

முந்திரிக் கொட்டை என்பது வடகிழக்கு பிரேசிலைப் பிறப்பிடமாகக் கொண்ட முந்திரி மரத்தில் வளரும் ஒரு விதை. இந்த மரம் பிற்காலத்தில் மற்ற வெப்பமண்டலப் பகுதிகளுக்கும் அறிமுகப்படுத்தப்பட்டது. இன்று, இந்தியா உலகின் மிகப்பெரிய முந்திரி உற்பத்தியாளராக மாறி உள்ளது. முந்திரி கிரீமி அமைப்பு, வெண்ணெய் சுவை மற்றும் பல ஆரோக்கிய நன்மைகளுக்காக அறியப்படுகிறது.
முந்திரியில் நார்ச்சத்து, வைட்டமின்கள், இரும்பு, காப்பர் உள்ளிட்ட சத்துகள் உள்ளன. முக்கியமாக, இந்த விதைகளில் ஒமேகா3 கொழுப்பு அமிலங்கள் மற்றும் ஒலியிக் அமிலம் உள்ளன. இவை இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது என்று மருத்துவர்களும் பரிந்துரைக்கின்றனர். இந்த விதைகளில் நார்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பாஸ்பரஸ், செலினியம், கால்சியம் மற்றும் ஆக்ஸிஜனேற்றிகள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன. இவை அனைத்தும் மனித உடலுக்கு மிகவும் நன்மை பயக்கும்.
முந்திரிப் பருப்பு சுவையானது மட்டுமல்ல, உடல் ஆரோக்கியத்தையும் அள்ளித் தர வல்லது. இந்தப் பருப்பில் நார்ச்சத்து, வைட்டமின்கள், கரிமச் சத்துக்கள் உள்ளதோடு, நோய்கள் மற்றும் புற்றுநோயை வர விடாமல் தடுக்க உதவும். ‘பைட்டோ கெமிக்கல்ஸ்’ எனப்படும் தாவர வேதிப்பொருட்கள் அதிக அளவில் இதில் உள்ளன. முந்திரிப் பருப்பில் இதயத்திற்கு நன்மை தரக்கூடிய ஒற்றை நிறைவு பெறாத கொழுப்பு அமிலங்களான (mono unsaturated fatty acids) ஒலியிக் மற்றும் பால்மிட்டோ லெயிக் அமிலங்கள் அதிக அளவில் உள்ளன. இத்தகைய கொழுப்பு அமிலங்கள் உடலுக்குத் தீமை விளைவிக்கக்கூடிய கொலஸ்ட்ராலை குறைத்து, நன்மை தரக்கூடிய கொலஸ்ட்ராலை அதிகரிக்கச் செய்கிறது. அதோடு கரோனரி இதய நோயை தடுக்க உதவும் என்று சமீபத்திய ஆய்வில் கண்டறிந்துள்ளனர்.
இதில் உள்ள மெக்னீசியம் எலும்புகள் வலுவடைய உதவுகிறது. மெக்னீசியம் குறைபாட்டினால் உயர் ரத்த அழுத்தம், தசை இறுக்கம், ஒற்றை தலைவலி மற்றும் சோர்வு ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. முந்திரிப் பருப்பில் உள்ள துத்தநாகம் பல்வேறு நொதிகளுக்கு இணை காரணியாக உள்ளதோடு, வளர்ச்சி, உயிரணு உற்பத்தி, செரிமானம் மற்றும் நியுக்ளிக் அமிலம் சிதைவடைதலை ஒழுங்குபடுத்துகிறது.
இந்தியாவின் முந்திரிப் பருப்பு ஏற்றுமதியில் இரண்டாம் இடத்தில் இருப்பது தமிழ் நாடுதான். முந்திரி உற்பத்தியில் 4வது இடத்தில் உள்ளது. பண்ரூட்டி தமிழ் நாட்டின் முந்திரிப் பருப்பு தலைநகரம் என்று அழைக்கப்படுகிறது. இங்கு 10 கோடி முதலீட்டில் தமிழ் நாடு முந்திரி போர்டு உள்ளது. கூடலூர், அரியலூர், விழுப்புரம், புதுக்கோட்டை மற்றும் தேனி மாவட்டத்திலும் முந்திரிப் பருப்பு பயிரிடப்படுகிறது. தமிழ்நாட்டில் விளையும் முந்திரிப் பருப்பில் 70 சதவீதம் லேக்கல் மார்க்கெட்டில் விற்பனையாகிறது. 30 சதவிகிதம் ஏற்றுமதியாகிறது.
இந்திய முந்திரி ஏற்றுமதி சந்தையில் பண்ருட்டி முக்கிய இடம் வகிக்கிறது. மேலும், அதன் தனித்துவமான சுவை காரணமாக சர்வதேச அளவில் அறியப்படுகிறது. பண்ருட்டி முந்திரிக்கு தனி மவுசு உள்ளது. காரணம், அதன் வடிவம் மற்றும் சுவை மற்றும் நறுமணம். இது 2025ம் ஆண்டு புவிசார் குறியீடு பெற்றது.
தமிழ் நாட்டில் ஆண்டிற்கு சுமார் 5.5 லட்சம் மெட்ரிக் டன் முந்திரிப் பருப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 50 சதவிகிதம் (2,50,000 டன்கள்) மட்டும் பண்ருட்டியில் விளைகிறது. தமிழ்நாட்டின் முந்திரி வருமானம் 6000 கோடிகள். அதில் பண்ருட்டி 3500 கோடிகளைத் தருகிறது. பண்ருட்டியில் 1500 குடிசை தொழிற்சாலைகளில் முந்திரி உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் 25 பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.
தமிழ் நாட்டில் மொத்த முந்திரி விவசாயம் 1,42,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் நடைபெறுகிறது. இதிலிருந்தே வருடத்திற்கு 43,460 மெட்ரிக் டன்கள் உற்பத்தியாகிறது. அதில் பண்ருட்டியில் மட்டும் 35,000 ஹெக்டேர் நிலப்பரப்பில் முந்திரி விவசாயம் நடைபெறுகிறது. பண்ருட்டி முந்திரியின் சிறப்புக்குக் காரணம் அங்குள்ள வளமான செம்மண். பண்ருட்டியின் செம்மண்ணில் மட்டும் 30 ஆயிரம் மெட்ரிக் டன் முந்திரி உற்பத்தியாகிறது. இந்த மண்ணின் தன்மை, பதப்படுத்தும் முறை, தரம் மற்றும் தொழிலாளர்களின் வேலை நேர்த்தி ஆகியவை மற்ற இடங்களில் இல்லாத சிறப்பை பண்ருட்டி முந்திரிக்கு பெற்றுத் தருகிறது.