தீபாவளி பலகாரங்களை நீண்ட நாட்கள் பாதுகாக்க இந்த 7 வழிகள் உதவும்!

முறுக்கு, லட்டு, மைசூர்பாக் போன்றவற்றைச் சுவை குறையாமல் சேமிக்க வேண்டிய முறைகள்.
தீபாவளி பலகாரங்கள்
தீபாவளி பலகாரங்கள்Gemini image
சேலம் சுபா

சேலம் சுபா எனும் பெயரில் பல வருடங்களாக முன்னணி பத்திரிக்கைகள் நாளிதழ்களில் கட்டுரைகள் , கதைகள், நேர்காணல்கள் எழுதி வருகிறேன்.15 வயதில் துவங்கிய எழுத்து பயணத்தில் தற்போது பாரம்பரியம் மிக்க கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக உங்களிடம் எனது படைப்புகள் இணைவதில் பெரு மகிழ்ச்சி. வாழ்வியல், தன்னம்பிக்கை, ஆன்மீகக் கட்டுரைகளில் ஆர்வம். "உறவுச்சங்கிலி" எனும் சிறுகதைத் தொகுப்பும் வெளிவந்துள்ளது. எழுத்து என்பது வரம். அது படிப்பவர்களுக்கு பயனுள்ள வகையில் அமையவேண்டும் என்பதை கருத்தில் வைத்து எழுதுகிறேன். நிச்சயம் நீங்களும் விரும்புவீர்கள். ஆதரவு அளிக்கும் கல்கிக்கு நன்றி. தொடர்ந்து பயணிப்போம்.

Updated on: 

தீபாவளி நெருங்கி விட்டது. தீபாவளி என்றாலே புத்தாடைகள் பட்டாசுகளுடன் விதவிதமான இனிப்புகளும் காரமும் தான் நினைவுக்கு வரும். சிலர் மெனக்கெட்டு வீடுகளில் செய்வார்கள். பலர் தற்போது நோகாமல் கடைகளில் வாங்குகின்றனர். வீடுகளில் செய்யப்படும் பலகாரங்கள் தரத்தில் உயர்ந்து பல நாட்கள் கெடாமல் இருக்கும். கடைகளில் வாங்குவது அப்படி அல்ல. பல நாட்களுக்கு முன்பே தயாரிப்பதால் விரைவில் கெட்டு விடும் வாய்ப்பு அதிகம். காலாவதி தேதி வைத்தே கடைப் பலகாரங்களை பயன்படுத்த வேண்டும் என்பது முக்கியம்.

பொதுவாக வீட்டில் செய்யும் தீபாவளி பலகாரங்கள் கெடாமல் எத்தனை நாட்கள் வைக்கலாம் எனும் சந்தேகம் நிறைய பேருக்கு உள்ளது. அதற்கான விளக்கம் இங்கு.

வீட்டில் நமது கைப்பக்குவத்துடன் கவனமாக செய்யப்படும் முறுக்கு, அதிரசம், லட்டு, மைசூர்பாக் போன்ற பலகாரங்களைச் சரியான முறையில் சேமித்தால், அவற்றின் சுவையையும் தரத்தையும் சில நாட்கள் முதல் சில வாரங்கள் வரை கூட பாதுகாக்கலாம். ஆனால் பலகாரத்தின் வகை, அதில் பயன்படுத்தும் உணவுப் பொருட்கள், ஈரப்பதம் மற்றும் சேமிக்கும் முறை ஆகியவற்றைப் பொறுத்து அவற்றின் கெடாமல் இருக்கும் காலம் மாறுபடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வீட்டில் தயாரித்த பலகாரங்களை அறை வெப்பநிலையில், சுத்தமான மற்றும் காற்றுப்புகாத டப்பாவில் வைக்கும்போது பின்பற்றக்கூடிய தோராயமான கால அளவுகள். செய்முறை மற்றும் காலநிலையைப் பொறுத்து இவை மாறலாம். சில பலகாரங்கள் பற்றிய விளக்கம் இதோ.

