

மாலை நேரத்தில் சூடாக ஒரு சமோசா கிடைத்தால் போதும். தேநீருடன் சேர்ந்து அந்த நேரமே இன்னும் சுவையாகிவிடும்! வழக்கமான உருளைக்கிழங்கு சமோசாவைத் தாண்டி, விதவிதமான காய்கறிகள், சீஸ், இனிப்புச் சுவை என பல வகைகளில் சமோசாவைத் தயாரிக்கலாம். வீட்டிலேயே எளிதாகச் செய்து அசத்த, இதோ 5 வித்தியாசமான சமோசா ரெசிபிகள்! ஒவ்வொரு கடிக்கும் ஒரு புதுச்சுவை!
1. கார்ன்–சீஸ் சமோசா
தேவையான பொருட்கள்:
சமோசா ஷீட் – 10
வேகவைத்த மக்காச்சோளம் – 1 கப்
துருவிய சீஸ் – ½ கப்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
மிளகுத்தூள் – ¼ டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
மைதா – 2 டீஸ்பூன்
எண்ணெய் – பொரிக்க
செய்முறை: கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சை மிளகாயை வதக்கவும். மக்காச்சோளம், மிளகாய்த்தூள், மிளகுத்தூள், உப்பு சேர்த்து இரண்டு நிமிடங்கள் கிளறவும். அடுப்பை அணைத்து சீஸ் சேர்த்துக் கலக்கவும்.
மைதாவை சிறிது தண்ணீரில் கலந்து பசை தயாரிக்கவும். சமோசா ஷீட்டில் பூரணத்தை வைத்து முக்கோணமாக மடித்து மைதா பசையால் ஒட்டவும்.
சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகவும் மொறுமொறுப்பாகவும் பொரித்தெடுக்கவும். சூடான தேநீருடன் பரிமாறினால் சுவை அட்டகாசம்!
2. பனீர் மசாலா சமோசா
தேவையான பொருட்கள்;
சமோசா ஷீட் – 10
பனீர் – 1 கப்
வெங்காயம் – 1
பச்சைமிளகாய் – 1
இஞ்சி–பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
கரம் மசாலா – ½ டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
கொத்தமல்லித்தழை, உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சி–பூண்டு விழுதை வதக்கவும்.
உதிர்த்த பனீர், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
ஆறிய பூரணத்தை சமோசா ஷீட்டில் வைத்து முக்கோணமாக மடித்து ஒட்டவும். சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.
3. காளான் பெப்பர் சமோசா
தேவையான பொருட்கள்:
சமோசா ஷீட் – 10
நறுக்கிய காளான் – 1 கப்
வெங்காயம் – 1
குடைமிளகாய் – ½ கப்
மிளகுத்தூள் – 1 டீஸ்பூன்
மிளகாய்த்தூள் – ½ டீஸ்பூன்
இஞ்சி–பூண்டு விழுது – 1 டீஸ்பூன்
உப்பு, கொத்தமல்லித்தழை, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
எண்ணெயில் வெங்காயம், இஞ்சி–பூண்டு விழுதை வதக்கி காளான், குடைமிளகாய் சேர்க்கவும்.
தண்ணீர் வற்றும் வரை நன்றாக வதக்கி மிளகுத்தூள், மிளகாய்த்தூள், உப்பு சேர்க்கவும். கொத்தமல்லித்தழை தூவி இறக்கவும்.
பூரணம் ஆறியதும் சமோசா ஷீட்டில் வைத்து முக்கோணமாக மடிக்கவும். சூடான எண்ணெயில் மொறுமொறுப்பாகப் பொரித்தெடுக்கவும்.
4. நூடுல்ஸ் சமோசா
தேவையான பொருட்கள்:
சமோசா ஷீட் – 10
வேகவைத்த நூடுல்ஸ் – 1½ கப்
முட்டைக்கோஸ் – ½ கப்
கேரட் – ¼ கப்
குடைமிளகாய் – ¼ கப்
சோயா சாஸ் – 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
கடாயில் எண்ணெய் விட்டு காய்கறிகளை அதிக நேரம் வேகவிடாமல் வதக்கவும். நூடுல்ஸ், சோயா சாஸ், மிளகுத்தூள், உப்பு சேர்த்து அதிக தீயில் கிளறி இறக்கவும். ஆறியதும் சமோசா ஷீட்டில் வைத்து முக்கோணமாக மடித்து ஒட்டவும். சூடான எண்ணெயில் மிதமான தீயில் பொன்னிறமாகப் பொரிக்கவும். குழந்தைகள் விரும்பி சாப்பிடும் வித்தியாசமான சமோசா இது.
5. சீஸ்–மக்காச்சோளம் சமோசா
தேவையான பொருட்கள்:
சமோசா ஷீட் – 10
மக்காச்சோளம் – 1 கப்
மொஸரெல்லா சீஸ் – ¾ கப்
குடைமிளகாய் – ¼ கப்
மிளகுத்தூள் – ½ டீஸ்பூன்
சில்லி ஃப்ளேக்ஸ் – ½ டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
மக்காச்சோளம், குடைமிளகாய், மிளகுத்தூள், சில்லி ஃப்ளேக்ஸ், உப்பு ஆகியவற்றை ஒன்றாகக் கலக்கவும். சமோசா ஷீட்டில் சிறிதளவு பூரணத்தை வைத்து மேலே சீஸ் தூவவும். முக்கோணமாக மடித்து ஓரங்களை நன்றாக ஒட்டவும். எண்ணெய் சூடானதும் மிதமான தீயில் சமோசாக்களைப் பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும். சூடாக இருக்கும்போதே பரிமாறினால் உருகிய சீஸின் சுவை அசத்தும்.
வழக்கமான உருளைக்கிழங்கு சமோசாவுக்குப் பதிலாக, வீட்டில் உள்ள எளிய பொருட்களை வைத்து டீ டைமிற்கு மொறுமொறுப்பான 5 புதுமையான சமோசாக்களை உடனடியாகச் செய்து குடும்பத்தினரை அசத்தலாம்.