
நுணா மரம் என்றவுடன் அனைவருக்கும் ஞாபகத்துக்கு வருவது அந்தக் காய்களில் தேர் செய்து விளையாடுவது மற்றும் அதன் பழம் காரமாக இருப்பது, அதில் செய்யப்படும் வண்டிக்கான நுகத்தடி, ஏர் கலப்பை போன்ற விவசாயத்துக்கு பயன்படும் பொருட்களும் தான்.
நுணா மரத்தின் ஒவ்வொரு பாகமும் ஒவ்வொரு மூலிகை என்று சொல்லலாம். அந்த அளவுக்கு மருத்துவ குணங்களை தன்னகத்தே பொதிந்து வைத்துள்ளது. அதனைப் பற்றி இப்பதிவில் காண்போம்.
நுணாவின் சிறப்பு:
இந்த மரத்தின் சிறப்பு என்னவென்று பார்த்தால் நல்ல ஈரம் தாங்கும். ஈரத்திலிருந்து வெயிலில் எடுத்துப் போட்டாலும் விரிசல் விடாது. இந்தப் பண்பினால் தான் இதிலிருந்து ஏர்கலப்பை செய்து விவசாயத்துக்கு பயன்படுத்துகிறார்கள். இன்னொன்று நுகத்தடி, அதை கழுத்தில் சுமந்து வரும்போது மாடுகளுக்கு பாரம் தெரியாமல் இருக்கும்; அதிக கனமும் இருக்காது. அதே சமயத்தில் தோள்களுக்கும் வலுவூட்ட கூடியதாக, வலி ஏற்படுத்தாத வண்ணமும் மேலும் புண்கள் எதுவும் வராமலும் தடுத்து நிறுத்தக்கூடிய பண்பு நுணா மரத்திற்கு இருப்பதால் தான் அதிகம் பயன்படுத்துகிறார்கள்.
இலை:
நுணாமரத்தின் இலைக்கு உரமாக்கி, வெப்பத்தை அகற்றும் தன்மை, வீக்கத்தை முறிக்கும் தன்மையென பல பண்புகள் உள்ளன. இதன் இலைச்சாறு நாள்பட்ட புண்களையும் குணப்படுத்தும் பண்புடையது என்பதால், புண்களுக்கு மருந்தாகவும் உபயோகிக்கலாம்.
பழத்தையும், இலையையும் குடிநீர் செய்து குடித்தால் பெண்களின் சூதகம் சரிப்படும். மற்றும் இலையிலிருந்து மாந்தத்திற்கான பச்சிலைச் சாறு, கருக்கு குடிநீர், போர் மாந்தக் குடிநீர், மாந்தக் கணை எண்ணெய், சுர எண்ணெய் ஆகிய மருந்துகள் தயாரிக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.
பட்டையைக் கொண்டு நுணாப்பட்டை தைலம் தயாரிக்கலாம். நுணா தைலத்தை கொண்டு தலைக்கு குளித்து வர காய்ச்சல், குன்மம், புண், அரையாப்பு, கழலை முதலியவை குணமாகும் என்று கூறப்படுகிறது.
காய்:
நுணாக்காயை முறைப்படி புடம் போட்டு பொடித்து பல் துலக்கினால் பல் சொத்தை, பல்லரணை ஆகியவை நீங்கும். காயைப் பிழிந்து சாறெடுத்து தொண்டையில் பூச தொண்டை நோய் நீங்கும். நுணாக்காயை ஊறுகாய் செய்து தினந்தோறும் உண்டால் எல்லா வகையான நோய்களும் நீங்கி, உடல் வலுக்குமாம்.
கனி:
இதற்கு வீக்கமுருக்கி, ருது உண்டாக்கி என்ற பண்புகள் உள்ளன. பழத்தைப் பக்குவப்படுத்தி சீதக் கழிச்சல் மற்றும் ஆஸ்துமாவிற்கு கொடுக்கலாம்.
வேர்:
கழிச்சலை உண்டாக்கும் தன்மை வேருக்கு உண்டு. சோதனைச் சாலை பிராணிகளில், வேரில் இருந்து நீர் மூலமாக வடித்து எடுத்த சத்தை செலுத்தி ஆராய்ச்சி மேற்கொண்ட பொழுது அது இரத்த அழுத்தத்தைக் குறைப்பதாக விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
இவ்வாறு பல்வேறு விதமாக நுணா மரம் மருத்துவ பயன்களை வழங்கி வருகிறது.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)