ஈரப்பதம் புகாமல் வைத்தால் முறுக்கு 2–3 வாரங்கள் வரையும், நன்றாக ஆறிய பிறகு டப்பாவில் வைக்கும் தட்டை வகைகள் 1–2 வாரங்களுக்கும், எண்ணெய் வாடை வராத காரச் சீடை

1–2 வாரங்களும், காற்றுப்புகாத டப்பாவில் சேமிக்கும் மிக்சர் வகைகள்

1–2 வாரங்கள் வரையும், ஈரப்பதம் மற்றும் வெல்லத்தின் அளவைப் பொறுத்து அதிரசம் 3 லிருந்து 7 நாட்களும், நெய், பால் போன்ற பொருட்கள் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதைப் பொறுத்து லட்டு வகைகள் 2–7 நாட்கள் வரையிலும், ஈரப்பதமில்லாமல் சேமிக்கும் மைசூர்பாக் 5–10 நாட்களும், குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கும் தேங்காய் பர்ஃபி

1–2 நாட்களும், கவனமாக சேமிக்கும் போது பால் பவுடர் பர்ஃபி 2–4 நாட்களும், விரைவில் கெடும் தேங்காய் சேர்த்த லட்டு 1–2 நாட்களும் பயன்படுத்தலாம். இவை உறுதியான பாதுகாப்புக் காலங்கள் அல்ல என்பதையும் கவனிக்க வேண்டும். குறிப்பாக பால், தேங்காய், ஈரமான பாகு போன்றவை சேர்க்கப்பட்ட பலகாரங்கள் விரைவில் கெடக்கூடும் என்பதால் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

பலகாரங்கள் நீண்ட நாட்கள் கெடாமல் இருக்க இந்த 7 வழிகளை கடைபிடிக்கலாம்..

1. நன்றாக ஆறிய பிறகு டப்பாவில் வைப்பது மிக முக்கியமானது.

சூடாக இருக்கும்போதே மூடினால் நீராவி உருவாகி அதிகரிக்கும் ஈரப்பதத்தால் பலகாரங்கள் சீக்கிரம் மென்மையாகி, பூஞ்சை வளர வாய்ப்புள்ளது.

2. பலகாரங்களை சுத்தமான, முற்றிலும் உலர்ந்த காற்றுப்புகாத டப்பாவில் வைக்கவும். மேலும் ஒவ்வொரு முறையும் பலகாரத்தை எடுத்த பிறகு மூடியை இறுக்கமாக மூடுவது முக்கியம்.

தீபாவளி பலகாரங்கள்
தீபாவளி பலகாரங்கள்Gemini image

3. பலகாரங்களை எடுக்க ஈரமான கைகளைப் பயன்படுத்துவது தவிர்க்கவும். உலர்ந்த கரண்டி அல்லது இடுக்கியைப் பயன்படுத்துவதே நல்லது.

4. இனிப்பு, காரம் இரண்டையும் தனித்தனியாக வைக்க வேண்டும். ஏனெனில் காரப் பலகாரங்களின் வாசனை இனிப்புகளில் கலக்காமல் இருக்கும். அதேபோல முறுக்கு போன்றவை மொறுமொறுப்பாக இருக்கும்.

5. சமையலறையில் அடுப்புக்கு அருகில் வைக்க வேண்டாம். நேரடி சூரிய ஒளியும் தவிர்க்கப்பட வேண்டும்.

6. பால் மற்றும் தேங்காய் சேர்த்த பலகாரங்களை மிகவும் பாதுகாப்பாக வைக்க வேண்டும். செய்முறைக்கு ஏற்றவாறு குளிர்சாதனப் பெட்டியில் வைத்துப் பாதுகாக்கலாம். ஆனால்

குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதால் எல்லா பலகாரங்களும் ஒரே அளவு நாட்கள் பாதுகாப்பாக இருக்கும் என்று கருதக்கூடாது.

7. சிலர் ஒரே டப்பாவில் அதிகமாக அடைப்பார்கள். இது மிகவும் தவறு.

