
கடந்த பத்தாண்டுகளில் நாட்டில் மொத்தமாக வனப்பரப்பு அதிகரித்துள்ளது. வனப்பகுதியின் அதிகரிப்பு, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கும் காலநிலை மாற்றத்தைச் சமாளிப்பதற்கும் அரசாங்கத்தின் உறுதிப்பாட்டைப் பிரதிபலிக்கிறது. வனப் பகுதிகளின் பாதுகாப்புக்காக பல திட்டங்கள் அரசுகளால் செயல்படுத்தப்படுகின்றன.
வனப் பகுதியை அதிகரிக்க தேசிய பசுமை இந்தியா திட்டம், வனவிலங்கு வாழ்விட மேம்பாடு மற்றும் நகர்வன யோஜனா போன்ற பல திட்டங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. இது தவிர, காடு வளர்ப்பு ஈடு செய்யும் காடு வளர்ப்பு நிதி மேலாண்மை மற்றும் திட்டமிடல் ஆணையத்தின் கீழ் காடு வளர்ப்பும் செய்யப்படுகிறது.
நாட்டில் வனப் பகுதிகளை பாதுகாக்கவும், அதன் பரப்பினை அதிகரிக்கவும் அரசின் முயற்சிகளுக்கு பலனாக காடுகளின் பரப்பளவு முன்பு இருந்ததை விட அதிகரித்துள்ளது. தற்போதைய தரவுகளின்படி நாட்டின் வனப்பகுதி 25.17 சதவீதமாக அதிகரித்துள்ளது.
காடுகளைப் பாதுகாக்கவும் நிர்வகிக்கவும் மத்திய அரசு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு தொழில்நுட்ப உதவி மற்றும் நிதி உதவியையும் வழங்குகிறது. காடுகளைப் பாதுகாக்க மாநில வனத்துறைகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுக்கின்றன. வனப்பகுதிகளை ஆய்வு செய்தல், எல்லைகளை வரையறுத்தல், பாதுகாப்பு தூண்களை அமைத்தல் மற்றும் ரோந்து பணிகள் மூலம் காட்டை பாதுகாத்தல் ஆகியவை இதில் அடங்கும்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் அரசாங்கம் மிகப்பெரிய தொகையை வனப் பரப்புகளை அதிகரிக்க செலவிட்டுள்ளது.பசுமை இந்தியா திட்டத்திற்கு 624.69 கோடி ரூபாயும், வனவிலங்கு வாழ்விட மேம்பாட்டிற்கு 452.04 கோடி ரூபாயும், நகர் வன யோஜனாவிற்கு 308.87 கோடி ரூபாயும், CAMPAவின் வருடாந்திர செயல்பாட்டுத் திட்டத்தின் கீழ் 38,502.21 கோடி ரூபாயும் ஒதுக்கி இருந்தது.
இந்த நிதி, வன மறுசீரமைப்பு, வாழ்விட மேம்பாடு, மண் மற்றும் நீர் பாதுகாப்பு மற்றும் பல்லுயிர் பாதுகாப்பு ஆகியவற்றின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்படுகிறது.
இந்தியாவின் வனப்பகுதி 2015ம் ஆண்டில் பதிவு செய்யப்பட்ட தரவுகளின் அடிப்படையில் 7,94,245 சதுர கி.மீ. (24.16%) ஆக இருந்துள்ளது. தற்போது வனப் பகுதிகளின் பரப்பளவு உயர்ந்து 8,27,357 சதுர கி.மீ. ஆக உள்ளது. இது நாட்டின் மொத்த புவியியல் பரப்பளவில் 25.17 சதவிகிதம் ஆகும். இந்தத் தகவல் சமீபத்தில் வன ஆய்வுத் துறையால் வெளியிடப்பட்ட இந்திய வன நிலை அறிக்கையில் கொடுக்கப்பட்டுள்ளது.
வன ஆய்வுத் துறை தேசிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் கீழ் இயங்கும் ஒரு துறையாகும். இது ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் ஒருமுறை வனப்பகுதியின் பரப்பளவுகளை கணக்கிடுகிறது. இந்தத் தகவலை மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங் மாநிலங்களவையில் தெரிவித்தார்.