் தொடர்ந்து பறவை இனம் தோன்றியது. பூமியின் வட துருவத்தில் இருந்த பனிப்பாறைகள் தெற்கு நோக்கிப் பரவியது. தெற்குப் பகுதியில் இருந்த பனிப்பாறைகள் வடக்கு திசை நோக்கிப் பரவத் தொடங்கியது. இதன் காரணமாக பூமியானது மீண்டும் மிகுதியாகக் குளிர்ச்சி அடையத் தொடங்கியது. இந்த யுகமானது ‘பனியுகம்’ என்று அழைக்கப்பட்டது. குளிர்ந்த இரத்தத்தை உடைய பல்லி இனமானது குளிரைத் தாங்க இயலாமல் வெகுவாக அழியத் தொடங்கியது.
இதன் பின்னர் வெப்பமான இரத்தத்தையும் உடலில் முடியுடனும் கூடிய உயிரினம் தோன்றியது. இத்தகைய உயிரினங்களில் உடலை மூடியிருந்த அடர்த்தியான முடியின் காரணமாக இவற்றால் கடும் குளிரையும் தாங்க முடிந்தது. இத்தகைய உயிரினங்கள் குட்டிகளை ஈன்றெடுத்தன. பாலைப் புகட்டித் தங்கள் குட்டிகளை வளர்த்தன. இதனால் இவை பாலூட்டி இனம் என்று அழைக்கப்பட்டது. இத்தகைய பாலூட்டிகள் மெல்ல மெல்ல பரிணாம வளர்ச்சி அடைந்து குரங்கு இனம் தோன்றியது. குரங்கு இனத்தின் ஒரு இனத்திலிருந்து மெல்ல மெல்ல மனித இனம் தோன்றியது.