பலகாரங்கள் உடையாமல், ஈரப்பதம் சேராமல் இருக்க உதவும் வகையில் சிறிய டப்பாக்களில் பிரித்து அடுக்கி வைக்கவும்.

குளிர்சாதனப் பெட்டியில் வைத்தால் பலகாரங்கள் கெடுவது நாளாகுமா?

இல்லை. இது பலகாரத்தின் வகையைப் பொறுத்தது. முறுக்கு, தட்டை, பொதுவாக அறை வெப்பநிலையிலேயே வைக்கலாம். குளிர்சாதனப் பெட்டியிலிருந்து வெளியே எடுக்கும்போது ஈரப்பதம் படிந்து மொறுமொறுப்பு குறையலாம். அதே நேரம் பால் சேர்த்த இனிப்புகளை விரைவாகக் குளிர்சாதனப் பெட்டியில் வைப்பதுடன் 3–4 நாட்களுக்குள் பயன்படுத்துவது நல்லது. தயாரிப்பு முறையைப் பொறுத்து காலம் மாறலாம்.

இதையும் படியுங்கள்:
தீபாவளிக்கு மூன்றே பொருட்கள்... வாயில் கரையும் சுவையில் பாசிப்பயறு லட்டு!
தீபாவளி பலகாரங்கள்

தேங்காய் இனிப்புகளையும் விரைவில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து, சில நாட்களுக்குள் பயன்படுத்தவும்.

நெய் அதிகம் உள்ள இனிப்புகள் உடனடியாகக் கெட்டுப் போகாவிட்டாலும், வெப்பம் மற்றும் காற்றினால் சுவை, மணம் மாறலாம்.

பலகாரம் கெட்டுப்போனதைக் கண்டறியும் அறிகுறிகள்

மேற்பரப்பில் வெள்ளை, பச்சை அல்லது கருப்பு நிறப் பூஞ்சை காணப்படுதல்.

வழக்கத்திற்கு மாறான புளிப்பு அல்லது கெட்ட நாற்றம். ஒட்டும் தன்மை அல்லது எதிர்பாராத ஈரப்பதம். எண்ணெயில் பழைய வாடை அல்லது கசப்பான சுவை ஏற்படுதல்.

சிலர் பூஞ்சை தெரிந்தால் அந்தப் பகுதியை மட்டும் அகற்றிவிட்டு மீதியைச் சாப்பிடுவார்கள் . இது முற்றிலும் தவறு. சந்தேகம் இருந்தால் முழுவதையும் தூக்கி எறிவதே பாதுகாப்பானது. வாசனையும் தோற்றமும் இயல்பாக இருப்பது மட்டுமே உணவு பாதுகாப்பானது என்பதற்கான உத்தரவாதமல்ல என்பதை அறிந்து கொள்வது அவசியம்.

இதையும் படியுங்கள்:
பாட்டி சொன்ன ரகசியங்கள்... இனி முறுக்கு அதிரசம் கெடாமல் இருக்கும்!
தீபாவளி பலகாரங்கள்

இறுதியாக காரப் பலகாரங்களை விட பால், தேங்காய் மற்றும் ஈரப்பதம் அதிகம் உள்ள இனிப்புகளுக்கு அதிக கவனம் தேவை. நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய முக்கிய விஷயமாகும். மேலும் தீபாவளி பலகாரங்களை நீண்ட நாட்கள் வைத்திருக்க வேண்டுமென்றால், அவற்றைச் சிறிய அளவுகளில் தயாரித்து, தயாரித்த தேதியைக் குறித்து வைத்து, சரியான முறையில் சேமிப்பதே சிறந்தது.

உங்கள் வீட்டுத் தீபாவளிப் பலகாரங்கள் சுவை மற்றும் மொறுமொறுப்பு குறையாமல் பல நாட்கள் பாதுகாக்க இந்த எளிய வழிகள் கைகொடுக்கும்.

logo
Kalki Online
kalkionline.com