

குழந்தைகள் என்றாலே ஜாம் விரும்பிச் சாப்பிடுவார்கள். பிரட், சப்பாத்தி, ஏன் தோசைக்கு கூட ஜாம் தொட்டுச் சாப்பிடும் சுட்டிகள் உண்டு. ஆனால் கடைகளில் விற்கும் ஜாம் பாதுகாப்பானதா, அதைத் தினமும் கொடுப்பது ஆரோக்கியமானதா என்ற தயக்கம் பல அம்மாக்களுக்கு இருக்கும்.
அந்தக் கவலையை விடுங்கள். நம் வீட்டிலேயே, நம் ஊர் மசாலாக்களின் மணத்துடன், எந்தவித கலப்படமும் இல்லாத அருமையான "இந்தியன் ஸ்டைல் ஆப்பிள் ஜாம்" எப்படிச் செய்வது என்று பார்ப்போம்.
தேவையான பொருட்கள்:
நன்கு பழுத்த ஆப்பிள் - 3
சர்க்கரை - 1 கப்
எலுமிச்சை சாறு - 1 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய்த் தூள் - 1/2 டீஸ்பூன்
பட்டைத் தூள் - 1/4 டீஸ்பூன்
தண்ணீர் - 1/4 கப்
உப்பு - ஒரு சிட்டிகை
செய்முறை!
முதலில் ஆப்பிள்களைச் சுத்தமாக நீரில் கழுவி, தோலை நீக்கிவிடவும். பின் ஆப்பிளின் நடுவில் உள்ள விதைகளை நீக்கிவிட்டு, ஒரு கேரட் துருவியால் ஆப்பிளை நன்றாகத் துருவிக்கொள்ளுங்கள்.
சிறு துண்டுகளாக வெட்டுவதை விட, துருவிச் செய்வதால் ஜாம் சீக்கிரம் வெந்து, நல்ல பதத்திற்கு வரும். ஆப்பிள் துருவியவுடன் காற்றில் பட்டு கருத்துவிடும் என்பதால், இதைச் செய்த உடனே அடுப்பைப் பற்றவைத்து அடுத்த கட்டத்திற்குச் சென்றுவிடுவது நல்லது.
அடுத்ததாக, அடுப்பில் ஒரு அடிகனமான பாத்திரம் அல்லது நான்-ஸ்டிக் பேன் வைத்து, துருவிய ஆப்பிள் களைச் சேர்க்கவும். அதில் கால் கப் தண்ணீர் ஊற்றி மிதமான தீயில் சில நிமிடங்கள் வேகவிடவும்.
ஆப்பிள் முக்கால் பதம் வெந்ததும், எடுத்து வைத்துள்ள சர்க்கரை மற்றும் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாகக் கிளறவும். சர்க்கரை உருகிப் பாகு போல மாறி ஆப்பிளோடு சேர்ந்து கொதிக்கத் தொடங்கும். அடிப்பிடித்துவிடாமல் இருக்க, இந்த நேரத்தில் அடுப்பை மிதமான தீயிலேயே வைத்திருப்பது அவசியம்.
சுமார் 15 முதல் 20 நிமிடங்கள் கழித்து, கலவை கெட்டியாகி, ஜாம் பதத்திற்கு வரத்தொடங்கும். இதுதான் நாம் இந்தியன் டச் கொடுக்க வேண்டிய நேரம்.
இந்த ஜாமிற்கு ஒரு அலாதியான சுவையையும் வாசனையையும் கொடுக்க, சிறிதளவு பட்டைத் தூள் மற்றும் ஏலக்காய்த் தூள் சேர்த்துக் கிளறுங்கள். இது வழக்கமான மேற்கத்திய ஜாம்களில் கிடைக்காத ஒரு அபாரமான சுவையைத் தரும்.
இறுதியாக, எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாகக் கலந்து அடுப்பை அணைத்துவிடுங்கள். எலுமிச்சை சாறு சர்க்கரை மீண்டும் உறைந்து போகாமல் தடுத்து, ஜாமிற்கு லேசான புளிப்புச் சுவையைக் கொடுக்கும்.
ஜாம் ஆறியதும் சற்று கெட்டியாகும் என்பதால், சரியான பதம் வந்தவுடனேயே அடுப்பிலிருந்து இறக்கிவிடுங்கள். நன்றாக ஆறிய பிறகு, சுத்தமான, ஈரமில்லாத கண்ணாடி பாட்டிலில் அடைத்து ஃப்ரிட்ஜில் வைத்தால், சில மாதங்கள் வரை கெட்டுப்போகாது.
இனி கடைகளில் காசு கொடுத்து வாங்காமல், உங்கள் கையாலேயே அன்போடு செய்த இந்தச் சுவையான ஆப்பிள் ஜாமை உங்கள் குழந்தைகளுக்குக் கொடுத்து மகிழுங்கள்.