

ஆரோக்கிய கட்லெட் செய்ய தேவையான சத்தான பொருட்கள்
1. பொன்னாங்கன்னி கீரை கட்லட்
தேவை:
பொன்னாங்கன்னி கீரை - 1 கட்டு
பெரிய வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
கடலை மாவு - 1 டீஸ்பூன்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவைக்கேற்ப
செய்முறை:
நன்கு சுத்தம் செய்த பொன்னாங்கன்னிக் கீரையை பொடியாக நறுக்கிக்கொள்ள வேண்டும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கீரையை வதக்கிக்கொள்ள வேண்டும். பெரிய வெங்காயம், பச்சை மிளகாய், கடலை மாவு, இஞ்சி பூண்டு விழுது, உப்பு தேவையான அளவு எடுத்து அவற்றை கடாயில் எண்ணெய் விட்டு வதக்க வேண்டும்.
பின்பு கீரையுடன் சேர்த்து சிறிதளவு தண்ணீர் சேர்த்து கெட்டியான பதத்துக்கு பிசைந்து வட்ட வடிவத்தில் தட்டி, பிரட் தூளில் உருட்டி தோசைக்கல்லில் வேகவைத்து எடுக்க, சுவையான, சத்தான பொன்னாங்கன்னிக் கீரை கட்லட் ரெடி.
2. சாத கட்லெட்
தேவை:
சாதம் - 1 கப்,
நிலக்கடலை (வறுத்துப் பொடித்தது) - அரை கப்
இஞ்சி பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
மல்லித்தழை - சிறிதளவு
மஞ்சள்தூள் - ஒரு சிட்டிகை
சர்க்கரை - 1 டீஸ்பூன்
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
நிலக்கடலை பொடி தவிர மேலே கூறிய பொருட்கள் அனைத்தையும் ஒரு பாத்திரத்தில் போட்டு நன்றாக பிசைந்து கொள்ளவும். பிறகு, இதை சிறிய சதுரங்களாக தட்டி, நிலக்கடலை பொடியில் புரட்டி எடுத்து, எண்ணெயில் மிதமான தீயில் பொரித்தெடுக்கவும். சுவையான சாத கட்லெட் ரெடி.
3. பலாக்கொட்டை கட்லெட்
தேவை:
பலாக்கொட்டை – 12
பெரிய வெங்காயம் – ஒன்று
பச்சை மிளகாய் – 2
இஞ்சி துருவல் – அரை ஸ்பூன்
ரஸ்க் தூள் – அரை கப்
எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
பலாக்கொட்டைகளை வேகவைத்து, தோல் நீக்கி மசிக்கவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடி பொடியாக நறுக்கவும். மசித்த பலாக்கொட்டைகள், வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சித் துருவல், உப்பு எல்லாவற்றையும் கலந்து, பிசைந்து வடை போல் தட்டி, ரஸ்க் தூளில் புரட்டி, தோசைக் கல்லில் போட்டு, எண்ணெய் விட்டு, இருபுறமும் வெந்ததும் எடுத்தால், புதுவகை பலாக்கொட்டை கட்லெட் தயார்.
குழந்தைகள் விரும்பும் ஆரோக்கிய கட்லெட் செய்முறை விளக்கங்கள்
4. நவதானிய கட்லெட்
தேவை:
ஊறவைத்து முளைவிட்ட நவதானியக் கலவை – ஒரு கப்
வேகவைத்த வேர்க்கடலை – 50 கிராம்
வேகவைத்து, மசித்த உருளைக்கிழங்கு – ஒரு கப்
பச்சை மிளகாய் – 2
பெரிய வெங்காயம் – ஒன்று
இஞ்சி – பூண்டு விழுது – ஒரு டீஸ்பூன்
மிளகாய்த்தூள், மல்லித்தூள் (தனியாத்தூள்) – ஒரு டீஸ்பூன்
சோள மாவு – ஒரு டீஸ்பூன்
பிரெட் கிரம்ஸ் – கால் கப் பொடியாக நறுக்கிய புதினா, கொத்தமல்லித்தழை – சிறிதளவு
சோம்பு – கால் டீஸ்பூன் எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை:
கடாயில் தேவையான அளவு எண்ணெய் விட்டு அதில் சோம்பு தாளித்து, பொடியாக நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். அதனுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கி, நவதானியக் கலவையைச் சேர்த்து பாதி வேகும் வரை நன்கு வதக்கவும். அதில் மிளகாய்த்தூள், மல்லித்தூள், உப்பு சேர்த்து அதனுடன் மசித்த உருளைக்கிழங்கு மற்றும் வேர்க்கடலை சேர்த்து வதக்கி, கொத்தமல்லித்தழை, புதினா தூவி இறக்கவும்.
இந்தக் கலவை ஆறியதும் வட்ட வடிவில் கட்லெட்டுகளாகச் செய்யவும். இவற்றை சோள மாவு கரைசலில் தோய்த்து எடுத்து, பிரெட் கிரம்ஸில் புரட்டி, தவாவில் கொஞ்சம் எண்ணெய்விட்டு, கட்லெட்டுகளை வைத்து இருபுறமும் சுட்டு எடுக்கவும். சுவையான சத்தான நவதானிய கட்லெட் தயார்.
5. கடலை கட்லெட்
தேவை:
நிலக்கடலை - அரை கப்
உருளைக்கிழங்கு - 1
பிரெட் - 3 ஸ்லைஸ்கள்
ரஸ்க் (அ) பிஸ்கட் தூள் - ஒரு கப்,
பச்சை மிளகாய் - 4 துண்டு
இஞ்சி - ஒரு துண்டு
மல்லித்தழை - ஒரு கைப்பிடி
எண்ணெய் - தேவையான அளவு
உப்பு - சுவைக்கேற்ப.
செய்முறை:
உருளைக்கிழங்கை வேகவைத்து, தோலை நீக்கிவிட்டு, நன்றாகப் பிசைந்து கொள்ளவும். பிரெட் ஸ்லைஸை தண்ணீரில் ஒரு நிமிடம் நனைத்து.. பிறகு, தண்ணீரை ஒட்ட பிழியவும். மிக்ஸியில் இஞ்சி, மல்லித்தழை, பச்சை மிளகாய் மூன்றையும் போட்டு, நீர் விடாமல் கரகரவென்று அரைத்துக் கொள்ளவும்.
நிலக்கடலையை வறுத்துப் பொடிக்கவும். பிறகு, எல்லாவற்றையும் சேர்த்து பிசைந்து, விருப்பமான வடிவத்தில் சிறிய அளவில் செய்து, ரஸ்க் அல்லது பிஸ்கட் தூளில் பிரட்டி எண்ணெயில் நிதானமாக பொரித்து எடுக்கவும். சூப்பர் சுவையில் நிலக்கடலை கட்லெட் ரெடி. இதற்கு தொட்டுக்கொள்ள தக்காளி சாஸ் ஏற்றது.
இந்த ரெசிபிகளைப் பின்பற்றுவதன் மூலம், மைதா அல்லது தேவையற்ற கொழுப்புகள் இல்லாத, முழுக்க முழுக்க சத்துக்கள் நிறைந்த மாலை நேர பலகாரங்களை உங்கள் குடும்பத்தினருக்கு நீங்களே ஆரோக்கியமாகச் சமைத்து வழங்கி மகிழலாம்.