
சில நேரங்களில் மதியம் வைத்த குழம்பு, சாம்பார், ரசம், காய்கறி என்று எதாவது மீந்து போய் விடும். அதைப் போல் ராத்திரி பண்ணின சாப்பாடும் மீந்து போய் விடும். அப்படி மீந்து போய் விட்டால், no tension. அதை வைத்து புதுசா வேற item பண்ணிடலாம். வாங்க பார்க்கலாம் எப்படி என்று...
1. மதியம் பண்ணி இருந்த சாம்பாரோ ரசமோ காயோ எது மீதி இருந்தாலும் அதை எல்லாம் வைத்து ராத்திரிக்கு சூப்பரா ஒரு கிச்சடி பண்ணலாம்.
குக்கரை அடுப்பில் வைத்து சிறிது எண்ணெய் அல்லது நெய்யை ஊற்றி கடுகு சீரகத்தை தாளித்து கொள்ள வேண்டும் பிறகு இஞ்சி பூண்டு விழுதை போட வேண்டும். அதை வதக்கிய பிறகு பொடி பொடியாக நறுக்கிய தக்காளி வெங்காயம் மற்றும் சிறிது கருவேப்பிலையை போடவும். மஞ்சள் தூள், பெருங்காயம் மற்றும் உப்பை சேர்க்கவும்.
இவை எல்லாவற்றையும் நன்றாக கிளறி சிறிது வதங்கியவுடன் மீந்து போன சாதம், சாம்பார், காய் எல்லாவற்றையும் போட்டு, சிறிது கரம் மசாலாத் தூளையும் தூவி தேவையான தண்ணீரை ஊற்றி குக்கரை மூடி விடவும். மூன்று விசில் வந்தவுடன் அடுப்பை அணைக்கவும். ஆறிய பிறகு கிச்சடியை நன்றாக கலந்து விடவும். மேலே கொத்தமல்லி இலையைத் தூவி சுடச்சுட பரிமாறவும். தொட்டுக்கொள்ள ஊறுகாய் போதுமானது.
2. இரவில் சப்பாத்தி மீந்து விட்டால் அதை வைத்து காலையில் சூப்பரான breakfast செய்யலாம்.
முதலில் ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி கடுகை தாளித்து கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயத்தை போடவும். இத்துடன் மஞ்சள் தூள் மற்றும் 1 ஸ்பூன் மிளகாய்த் தூளையும் உப்பையும் போட்டு நன்றாக வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு சப்பாத்தியை சிறு சிறு துண்டுகளாக வெட்டி அதில் சேர்த்து நன்றாக கலக்கவும். இரண்டு அல்லது மூன்று நிமிடங்கள் கழித்து அடுப்பை அணைத்து விடவும். இத்துடன் tomato sauce விட்டு சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.
3. இரவிலோ அல்லது காலையிலோ செய்த இட்லி மீந்து விட்டால் அதில் இரண்டு சுவையான அயிட்டங்களை செய்யலாம்.
1. வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்த பிறகு அதில் வெங்காயத்தையும் குடைமிளகாயையும் cube shape-ல் நறுக்கி போடவும். மஞ்சள் தூள், மிளகாய்த்தூள், தேவையான உப்பு ஆகியவற்றை போடவும்.
நன்றாக வதங்கிய பிறகு இட்லியையும் cube shape-ல் கட் செய்து அத்துடன் கலக்கவும். இரண்டு நிமிடத்திற்கு பிறகு சிறு துளி tomato sauce and chilli sauce-ஐ விட்டு கிளறிய பிறகு அடுப்பை அணைக்கவும். சுவையான சில்லி இட்லி ரெடி.
2. வாணலியில் நான்கைந்து ஸ்பூன் நல்லெண்ணெயை ஊற்றி அதில் கடுகு, உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, கறிவேப்பிலை போட்டு தாளித்து கொள்ளவும். பிறகு பொடியாக நறுக்கிய பச்சைமிளகாய், இஞ்சி மற்றும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். தேவையான உப்பையும் போட்டு வதக்கவும். வெங்காயம் வதங்கிய பிறகு இரண்டு அல்லது மூன்று ஸ்பூன் இட்லி மிளகாய் பொடியை தூவவும். பிறகு மீந்துள்ள இட்லியை நன்றாக உதிர்த்து இத்துடன் கலந்து கிளறவும். இரண்டு நிமிடம் கழித்து அடுப்பை அணைக்கவும். இட்லி உப்புமா ரெடி.