உடுப்பி மட்டு குல்லா (Udupi mattu gulla) எனும் பச்சை நிறக் கத்தரிக்காய், கர்நாடக மாநிலத்தின் உடுப்பியில் உள்ள மட்டி கிராமம் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் மட்டுமே வளர்க்கப்படுகிறது. இந்தக் கத்தரிக்காய் மற்ற இடங்களைப் போன்று ஊதா நிறத்தில் இல்லாமல், பச்சை நிறத்திலிருப்பது அதன் தனித்தன்மையை காட்டுகிறது. நிறத்தில் மட்டுமின்றி சுவையிலும் தனித்தன்மை கொண்டதாக இருக்கும் இந்த பச்சை நிற கத்தரிக்காய்.
மற்ற இடங்களில் வளர்க்கப்படும் ஊதா கத்தரிக்காயைப் போலில்லாமல், ‘மட்டு குல்லா’ எனப்ப்படும் இக்கத்தரிக்காய் பச்சை நிறத்தில் உள்ளது. 'குல்லா' என்ற சொல் குறிப்பிடுவது போல, இது கோள வடிவத்தில் உள்ளது.
கர்நாடக மாநிலத்தில், உதயவர் நதிக்கும் சுவர்ணா நதிக்கும் இடைப்பட்ட 500 ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவில் இந்த பச்சை நிறக் கத்தரிக்காய் பயிரிடப்பட்டிருக்கிறது. உடுப்பி அருகிலுள்ள மட்டு கிராமத்தினைத் தவிர, அருகிலுள்ள பங்களா, கொப்ளா, கைபுஞ்சால் கிராமங்களிலும் இக்கத்தரிக்காய் விளைவிக்கப்படுகிறது. இது பருவகால காய்கறியாகும். செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் பருவமழைக்குப் பிறகு வளர்க்கப்படுகிறது. குறைந்த ஈரப்பதத்தைக் கொண்டுள்ள இக்கத்தரிக்காய் தனித்துவமான சுவையுடையது.
மட்டு குல்லா உடுப்பி சமையலில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காய்கறியாக உள்ளது. குறிப்பாக, உடுப்பி சாம்பாரில் இக்காய் பயன்படுத்தப்படுகிறது. மட்டு குல்லாவின் அசாதாரண மற்றும் தனித்துவமான சுவை மற்றும் உற்பத்திக்காக பிரத்தியேக இருப்பிடத்திற்காக, மட்டு குல்லா எனப்படும் பச்சைக் கத்தரிக்காய்க்கு, 2011 ஆம் ஆண்டு, புவியியல் சார்ந்த குறியீடு வழங்கப்பட்டிருக்கிறது.
பூச்சித் தாக்குதல்கள் மற்றும் பி.டி.கத்தரிக்காயின் வருகை போன்ற பல்வேறு காரணங்களால் அண்மைய ஆண்டுகளில் மட்டு குல்லாவின் உற்பத்தி குறைந்து போயிருக்கிறது.