
உலகில் பல விசித்திரமான தோற்றமுடைய நாய்கள் உள்ளன. ஒவ்வொரு நாய் இனமும் தனித்துவமானது. ஒவ்வொன்றும் மற்றவற்றை விட வேறுபட்ட தோற்றத்தையும், குணாதிசயங்களையும் கொண்டிருக்கின்றன. தோற்றம் மற்றும் குணாதிசயங்களில் வித்தியாசப்படும் சில வகை நாய் இனங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம்.
1. சீன முகடு (Chinese crested): சீன முகடு நாய் அவற்றின் பஞ்சு போன்ற தலை, அதன் முடி இல்லாத உடல் மற்றும் நீண்ட முடியுடன் கூடிய கால்கள், காதுகள் மற்றும் வால்களால் தனித்து நிற்கின்றன. இதன் பெரும்பாலும் முடி இல்லாத உடலும், சில பகுதிகளில் மட்டும் காணப்படும் மென்மையான முடியும் இதன் தோற்றத்தை சிறப்பாக்குகிறது. விசுவாசமாக இருக்கும் இவை அன்பான, விளையாட்டுத்தனமான செல்லப் பிராணிகளாகும். இவற்றின் முடி உதிர்வதில்லை. எனவே, ஓவ்வாமை உள்ளவர்களுக்கு ஏற்றதாக இந்த சீன முகடு நாய்கள் உள்ளன.
2. பேசஞ்சி (Basenji): உலகின் பண்டைய நாய் இனங்களில் ஒன்றான பேசஞ்சி பெரும்பாலும் சப்தமிடாத நாய் என்று குறிப்பிடப்படுகின்றன. சிறிய குட்டை முடி கொண்ட நாய்கள், நிமிர்ந்த காதுகள், இறுக்கமாக சுருண்ட வால்கள் மற்றும் அழகான கழுத்துகள் கொண்டவை. இவற்றின் கண்கள் பொதுவாக பாதாம் வடிவத்தில் இருக்கும்.
3. புல்டாக் (Bulldog): தட்டையான முகங்கள், தசைப் பிடிப்புள்ள உடல்கள் மற்றும் சுருண்ட வால் போன்ற சிறப்பு அம்சங்களை இவை கொண்டுள்ளன. சில புல்டாக் இனங்கள் தங்கள் பருமனான உடல்வாகு, தட்டையான முகங்கள், சுருக்கமான தோல் மற்றும் சுருக்கமான மூக்கு போன்ற குணாதிசயங்களால் தனித்துத் தெரிகின்றன. இவை சில நாய்களுக்கு அசிங்கமான தோற்றத்தைக் கொடுக்கிறது.
4. கொமண்டோர் (Komondor): பயிற்சியளிக்க எளிதான, உலகில் மிகவும் அடையாளம் காணக்கூடிய நாய்களில் ஒன்றாகும் இது. இவற்றின் நீண்ட கூந்தல் வானிலை மற்றும் வேட்டையாடுபவர்களிடமிருந்து இவற்றைப் பாதுகாக்கிறது. இவற்றின் ரோமம் செம்மறி ஆடுகளின் கம்பளியைப் போலவே இருக்கும். 'மாப் டாக்' என்ற புனைப்பெயருடன் இருக்கும் இவை, மிகவும் நட்பானவை மற்றும் விசித்திரமான தோற்றம் கொண்டவை.
5. பாசெட் ஹவுண்ட்(Basset Hound): இந்த நாய்கள் நீளமான, தொங்கும் காதுகள், தொய்வான தோல் மற்றும் குட்டையான கால்கள் மற்றும் பெரிய உடலுடன் காணப்படும். இவை மிகவும் அன்பானவை மற்றும் விசுவாசமானவை. குட்டையான மூக்கு கொண்ட தட்டையான முகத்தோடு இருப்பதால் மற்ற நாய்களைப் போல இவற்றால் வேகமாக ஓட முடியாது.
6. பிரஸ்ஸல்ஸ் கிரிஃபோன்: இதன் பெரிய கண்கள் மற்றும் தாடிக்கு பெயர் பெற்றவை. வேடிக்கையான தோற்றமுடைய இவை விசுவாசமான மற்றும் பிரபலமான பொம்மை நாய் இனமாகும். இவை ஆங்கில பொம்மை ஸ்பானியலில் இருந்து உருவானவை. இதனால் தட்டையான முகத்தைக் கொண்டுள்ளன. இயற்கையாகவே முரட்டுத்தனமான, ஆளுமை பண்புகள் நிறைந்த நாய் இது.
7. ரஷ்ய போர்சோய் (Russian Borzoi): பெரிய உடலும் சிறிய தலையும் கொண்ட பாசமுள்ள நாய் இது. கிரேஹவுண்டைப் போலவே தோற்றம் அளிக்கும். ஆனால், அதிக பஞ்சு போன்றவை. இவை செல்லப் பிராணிகளாக இருப்பதற்கு முன்பு ஓநாய் வேட்டைக்காரர்களாக இருந்தன. ஆனால், இன்று இவை அணில் மற்றும் பிற சிறிய விலங்குகளை துரத்துவதில் திருப்தி அடைகின்றன.
8. ஷார்பீ (Shar-Pei): அதிக சுருக்கம் கொண்ட நாய் இனமாகும். தனித்துவமான முகவாய் கொண்டது. இவை நீர் யானையுடன் ஒப்பிடப்படுகின்றன. குட்டியாக இருக்கும்பொழுது அதிக சுருக்கமுடன் காணப்படும். வளர வளர அவை அவற்றின் தோலில் வளர்வது போல் தெரிகிறது. இவற்றின் நாக்கு நீல-கருப்பு நிறத்தில் காணப்படும்.
9. நியோபோலிடன் மாஸ்டிஃப் (Neopolitan Mastiff): அளவில் மிகப்பெரியதாக இவை காணப்படுவதால் இந்த நாய்கள் அச்சுறுத்தலாகத் தெரிகின்றன. இருப்பினும், மென்மையானவை. எதையும் தாக்குவதை விட குடும்பத்துடன் விளையாடவே விரும்புகின்றன. இவற்றின் சுருக்கங்கள் இவற்றுக்கு தொய்வான தோற்றத்தைக் கொடுக்கின்றன. அத்துடன் இவற்றின் முகவாய் மிகவும் தொய்வாகத் தெரிகிறது.
10. புல் டெரியர் (Bull Terrier): இவற்றின் முட்டை வடிவ தலை இதற்கு வித்தியாசமான தோற்றத்தைத் தருகிறது. இவற்றின் கோண முகங்கள் சிறிய கண்களைக் கொண்டுள்ளன. இவை பெரும்பாலான இனங்களை விட இவற்றை தனித்துவமாக காட்டுகிறது. புல் டெரியர்கள் மிகவும் பாசமுள்ள, சுதந்திரமான, விளையாட்டுத்தனமானவை.
11. பெட்லிங்டன் டெரியர் (Bedlington Terrier): இவை சாதாரண பூடில் நாய்களை ஓரளவு ஒத்திருக்கின்றன. பெட்லிங்டன் டெரியர் ஆட்டுக்குட்டி போன்ற தோற்றத்தைக் கொண்டுள்ளது. இவற்றின் முடி லேசானதாகவும், பஞ்சு போன்றதாகவும் இருக்கும். 11 முதல் 16 ஆண்டுகள் வரை ஆயுட்காலம் கொண்ட இவை மிகவும் விளையாட்டுத்தனமானவை.