

அடர்ந்த காடுகளுக்குள்ளும் ஆழ்கடலிலும், உருவில் பெரியது, சிறியது என பல்லாயிரக்கணக்கான உயிரினங்கள் வாழ்ந்து வருகின்றன. அவற்றின் உணவுப் பழக்க வழக்கங்களின் அடிப்படையில் அவை மூன்று வகையாகப் பிரிந்துள்ளன. ஒரு பிரிவில் உள்ளவை அசைவம் மட்டும் உண்பவையாகவும், இன்னொன்றில் உள்ளவை சைவம் மட்டும் உட்கொள்பவையாகவும், மூன்றாம் பிரிவில் உள்ளவை சைவம் மற்றும் அசைவம் என இரண்டு வகை உணவுகளையும் உட்கொண்டு வாழ்ந்து வருகின்றன. இலை. தழை, காய் கனி என சைவம் மட்டுமே உட்கொண்டு வாழ்ந்து வரும் 9 உயிரினங்கள் பற்றி இப்பதிவில் பார்க்கலாம்.
1. யானை: உலகம் முழுக்க, தரையில் வாழும் மிருகங்களில் அதிக எடை கொண்டது யானை. இது சுத்தமானதொரு தாவர உண்ணி. ஒரு நாளில் சுமார் 150 கிலோ அளவிலான இலை, புல், காய், பழம் போன்ற தாவர வகை உணவுகளை உட்கொள்ளக் கூடியது.
2. ஓட்டகச்சிவிங்கி: நீளமான கழுத்து உடைய ஓட்டகச் சிவிங்கி, அகாசியா (Acacia) போன்ற மிக உயரமான மரங்களின் இலைகளைக் கூட சுலபமாகப் பறித்து உட்கொள்ளும். இதன் தனித்துவமான நாக்கு, நீண்ட கால்கள் மற்றும் கழுத்து ஆகியவை, பிற மிருகங்கள் தொட முடியாத உயரத்தையும் எட்டி விட இதற்கு உதவி புரிகின்றன.
3. பாண்டா: பாண்டாக்களின் 99 சதவிகித உணவாக உள்ளது மூங்கில் இலைகள். ராட்சத பாண்டாக்கள், ஒரு நாளைக்குத் தேவையான சக்தியைப் பெற சுமார் 38 கிலோ அளவு மூங்கில் இலைகளை உட்கொள்கின்றன.
4. கோலா (Koala): கோலாக்கள் மிக விரும்பி உட்கொள்ளும் உணவு யூக்கலிப்டஸ் இலைகள். இவற்றின் உடலுக்குள் மிக மெதுவாக நடைபெறும் மெட்டபாலிஸ அளவுக்கு ஈடு கொடுக்க, ஊட்டச்சத்துக்கள் குறைந்த அளவில் உள்ள இந்த யூக்கலிப்டஸ் இலைகள் ஏற்றதாக உள்ளன.
5. குதிரை: குதிரைகள் புல், தானியங்கள் மற்றும் வைக்கோல்களை முக்கிய உணவாக உட்கொள்கின்றன. இவற்றின் இரைப்பை. குடல் அமைப்பானது அதிகளவு நார்ச்சத்து நிறைந்த உணவுகளை ஜீரணிப்பதற்கு ஏற்ற வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
6. மான்: மான்கள் புல், இலை, பழங்கள் போன்றவற்றை முக்கிய உணவாக எடுத்துக்கொள்கின்றன. இவை உணவுகளை தேர்ந்தெடுத்து உண்ணும் பழக்கமும், வேறுபட்ட எந்த சூழ்நிலையிலும் வாழ்வதற்கு தயாராயுள்ள மனப்பான்மையும் கொண்ட விலங்குகள்.
7. முயல்: புல், காய்கறிகள், கீரைகள் ஆகியவற்றை உட்கொண்டு வாழும் ஒரு சிறிய உடல் வகை விலங்கு முயல். ஊட்டச்சத்துக்கள் உடலுக்குள் உறிஞ்சப்படும் அளவை அதிகரிக்கச் செய்ய முயல் தனது மலத்தின் ஒரு பகுதியையும் உணவாக உட்கொள்ளும் பழக்கம் கொண்டுள்ளது.
8. மனாடீ (Manatee): கடல் பசு எனவும் அழைக்கப்படும் மனாடீ என்னும் நீர்வாழ் உயிரினமானது. கடல் புல் மற்றும் தெளிந்த நீரில் கிடைக்கும் இலை. தழை போன்றவற்றை உணவாக உண்ணக் கூடியது. நீர்நிலைகளின் சுற்றுச்சூழல் அமைப்பை சமநிலைப்படுத்துவதில் மனாடீகளின் பங்கும் உள்ளது.
9. நிலத்தில் வாழும் ஆமைகள் (Tortoise): இந்த வகை ஆமைகள் புல், பழங்கள், கற்றாழை போன்றவற்றை உணவாக உட்கொண்டு வாழ்கின்றன. இவை காடுகளில் நூறு ஆண்டுகளுக்கு அதிகமாகவும் வாழக்கூடியவை.