

சமீபத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் கால்களில் வீக்கம் இருப்பதை பரிசோதித்தில் அவருக்கு நாள்பட்ட இரத்தக்குழாய் தேக்க பாதிப்பு (CVI) இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நாள்பட்ட இரத்தக் குழாய் தேக்க பாதிப்பு என்பது உலக அளவில் கோடிக்கணக்கான மக்களை பாதிக்கும் ஒரு பொதுவான பாதிப்பாகும். இது தொந்தரவாக மாறும் வரை பெரும்பாலும் அடையாளம் காணப்படாமலேயே இருக்கும்.
இந்த பாதிப்பு ஏற்படுவதற்கான காரணங்களையும் அதன் அறிகுறிகளையும் புரிந்து கொள்வது விரைவான சிகிச்சை முறைகளுக்கும் மேம்பட வகையிலான முன்னேற்றத்துக்கும் வழி வகுக்கும்.
நாள்பட்ட இரத்தக் குழாய் தேக்கம் (Chronic Venous Insufficiency) என்றால் என்ன?
நாள்பட்ட இரத்தக் குழாய் தேக்கம் என்பது கால்களில் உள்ள நரம்புகள், இதயத்திற்கு இரத்தத்தை திறம்பட அனுப்ப முடியாமல் ஏற்படும் ஒரு பாதிப்பாகும். நரம்புகளுக்குள் இருக்கும் சிறிய வழி கதவுகளான வால்வுகள் பலவீனமாக இருந்தாலோ அல்லது சேதமடைந்தாலோ இது நிகழ்கிறது. இதன் விளைவாக கால்களில் இரத்தம் தேங்கும். இதற்கு உரிய சிகிச்சைகள் அளிக்கப்படாவிட்டால் பல்வேறு சிக்கல்களை ஏற்படுத்தும்.
ஆரோக்கியமான நரம்புகள் எவ்வாறு செயல்படுகின்றன?
சாதாரண சூழல்களில் நரம்புகள் உடலிலிருந்து இதயத்துக்கு இரத்தத்தைக் கொண்டு செல்கின்றன. குறிப்பாக, கால் நரம்புகள் ஈர்ப்பு விசைக்கு எதிராக செயல்படுகின்றன. ரத்தம் பின்னோக்கிப் பாய்வதைத் தடுக்க அவை தசை சுருக்கங்களையும், வால்வுகளையும் நம்பியுள்ளன. இந்த வால்வுகள் பாதிக்கப்படும்போது இரத்தம் தேங்கி நரம்புகளில் அழுத்தம் ஏற்படுகிறது.
நாள்பட்ட இரத்தக் குழாய் தேக்க பாதிப்பின் அறிகுறிகள்:
கால்கள் அல்லது கணுக்கால்களில் வீக்கம், கால் பகுதியில் இறுக்கமான உணர்வு, நிற்கும் போது கால் வலிப்பது அல்லது தசைப் பிடிப்பு வலி, கூச்ச உணர்வு, நரம்பு வீக்கம் வலி ஆகியவை தெரியும். இந்த பாதிப்பு அதிகரிக்கும் போது பழுப்பு நிறத்தில் சரும மாற்றம், சருமம் தடித்தல் போன்றவை ஏற்படும் கால் பிடிப்பு மற்றும் தசைப்பிடிப்பு ஏற்படலாம். இது சில நேரங்களில் 'சார்லி ஹார்ஸ்' என்று விவரிக்கப்படுகிறது .
கால் நரம்புகளுக்குள் உள்ள வால்வுகள் பலவீனமடைவதால் ரத்தக்குழாய் தேக்க பாதிப்பு ஏற்படுகிறது. இது தவிர உடல்பருமன், பரம்பரை காரணிகள், தொடர்ந்து அமர்ந்த நிலையில் இருப்பது போன்றவையும் காரணிகளாகும். இரத்தக் குழாய் தேக்க பாதிப்புக்கு வயது முதிர்வு ஒரு காரணமாக இருக்கலாம். காயம் அல்லது ஆழமான நரம்பு இரத்த உறைவு போன்றவை காரணமாகவும் இந்த பாதிப்பு ஏற்படலாம். உடற்பயற்சி இல்லாமை, புகைபிடித்தல் போன்ற வாழ்க்கை முறைகளும் இந்த பாதிப்பு ஏற்பட காரணமாக அமையலாம். இதன் தாக்கத்தைக் குறைக்க வாழ்க்கை முறை மாற்றங்கள், மருந்துகள், குறைந்தபட்ச ஊடுருவல் அறுவை சிகிச்சை முறைகள் போன்ற பயனுள்ள சிகிச்சை முறைகள் உள்ளன. ரத்தக்குழாய் சிகிச்சை நிபுணரை அணுகி பரிசோதித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Chronic Venous Insufficiency ஆரம்ப அறிகுறிகள் சில நேரங்களில் கவனிக்கப்படாமல் போகக்கூடும். இதனால் வீக்கம் ஏற்பட்டு கால்களின் சருமத்தில் மாற்றங்கள் ஏற்பட்டால், மருத்துவரை அணுக வேண்டும். ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் பாதிப்பைத் தவிர்க்க முடியும்.
(முக்கிய குறிப்பு: இந்தத் தகவல்கள் பொதுவான விழிப்புணர்வுக்காக மட்டுமே. மருத்துவ ஆலோசனைக்கு சரியான தகுந்த மருத்துவரை அணுகவும்)