
ஆப்பிள்தோலை சீவிவிட்டு சாப்பிடும்போது தோலை தூக்கி எறியவேண்டாம். அதை துவையல், குருமா, சட்னி அயிட்டங்களோடு சேர்த்து அரைத்து விடுங்கள். சத்தும் வீணாகாது, சுவையும் அருமையாக இருக்கும்.
குக்கரைத் திறந்து சாதத்தை எடுக்கும்போது சில நேரங்களில் தட்டின் மீது நீர் தேங்கியிருக்கும். உடனே குக்கரை மூடி வெயிட் போடாமல் ஐந்து நிமிடங்கள் எரியவிடுங்கள். இதனால் அதிகப் படியான தண்ணீர் ஆவியாகி சாதம் சரியாக வெந்துவிடும்.
வடைமாவு நீர்த்துப்போய்விட்டால், ஒரு பிடி அவலை மாவுடன் கலந்து ஐந்து நிமிடங்கள் வைத்திருங்கள். பிறகு வடையாக தட்டி எடுங்கள். அபாரமான ருசியில் வடை மணக்கும்.
புளிப்பில்லாத தயிரில் துருவிய கேரட், கொத்த மல்லித்தழை, உப்பு சேர்த்து, அதன்மேல் கார்ன்ஃ பிளேக்ஸை பரவலாகப் போட்டுச் சாப்பிட்டுப்பாருங்கள். கரகரப்புடன் வித்தியாசமாக இருக்கும்.
நாப்தலின் உருண்டைகளை பினாயில் பாட்டிலுக்குள் போட்டு வைத்துவிடுங்கள். இதை பயன்படுத்தி வீட்டையும், குளியலறையும் சுத்தம் செய்யும்போது, பூச்சிகள் அண்டாமல் இருக்கும்.
கோதுமைமாவை வெறும் கடாயில் ஒன்றிரண்டு நிமிடங்கள் வறுத்து, பிறகு தண்ணீர் சேர்த்து கரைத்து வார்த்தால் கோதுமை தோசை நன்றாக வரும்.
காய்கறிகள் கலர் மாறாமல் புலாவ் செய்ய அரிசியை உதிர் உதிராக வேகவைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு கறிகாய், மசாலா வகைகளைப் போட்டு இரண்டு நிமிடங்கள் வதக்கவும். அதில் உதிர்த்த சாதத்தைக் கலந்து குக்கரில் வெயிட் போடாமல் வைக்கவும். ஐந்து நிமிடங்கள் கழித்து எடுத்தால் அருமையான புலாவ் தயார்.
ஏலக்காய் சரியாக அரைபடவில்லையா? ஒரு துளி நெய்யில், இரண்டு நிமிடம் நிறம் மாறும்வரை வறுத்து, பிறகு மிக்ஸியில் பொடித்தால் நைஸாக பொடிந்துவிடும்.
காலையில் வாங்கும் பூக்கள் இரவுக்குள் வாடி விடுகிறதே என்ற கவலையா? ஸ்பாஞ்சை தண்ணீரில் நனைத்து, அதன் மேல் பூக்களை வைத்து, ஈரத்துணியால் மூடிவிடுங்கள். பூக்கள் வைத்தபடி வாடாமல் இருக்கும்.
துணிகளை அயர்ன் செய்யும்போது தண்ணீர் தெளிப்பது நம் வழக்கம். அந்தத் தண்ணீரில் சிறிது பன்னீர் அல்லது யூடிகோலனை கலந்துவிடுங்கள். சென்ட் போடாமலேயே ஆடைகள் மணக்கும்.
அடை, தோசை, வடைமாவில் வெங்காயம், கீரை, வாழைப்பூவை நேரடியாக சேர்க்காதீர்கள். சிறிது எண்ணெயில் நன்றாக வதக்கிய பிறகு சேர்த்தால், அவை நறுக்கென்று வாயில் அகப்படாமல், நன்கு வெந்து சுவையாக இருக்கும்.
பாத்திரங்களைத் தேய்த்துக் கழுவிவைக்கும் பெரிய கம்பி வலைக்கூடையில் சிறிய ஸ்பூன்களை வைக்க ஓட்டைகள் இல்லாமல் இருக்கும். இதற்கு ஒரு சிறிய டீஸ்பூன் ஸ்டாண்டை, அந்த வலைக்கூடையின் பக்கவாட்டில் கட்டி விடுங்கள். டீஸ்பூன் கீழே விழாமல் இருக்கும்.