

செவிக்கு இனிய கீதம் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். மழலைச் சொற்கள் என்றால் அனைவருக்கும் பிடிக்கும். ஆனால், கடும் ஓசை என்றால் அனைவரும் முகத்தைச் சுளிப்பர். இதுவே இன்னும் அதிகமானால் மக்கள் பயப்படுவர்.
உலகிலேயே மிக அதிகமான ஓசை (Sound) எங்கு ஏற்பட்டது?எப்போது?
1883ம் ஆண்டு இந்தோனேஷியாவில் உள்ள க்ராகடா (Krakatau) தீவில் இருந்த எரிமலை வெடித்தது. அப்போது எழுந்த ஓசை தான் உலகிலேயே மிக அதிகமாக எழுப்பப்பட்ட ஒலி என்று வரலாறு கூறுகிறது. 310 டெசிபல் என்ற உச்சபட்ச அளவை இது தொட்டது!
1900 மைல்களுக்கு அப்பால் உள்ள மக்களும் கூட இதைக் கேட்டனர். உலகெங்கும் இருந்த பாரோமீட்டர்கள் இதனால் எழுந்த அழுத்தத்தைப் பதிவு செய்தன. நூறு மைல்களுக்கு அப்பால் இந்த வெடிப்பு 170 டெசிபல் என்ற ஒலி அளவை எட்டியது. நாற்பது மைல்களுக்கு அப்பால் வாழ்ந்த மனிதர்களின் காது ஜவ்வு இந்த சத்தத்தால் கிழிந்து விட்டது.
ஒரு மனிதன் எத்தனை டெசிபல் அளவைப் பொறுக்க முடியும்?
மிக மிக உயர்ந்த அளவாக ஒரு மனிதன் 140 டெசிபல் அளவை மட்டுமே பொறுக்க முடியும். 85 டெசிபல் அளவு கொண்ட ஒலியை சில மணி நேரமே ஒருவரால் பொறுக்க முடியும். பின்னர் செவியின் கேட்கும் திறனுக்குச் சேதம் தான் ஏற்படும்.
100 டெசிபலை 14 நிமிடங்கள் கேட்கலாம். 110 டெசிபல் அளவு என்றால் இரண்டு நிமிடங்களுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியாது. இது நேஷனல் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஹெல்த் தரும் புள்ளி விவரம்.
வீட்டில் நாம் உபயோகப்படுத்தும் வாக்குவம் க்ளீனர் எழுப்பும் ஓசை அளவு 75 டெசிபல். சங்கிலி ரம்பம் ஒன்று எழுப்பும் ஓசை 110 டெசிபல். ஜெட் எஞ்ஜின் எழுப்பும் ஓசை 140 டெசிபல். 310 டெசிபல் அளவை எட்டிய எரிமலையின் ஓசையை ஒலி என்றே சொல்ல முடியாது என்பது விஞ்ஞானிகளின் கருத்து.
194 டெசிபல் அளவை எட்டிய உடனேயே இது அதிர்ச்சி அலைகளாக மாறி விடும். சைபீரீயாவில் துங்குஸ்காவில் 1908ம் ஆண்டு எரிக்கல் ஒன்று எழுப்பிய ஓசையே இன்னொரு அதிக ஒசையாகும். இந்த எரிக்கல் எழுப்பிய ஓசையால் நூற்றுக்கணக்கான சதுரமைல் பரப்பளவில் இருந்த மரங்கள் எல்லாம் வீழ்ந்து படுத்து விட்டன. அழுத்த அலைகள் உலகெங்கும் பரவியது. இதை க்ராகடா எரிமலை வெடிப்பு ஓசையுடன் ஒப்பிடலாம்.
இந்த நவீன யுகத்தில் ஒலியை அளக்க துல்லியமான சாதனங்கள் உள்ளன. இதன்படி பார்த்தால் 2022ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஹுங்கா துங்காவில் ஏற்பட்ட வெடிப்பு எழுப்பிய ஓசையை ஆயிரக்கணக்கான மைல் தள்ளி இருந்த அலாஸ்காவிலும், மத்திய ஐரோப்பாவிலும் மக்கள் கேட்டனர்.
விஞ்ஞானிகள் செயற்கையாக எவ்வளவு அதிக பட்சமாக டெசிபலை உருவாக்க முடியும் என்ற ஆய்வை மேற்கொண்டனர். எக்ஸ் ரே லேஸர்களை உபயோகித்து அவர்களால் 270 டெசிபல் அளவை மட்டுமே எட்ட முடிந்தது. இது அப்பலோ விண்வெளிவீரர்களை ஏற்றிச் சென்ற சாடர்ன் V ராக்கெட் எழுப்பிய ஓசையான 203 டெசிபல் என்பதை விட அதிகம் தான்!
ஒலியைப் பற்றி நாம் அறிய வேண்டிய முக்கிய விஷயம் இது தான்:
0 டெசிபல் - மிக மிருதுவான, காதுக்கு ரம்யமான ஓசை
30 டெசிபல் - நூலகத்தில் இருக்கும் அமைதி
60 டெசிபல் - சாதாரணமாக நாம் பேசும் போது எழுப்புவது
100 டெசிபல் - புல் வெட்டும் சாதனமும் ஹேர்ட்ரையரும் எழுப்பும் ஓசை அளவு இது.
120 டெசிபல் - ராக் மியூஸிக்
180 டெசிபல் - ஜெட் எஞ்ஜின் பறக்க ஆரம்பிக்கும் தருணத்தில் எழுப்பும் ஓசை (இதைக் கேட்பது அபாயம் தான்).
இனிமையான கீதங்களைக் கேட்டு மிருதுவாகப் பேசி, சந்தடி மிகுந்த நகர் போக்குவரத்தை தவிர்த்து வாழ்பவர்கள் பாக்கியசாலிகள் தான்!