
ஆந்திரா என்றாலே காரமான உணவுகளுக்கு பெயர் போனது. அங்கு செய்யப்படும் ஒவ்வொரு உணவு வகையிலும் காரத்தின் சுவை தூக்கலாக இருக்கும். அதிலும் குறிப்பாக, பச்சை மிளகாயை வைத்து செய்யப்படும் சட்னி ஆந்திராவில் மிகவும் பிரபலம். இட்லி, தோசை, சாதம் என எல்லாவற்றுக்கும் தொட்டுக்கொள்ள இந்த சட்னி அட்டகாசமான காம்பினேஷனாக இருக்கும். வழக்கமான சட்னியை விட வித்தியாசமான சுவையில், காரசாரமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்களுக்கு இந்த ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி ஒரு வரப்பிரசாதம்.
தேவையான பொருட்கள்:
பச்சை மிளகாய் - 150 கிராம்
பூண்டு - 10 பல்
சீரகம் - 1 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
ஆப்பிள் சைடர் வினிகர் - சிறிதளவு
தேங்காய் எண்ணெய் - 2 டீஸ்பூன்
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை:
முதலில் பச்சை மிளகாயை நன்றாக கழுவி, லேசாக கீறி வைத்துக் கொள்ளவும். இப்படி செய்வதால் மிளகாய் எண்ணெயில் பொரிக்கும் போது வெடிக்காது.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கீறி வைத்துள்ள பச்சை மிளகாயை பொன்னிறமாக வரும் வரை வதக்கவும். மிளகாயின் நிறம் லேசாக மாறத் தொடங்கியதும், பூண்டு, மஞ்சள் தூள் மற்றும் சீரகம் சேர்த்து வதக்கவும். பூண்டின் பச்சை வாசனை போகும் வரை வதக்க வேண்டும்.
வதக்கிய பொருட்களை ஒரு பாத்திரத்தில் மாற்றி ஆற விடவும். ஆறிய பிறகு, மிக்ஸி ஜாரில் போட்டு நைஸாக அரைக்கவும்.
அரைத்த விழுதில் உப்பு மற்றும் ஆப்பிள் சைடர் வினிகர் சேர்த்து மீண்டும் ஒருமுறை லேசாக அரைக்கவும். வினிகர் சேர்ப்பதால் சட்னி கெட்டுப்போகாமல் நீண்ட நாட்கள் இருக்கும். இது விருப்பமிருந்தால் மட்டும் சேர்த்தால் போதும்.
இறுதியாக, கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும்.
அவ்வளவுதான், சுவையான, காரசாரமான ஆந்திர ஸ்டைல் பச்சை மிளகாய் சட்னி தயார்!
இந்த சட்னியை இட்லி, தோசை, சாதம், சப்பாத்தி போன்ற உணவுகளுடன் பரிமாறலாம். குறிப்பாக, தயிர் சாதத்துடன் இந்த சட்னியை தொட்டு சாப்பிட்டால் சுவை கூடுதலாக இருக்கும்.