

ஆப்பிரிக்காவின் தெற்கு நில இருவாச்சி பறவை (ஹார்ன்பில்) இருவாச்சி குடும்பத்திலேயே மிகப்பெரிய இனமாகும். அதன் தனித்துவமான சமூக வாழ்க்கை, உணவுப் பழக்க வழக்கங்கள் மற்றும் இனப்பெருக்கச் சுழற்சி ஆகியவை இதை ஆப்பிரிக்காவில் மிகவும் சிறப்பான பறவைகளில் ஒன்றாக ஆக்குகின்றன. இந்தப் பறவையின் சிறப்பம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் காண்போம்.
சிங்கத்தின் கர்ஜனை: இப்பறவையின் இறகுகள் மற்றும் உடல் முழுக்க கருப்பு நிறத்தில் இருக்கும். கழுத்தை சுற்றியுள்ள பகுதி மட்டும் சிவப்பு நிறத்தில் இருக்கும். இதன் உரத்த அழைப்பு 5 கி.மீ. தூரம் வரை கேட்கக்கூடியது. இது சில சமயங்களில் சிங்கத்தின் கர்ஜனை என்று தவறாகக் கருதப்படுகிறது. இது கண்ணாடியில் தெரியும் தனது பிம்பத்துடனே சண்டையிடும் பழக்கம் கொண்டது.
மழைப் பறவை: பல ஆப்பிரிக்க சமூகங்களில், இது மழைக்கான முன்னோடியாகக் கருதப்படுகிறது. இதன் இறகுகளை ஆற்றில் வைத்தால் மழை வரும் என்று நம்பப்படுகிறது. இதனால் இதற்கு 'மழைப் பறவை' (Thunder bird) என்ற பெயருண்டு. இந்தப் பறவை இறந்தால், மனிதர்களைப் போலவே பாரம்பரிய அடக்கம் செய்யும் வழக்கத்தை சில சமூகங்களில் உள்ள மக்கள் செய்கிறார்கள்.
வாழ்விடமும் உணவுப் பழக்கமும்: இந்தப் பறவைகள் ‘நில ஹார்ன்பில்கள்’ என்று அழைக்கப்படுவது போலவே, தங்களின் நேரத்தின் 70 சதவிகிதத்துக்கும் அதிகமான பகுதியை தரையில் உணவு தேடுவதிலேயே செலவிடுகின்றன. இவை சிறந்த வேட்டையாடிகள் மற்றும் துப்புரவாளர்கள். இவற்றின் உணவுப் பட்டியலில் விஷப் பாம்புகள் உட்பட ஊர்வன, சிறிய பாலூட்டிகள், தவளைகள் மற்றும் கணுக்காலிகள் ஆகியவை அடங்கும். மேற்பரப்பில் உணவு குறைவாக இருக்கும்போது, புதைந்துள்ள இரையைப் பிடிக்க, தமது வலுவான அலகுகளைப் பயன்படுத்தி மண்ணைத் தோண்டும்.
விசித்திரமான வழக்கம்: இவை தாமதமாகவே முதிர்ச்சியடைகின்றன. பொதுவாக, பத்து ஆண்டுகளுக்குப் பிறகே இனப்பெருக்கம் செய்யத் தயாராகின்றன. பெண் பறவை வழக்கமாக இரண்டு முட்டைகள் இடும். ஆனால், முதலில் பொரித்த குஞ்சு மட்டுமே உயிர் வாழும். இரண்டாவது குஞ்சு, போதுமான உணவு இருந்தாலும்கூட பெற்றோராலும் மூத்த குஞ்சாலும் புறக்கணிக்கப்பட்டு இறந்துவிடும். முதல் குஞ்சு உயிர் பிழைக்கத் தவறினால் அதை ஈடுகட்டவே இரண்டாவது முட்டை இடப்படுவதாக ஆராய்ச்சியாளர்கள் கருதுகின்றனர். இவை ஒரு இனப்பெருக்க முயற்சியில் ஒரு குஞ்சை மட்டுமே வெற்றிகரமாக வளர்க்கின்றன. இவை 70 ஆண்டுகள் வரை வாழக்கூடிய நீண்ட ஆயுள் கொண்டவை.
சூழலியல் குறியீடு: இது ஆப்பிரிக்காவில் உள்ள 16 நாடுகளில் ஒரு முக்கிய இனமாக உள்ளது. அதன் இருப்பு ஆரோக்கியமான, பசுமையான புல்வெளி, சுற்றுச்சூழல் அமைப்பைக் குறிக்கிறது. இதன் எண்ணிக்கை குறைவது என்பது, அந்தச் சூழலியலில் ஏதோ தவறு நடக்கிறது என்பதற்கான சுற்றுச்சூழல் குறியீடாக செயல்படுகிறது.
அழிவு அபாயம்: இந்தப் பறவையின் தனித்துவமான இயல்புகளே இன்று அதன் அழிவு அபாயத்திற்குக் காரணமாக அமைந்துள்ளன. தென் ஆப்பிரிக்காவில் இது ‘அழிந்து வரும் இனம்’ (Endangered) என்று வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது தனது வரலாற்று எல்லைகளில் 70 சதவிகித இடங்களில் இருந்து மறைந்துவிட்டது.
வாழ்விட இழப்பு: மனிதக் குடியிருப்புகளின் விரிவாக்கம், அதிக மேய்ச்சல் மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவை இதன் வாழ்விடங்களை சிதைத்து, துண்டாக்குகின்றன. பெரிய பொந்துகளுடன் கூடிய மரங்கள் இதன் கூடு கட்டும் இடங்களாகும். இந்த மரங்கள் அழிவதால், இனப்பெருக்கம் செய்ய ஏற்ற இடங்களைத் தேடி இந்தப் பறவைகள் போராடுகின்றன.
மெதுவான இனப்பெருக்கம்: இதன் தாமதமான இனப்பெருக்க முதிர்ச்சி மற்றும் ஒரு நேரத்தில் ஒரே ஒரு குஞ்சை மட்டுமே வளர்க்கும் அதன் உத்தி, இதன் மீட்சிக்கு மிகப்பெரிய சவாலாக உள்ளது.
விஷத்தால் மரணம்: இந்தப் பறவைக்கு பிணந்தின்னும் பழக்கம் இருப்பதால், வேட்டையாடப்பட்ட விலங்குகளுக்காக வைக்கப்பட்ட விஷங்களை உண்ணும்போது, இந்தப் பறவைகளும் இரண்டாவதாக நச்சுக்குள்ளாகி இறக்கின்றன.
மனிதர்களால் மரணம்: இப்பறவை தனது பிம்பத்துடன் சண்டையிடும்போது ஜன்னல்கள் அல்லது வாகன கண்ணாடிகளை உடைக்கும். இதனால் ஏற்படும் இழப்புகளுக்காக மனிதர்களால் பழிவாங்கப்படுவதும் மரணத்திற்குக் காரணமாகிறது. இந்தப் பறவையை பாதுகாக்க ஆப்பிரிக்க அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.